புனரமைக்கப்பட்ட அய்யங்குளம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
நந்தி சிலையை வைக்க பொதுமக்கள் கோரிக்கை.
6450 லோடு மண் கொட்டி 14 அடி ஆழம் வரை சேறு அகற்றப்பட்டுள்ளதாக எ.வ.வேலு தகவல். தெப்பல் உற்சவத்திற்கான பணிகள் துவக்கம்.
திருவண்ணாமலையில் தூய்மை அருணை சார்பில் அய்யங்குளம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பெருமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எ.வ.வேலு இன்று ஒப்படைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி அய்யங்குளத்தின் அருகில் நடைபெற்றது. சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வணிகர் சங்கம் மற்றும் தூய்மை அருணை அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
தூய்மை அருணை சார்பில் பல்வேறு இடங்களும் புணரமைக்கப்பட்டு தூய்மை பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுவது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மை அருணை சார்பில் அய்யங்குளத்தை 25.06.2023 அன்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்கு பயன்பாட்டுக்கு இன்றைய தினம் கொண்டு வந்துள்ளது. அதேபோல் கிரிவலப்பாதையை சுற்றி அதிநவீன வசதிகளுடன் கழிவறை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து அதற்கான பணியும் மிக விரைவில் தொடங்கப்படும்.
சாமி என்னை விடவில்லை
குளத்தில் உள்ள சேறை வாரினால் மீண்டும் குளத்திலேயே ஒழுகி விடுகிறது. எனவே குளத்தில் பாதை அமைத்து அந்த வழியாக வண்டியில் மண் எடுத்து வந்து சேற்றில் மண் கொட்டி வாரினோம். இதற்காக அரசு அனுமதி பெற்று எடப்பாளையம் ஏரியில் இருந்து 6450 லோடு மண் எடுத்து வந்து கொட்டப்பட்டது. 14 அடி ஆழம் வரை சேர்களை வாரி இருக்கிறோம்.
இது மட்டும் இன்றி குளத்தில் உள்ள ஊற்றுகளை ரிஷிவந்தியம் ஆற்றில் இருந்து 1670 லோடு மணல் எடுத்து வந்து மூடினோம். கலைஞர் சொன்ன மாதிரி சாமி எனக்கு பிடிக்கிறதோ, இல்லையோ சாமி என்னை விடமாட்டேங்குது என்பது தான் உண்மை. தமிழ் இலக்கியம் மீது எனக்கு ஆர்வம் உண்டு. தமிழை வளர்த்தது பக்தி இலக்கியங்கள் தான். மகாபாரதம் கம்ப ராமாயணங்கள் பெண்களை அடிமைபடுத்தியிருந்தது.
பெண்களை பற்றி உயர்வாக சொன்னது சிலப்பதிகாரம்தான். கம்பராமாயணத்தை எழுதியது கம்பர்தான். வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதினார். இந்த குளத்தை சுற்றிலும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருள், ஒவ்வையாரின் பழமொழி, திருஅருட்பா ஆகியவை எழுதப்பட்டுள்ளது. வியாபாரிகள் கடைய மூடிட்டு விட்டு இரவு நேரத்தில் வரும்போது நடை பயிற்சி செல்லும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு குளத்தின் கதவுகளை மூடி விடுவோம். எப்போது வேண்டுமானாலும் வரலாம், எதையும் செய்யலாம் என்பதெல்லாம் இனிமேல் முடியாது.
