செங்கம் அருகே நேற்று இரவு நடைபெற்ற பயங்கர விபத்தில் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தனர். கடந்த 15ந் தேதிதான் இப்பகுதியில் 7 பேர் விபத்தில் இறந்த நிலையில் மீண்டும் 7 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் வடமாநிலம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் ஆயுதபூஜை விடுமுறையை யொட்டி டாடா சுமோ காரில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஓசூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். செங்கத்தை தாண்டி கருமாங்குளம் பகுதியில் நேற்று இரவு 9-15 மணிக்கு சென்று கொண்டிருந்த போது அந்த காரும், பெங்களுரிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
மோதிய வேகத்தில் கார், பஸ்சின் அடிப்பகுதியில் சென்று சொருகியது. இதில் காரில் இருந்த 5 பேர் அதே இடத்தில் பலியானார்கள். தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் காரில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேர் இறந்தனர். 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இறந்தவர்கள் விவரம்
1)நாராயன்சேட்தி, 2)குஞ்சாராய், 3)நிக்லாஸ், 4)தாலு 5)பீமல்தீர்கி இவர்கள் அசாம் மாநிலம் சோலாபூர் பகுதியை சேர்ந்தவர்கள் 6)காமராஜ், ஊத்தங்கரை மாரப்பட்டி 7)புனித்குமார், தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்.
காரிலிருந்து உடல்கள் வெளியே எடுக்கப்பட்டதும், ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பஸ்சில் சிக்கியிருந்த கார் வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியை கலெக்டர் பா.முருகேஷ், எஸ்.பி. கார்த்திகேயன், கிரி எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.
கடந்த 15ந் தேதிதான் இப்பகுதியில் லாரியும், காரும் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இறந்தனர். இந்த இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலேயே நேற்று கோர விபத்து நடந்திருக்கிறது.
அந்தனூர் பைபாஸ் சாலையில் சாலையை இரண்டாக பிரிக்கும் சென்டர் மீடியன்கள் சரிவர அமைக்கப்படாததும், சில இடங்களில் எஸ் டைப்பில் சாலை வளைவாக இருப்பதும், பல இடங்கள் இருட்டாகவும், சாலைகள் அகலமாக இல்லாததும் விபத்து நடைபெறுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் ஏன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என விபத்து நடந்த பகுதியை பார்வையிட வந்த எம்.எல்.ஏ கிரியிடம் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.