Homeஅரசியல்கடலிலும், வானத்திலுமா தொழிற்சாலையை கட்ட முடியும்?

கடலிலும், வானத்திலுமா தொழிற்சாலையை கட்ட முடியும்?

கடலிலும், வானத்திலுமா தொழிற்சாலையை கட்ட முடியும்?
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க கூடாது என்பதற்காகவே போராட்டம் நடத்தப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

கடலிலும், வானத்திலுமா தொழிற்சாலையை கட்ட முடியும்? இடத்தில் தான் கட்ட முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க கூடாது என்பதற்காகவே சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைந்துள்ளது. சிப்காட் விரிவாக்கத்திற்காக மூன்றாவது கட்டமாக 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மேல்மா கூட்டு ரோட்டில் கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆம் தேதி ஓட்டுரிமை, குடியுரிமை சம்பந்தமான ஆவணங்களை செய்யாறு சப்-கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டு உத்தரவின் படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இந்நிலையில் ஊத்தங்கரை தாலுக்கா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருள், தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவன், மணிப்புறம் கிராமத்தைச் சேர்ந்த சோழன், மேல்மா கிராமத்தைச் சேர்ந்த திருமால், நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில்  கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றன.

விவசாயிகளை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்யாவிட்டால் திருவண்ணாமலையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். அதே சமயம் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க நினைத்த திமுகவை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறை கண்டித்து நாளை திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்படம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

See also  என்னுடைய வாழ்க்கையை மாற்றியது திருவண்ணாமலை

22 விவசாயிகள் மீது 11 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களில் 6 கிராமங்களைச் சேர்ந்த 7 விவசாயிகளின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த ஏழு பேரையும் வெவ்வேறு சிறைகளில் அடைத்தும், விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை பாதுகாப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மூலம் சிறையில் அடைத்திருப்பதற்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக தமிழ்நாடு விவசாய சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிற நிலையில் திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மஹாலில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்ததில் உள்நோக்கம் ஏதும் கிடையாது. பொதுவாக ஒன்றுபட்ட வடாற்காடு மாவட்டத்திலிருந்து நமது திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்டபோது ஒரு ஆணி செய்கின்ற தொழிற்சாலை கூட நமது மாவட்டத்தில் இல்லை. முழுக்க முழுக்க விவசாயி நிறைந்த மாவட்டமாக இருந்தது. சிப்காட் ராணிப்பேட்டையிலும், தோல் தொழிற்சாலை ஆம்பூரில், மேல் விஷாரத்திலும் இருந்தது.

கடலிலும், வானத்திலுமா தொழிற்சாலையை கட்ட முடியும்?

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் முறையிட்டனர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார் பகுதியில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று கட்டங்களாக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது அப்போது அயல்நாட்டு தொழிற்சாலைகள் உள்பட 13 தொழிற்சாலைகள் வந்தன. செய்யார், வந்தவாசி, ஆரணி பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் பணியில் இருக்கின்றனர்

இரண்டாவது கட்டமாக 1860 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் முயற்சியினால் 55 தொழிற்சாலைகள் அந்த இடத்திற்கு வருகிறது. ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அயல்நாட்டு தொழிற்சாலைகள் உட்பட இன்னும் பல தொழிற்சாலைகள், இந்தியாவில் உள்ள பெரும் முதலாளிகளின் தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு மூன்றாவது கட்டமாக 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக பல இடங்களில் கருத்துக் கூட்டம் நடத்தப்பட்டது.

See also  அமைச்சர் வேலு தீபாவளி பரிசு-திமுகவினர் உற்சாகம்

9 ஊர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. 1881 விவசாயிகளின் நிலங்களை எடுக்கிறோம். ஆனால் 231 பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நிலம் கொடுத்து நிலம் வாங்காமலா உள்ளனர்? அரசாங்கத்தை பொருத்தவரை நிலத்தை கையகப்படுத்தும் போது இன்றைக்கு மார்க்கெட் ரேட் என்னவோ அதைவிட இரண்டரை மடங்கு விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஏன் தருகின்றனர்? மேற்கொண்டு நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டரை மடங்கு நஷ்ட ஈடு கொடுக்கிறது.