முதலில் அதிமுகவினர்தான் கும்பிடு போடுவார்கள்
இந்த ஊரில் எனக்கு ஆகாதவர்கள் யாரும் இல்லை. எல்லோரும் என் நண்பர்கள். அரசியலில் கருத்து என்பது வேறு, வேண்டியவர்கள் என்பது வேறு. என்னை பார்த்து அதிகம் கும்பிடு போடுபவர்கள் அதிமுககாரர்கள் தான். எனக்கு யாரும் விரோதி இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த குளத்தை தூர்வார எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் அய்யங்குளம் தூர்வாரப்படும் என அறிவித்திருந்தேன். அதற்கு அனுமதி அளித்து நிறைவேற்றிட உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமண மகரிஷி 1896 ஆம் ஆண்டு குளித்த குளம் இது. ஆடி மாதம், சித்திரை மாதம், தை மாதங்களில் பொதுமக்கள் நீராடுகிற குளம். கார்த்திகை மாதம் பத்து நாள் அண்ணாமலையாருக்கு திருவிழா நடைபெற்ற போதிலும் போட்டில் சென்றால்தான் மனநிறைவு அடைகிறார் என்பதற்காக தெப்பல் உற்சவத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது. அய்யங்குளம், 3 ஏக்கர் பரப்பளவில், 360 அடி நீளமும், 360 அடி அகலமும், 32 அடி அழம் மற்றும் 32 படிக்கட்டுகளுடன் உள்ளது.
சாலை அமைத்தது, குளம் வெட்டியது யார்?
இந்த குளத்திற்கு அண்ணாமலையில் பெய்யும் மழை கந்தாஸ்ரமத்தில் அருவியாக வந்து சோமாவாரகுளம் நிரம்பி பிறகு பிரம்ம குளம் நிரம்பி சிவாஜி குளம் நிரம்பி தண்ணீர் வந்து சேருகிறது. அக்பர், அசோகர் சாலை அமைத்தனர், குளம் வெட்டியதாக சரித்திரத்தில் படித்திருக்கிறோம், அசோகர் மரம் வளர்த்ததாகவும் நானும் படித்திருக்கிறேன். ஆனால் அது உண்மை இல்லை.
மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர் காலத்திலும் சாலை வசதி இன்றி ஒத்தையடி பாதையாகத்தான் இருந்தது. இந்தியாவை துக்ளக் ஆண்ட போது தென்னகப் பகுதியை சூறையாடினார்கள். விஜயநகர சாம்ராஜ்யம் தென்னகப் பகுதியில் படையெடுத்து வந்து துக்ளக்கை விரட்டி அடித்து சிறு சிறு மன்னர்களை ஆட்சி செய்ய வைத்தது. அப்படி திருவண்ணாமலை பகுதியில் ஆட்சி செய்தவர்தான் சிவப்பு நாயக்கர் என்கிற சிற்றரசர்.
1535 லிருந்து 1583 இடைப்பட்ட காலத்தில் அவர் ராஜகோபத்தை கட்டியிருக்கிறார். அய்யங்குளத்தை சீரமைத்திருக்கிறார். ரோடு வசதி ஏற்படுத்தி இருக்கிறார். மரம் நட்டு இருக்கிறார். குளங்களை வெட்டியிருக்கிறார்.
இந்த பகுதிக்கு அக்பர், அசோகர் எங்கு வந்தனர்? சரித்திரத்தை எழுதியவர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தென்னகப் பகுதி அழிக்கப்பட்டு விட்டது. அய்யங்குளத்தை போன்று கிரிவலப் பாதையில் அறநிலையத் துறைக்கு சொந்தமான குளத்தையும் தூர்வாரும் பணியில் தூய்மை அருணை ஈடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அய்யங்குள புனரமைப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து 27ந் தேதி முதல் 29ந் தேதி வரை நடக்க உள்ள தெப்பல் உற்சவத்திற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளது.
அய்யங்குளம் சிறப்பாக புனரமைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் மற்றும் ஆன்மீகவாதிகள், அய்யங்குளம் நடுவில் உள்ள மண்டபம் சீரமைக்கப்பட்டு நந்தி சிலை வைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு சொன்னது போல் மண்டபத்தில் நந்தி சிலையை வைத்தால் மேலும் சிறப்பு பெறும் என தெரிவித்தனர்.