திருவண்ணாமலையில் குடிப்பதை தட்டிக் கேட்ட தொழிலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே பா.ம.க கவுன்சிலரை வெட்டியதும் தெரிய வந்தது.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை பைபாஸில் உள்ள எம்சாண்ட் மணல் விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் செல்வகுமார் (வயது 35). தந்தை பெயர் ஆரிமுத்து. கலசபாக்கத்தை அடுத்தபத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர். செல்வகுமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

அந்த நிறுவனத்தில் காவலாளி வேலையும் செய்து வந்த செல்வகுமார் அந்த நிறுவனத்தின் வெளியில் உள்ள ஷெட்டில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவு அவர் முகத்தில் சரமாரியாக வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வகுமாரை யார் கொலை செய்தது என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து கொலை நடந்த பகுதியின் எதிரில் ஒரு கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அதில் 2 பேர் செல்வகுமாரை கொலை செய்து விட்டு சென்று விடுவதும், பிறகு அவர் உயிருக்கு போராடிய காட்சிகளும் பதிவாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கிளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் செல்வகுமார் பணிபுரியும் நிறுவனத்தின் அருகில் மது குடித்துக் கொண்டிருந்ததை செல்வகுமார் தட்டிக் கேட்டதால் விரோதம் கொண்டு அவரை கொலை செய்ததும், ஏற்கனவே இவர்கள் கடந்த 25ந் தேதி அதே அவலூர்பேட்டை பைபாஸில் சிறுவனிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட இனாம்காரியந்தலைச் சேர்ந்த பாமக ஒன்றிய கவுன்சிலர் முருகன் என்பவரை கத்தியால் வெட்டியதும் தெரிய வந்தது.
பைபாஸில் போலீஸ் ரோந்து வாகனம் இருந்தும் எந்த வித பயனும் இல்லை என்றும், இந்த வாகனம் ஒரே இடத்தில் நின்று காட்சி பொருளாக மட்டும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு சொல்லும் பொதுமக்கள், இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பைபாஸ் சாலைகளில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.