இதை வைத்து நிலமும் வாங்க முடியும், பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் அடைய முடியும். அரசாங்கத்திற்கு விவசாயிகளை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்பதுதான் நோக்கம். அதே நேரத்தில் தொழிற்சாலையை உருவாக்கினால் தான் படித்த பட்டதாரிகளுக்கு இளைஞர்களுக்கு வேலையில்லாத திட்டத்தை குறைப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகளை முதல்வர் ஈர்த்திருக்கிறார். அதற்கு நிலம் தேவைப்படுகிறது. தொழிற்சாலையை கடலிலா கட்ட முடியும்? வானத்தில் கட்ட முடியுமா? இடத்தில் தான் கட்ட முடியும்.

நம்முடைய மாவட்டத்தில் பட்டதாரிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்பது நம்முடைய கோரிக்கை. அதைத்தானே அரசாங்கம் நிறைவேற்றும்? ஆனால் சில பேர் மட்டும் போராட்டத்தை தூண்டுகின்றனர். அப்பகுதி மக்களை போராட்டத்திற்கு தூண்ட கிருஷ்ணகிரியிலிருந்து அருள் என்பவர் வருகிறார். இங்கு விவசாயிகள் இல்லையா? சட்டமன்ற உறுப்பினர், நாங்கள் எல்லாம் விவசாயிகள் இல்லையா? விவசாயிகள் பாதிக்கப்பட வேண்டும் என நினைப்போமா?

ஒரு பக்கம் விவசாய நிலம் தேவை. நமது மாவட்டத்தில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள் தானே? அதில் ஒரு குறிப்பிட்ட ஐந்து சதவீதம் கூடம் என சொல்ல முடியாது, குறிப்பிட்ட இடத்தை எடுத்தால் தானே பட்டதாரி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர முடியும்?

See also  கோயில் சுவற்றில் திமுக விளம்பரம்- பாஜக எதிர்ப்பால் அழிப்பு
பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டேன்

நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 9 கிராமங்களில் 4,000 பேர் சிப்காட்டில் வேலை செய்து வருகின்றனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள தேவன் என்பவருக்கு ஒரு சென்ட் இடம் கூட கிடையாது. இளைஞர்கள், பட்டதாரிகள் வேலைக்கு செல்லக்கூடாது என்ற அடிப்படையில் தான் போராட்டம் என்ற பெயரிலும் விவசாய நிலங்களை அபகரிக்கிறார்கள் என்றும் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் செய்யப்படுகிறது. அரசு செயல்படக்கூடாது என்ற அடிப்படையில் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அபகரிப்பது இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. 7 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டேன். அமைச்சருக்கு தெரியாதா? என நீங்கள் கேட்கலாம். கேரளா வைக்கத்தில் பெரியார் நினைவிடத்தை சீரமைப்பதற்காக ஆய்வு செய்ய சென்று விட்டு நேற்று தான் வந்தேன். வந்தவுடன் தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

இந்நிலையில் செய்யார் எம்எல்ஏ மூலமாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குண்டர் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். யாரோ ஒருவர் தூண்டுதல் பேரில்தான் போராட்டத்தில் ஈடுபட்டதாக மனுவில் தெரித்திருக்கின்றனர். இந்த மனுவை முதலமைச்சரை சந்தித்து அவரிடம் அளித்து கோரிக்கை வைப்போம். நல்ல தீர்வு ஏற்பட முதலமைச்சரின் நானும் வேண்டுகோள் விடுப்பேன்.

எடப்பாடி முதல்வராக இருந்தபோது சிப்காட் 3வது கட்ட விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என அரசாணை வெளியிட்டார். அவர் செய்யவில்லை நாங்கள் வந்து செய்கிறோம். அதனால் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறார்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இந்நிலையில் அருள் என்பரை தவிர மற்ற 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.


Link: http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!