13 ஜீவசமாதிகள் இடித்து தள்ளப்பட்டதால் பரபரப்பு
காட்டு சிவா சித்தர் சீடர்கள் கண்ணீர்
திருவண்ணாமலையில் புகழ் பெற்ற காட்டு சிவா சித்தர் சீடர்களின் 13 ஜீவசமாதிகள் இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் பார்க்கிங்காக இந்த இடம் சமப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை கிரிவலப்பாதை மலையை ஒட்டியுள்ள காட்டில் காட்டு சிவா என்ற சித்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு தவம் செய்து வந்தார். பல்வேறு இடங்களில் தோன்றி மறையும் ஆற்றல் பெற்றவர் என்றும், அவர் விரும்புகிறவர்களின் கண்களுக்கு மட்டும் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. அவர் தவம் செய்த குகையும், அவரது பெயரில் ஒரு குளமும் காட்டுப் பகுதியில் உள்ளது.
1957ம் ஆண்டு காட்டு சிவாவிற்கு அவரது பக்தர் ஒருவர் ஆணாய்பிறந்தான் ஊராட்சி செங்கம் செல்லும் மெயின் ரோட்டில் 6 ஏக்கர் 81 சென்ட் இடத்தை தானமாக தந்ததாக சொல்லப்படுகிறது. காட்டு சிவா முக்தி அடைந்த பிறகு அவரது சீடர்களின் ஜீவ சமாதி அந்த இடத்தல் அமைக்கப்பட்டது.
13 ஜீவசமாதிகள்
1975ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை வேலூர் கிருஷ்ணசாமி, அவரது மனைவி ராஜலட்சுமி, கோவிந்தசாமி, கிருஷ்ணானந்தா,சாந்தம்மாள், மணி, தனக்கோட்டி, கரடிபாஸ்கர், மற்றொரு கோவிந்தசாமி, சுரேஷ், பழனி, நித்யானந்தர், சிவானந்தா ஆகிய 13 பேர்களின் சமாதிகள் அந்த இடத்தில் அமைக்கப்பட்டன. 5 அடிக்கு 5 அடி பள்ளம் தோண்டி அதில் செங்கற்கள் வைத்து தொட்டி போல் கட்டி ஜீவசமாதி அடையும் நபர்களை உட்கார வைத்து மூடி விடும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
அந்த இடத்தில் அவரது சீடர்கள் அறக்கட்டளையை ஏற்படுத்தி காட்டு சிவா சித்த வித்த அப்பியாச ஆலயம் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் காட்டு சிவாவின் ஜென்ம நட்சத்திரம் தினமான கிருத்திகை அன்று பூஜைகள், அன்னதானம் போன்றவற்றை செய்து வந்தனர்.
வற்றாத கிணறும் மூடல்
இந்நிலையில் நேற்று இரவு அந்த இடத்தில் இருந்த சமாதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மேலும் வற்றாத கிணறு ஒன்றும் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி கார் நிறுத்தும் இடத்திற்காக அந்த இடம் வருவாய்த்துறை மூலம் சமப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டதும் அங்கு வந்த காட்டு சிவா சித்த வித்த அப்பியாச ஆலய நிர்வாகிகள் சமாதி இருந்த சுவடு தெரியாமல் இடம் சமப்படுத்தப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
இது குறித்து அந்த ஆலய நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த இடத்தில் எந்த பணியும் செய்யக் கூடாது என வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து கூறினர். பிறகு எங்களுக்கு தெரியாமல் இடித்து சமப்படுத்தியுள்ளனர். ஒரே நாளில் கிணற்றையும் மூடி விட்டனர். 13 ஜீவ சமாதிகளும் எங்களுக்கு 13 கடவுள் மாதிரி. அதை இடித்து தள்ளியது வேதனையாக உள்ளது. இந்த மாதிரி சமாதிகளை பார்க்க முடியாது. 6 ஏக்கர் 81 சென்ட் இடத்தையும் ஜீவசமாதி வைப்பதற்காகத்தான் பராமரித்து வந்தோம். எங்களுக்கு எந்த சொத்தும் வேண்டாம். இந்த ஜீவசமாதி இருக்கும் இடத்தில் தியானம் செய்வதனால் பலரது பிரச்சனைகள் தீர்ந்துள்ளது. எனவே மீண்டும் சமாதிகளை புனரமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
இரவோடு இரவாக 13 ஜீவசமாதிகள் இடித்து தள்ளி கிணற்றையும் மூடிய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.