லாட்ஜ் கட்டணம் 10மடங்கு உயர்வு-கலெக்டர் எச்சரிக்கை
லாட்ஜ் உரிமையாளர்களை நேரில் அழைத்து எச்சரிக்கை
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி தங்கும் விடுதி கட்டணங்கள் 10 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. இதையடுத்து லாட்ஜ் உரிமையாளர்களை கலெக்டர் நேரில் அழைத்து எச்சரித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் 17ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பரணிதீபம் மற்றும் மகாதீப திருவிழா நடைபெறவுள்ளது. இந்த வருடம் தீபத்திருவிழாவை காண வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
தங்கும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்து வெளியூர் பக்தர்கள் பரணி மற்றும் மகாதீபத்தை தரிசிப்பது வழக்கம். இது மட்டுமன்றி அரசு உயர் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு லாட்ஜ்களும் குறிப்பிட்ட அறைகளை ஒதுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
திருவண்ணாமலை நகரிலும், கோயில் அமைந்துள்ள பகுதிகளிலும், நகரை சுற்றிலும் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உள்ளன. சில வருடங்களாக மகாதீபத்தை தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பது போல் லாட்ஜ்களின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
இந்த வருடம் அது 10லிருந்து 15 மடங்கு வரை உயர்ந்திருப்பதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. மேலும் வெளியூர் பக்தர்களை குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களை குறிவைத்து ரூ.80ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதையடுத்து பக்தர்கள் தங்கும் விடுதி, ஹோட்டல், லாட்ஜ் உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பெரும்பாலான லாட்ஜ் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களுடன் ஓட்டல், லாட்ஜ்களில் தங்கும் கட்டணம் அதிக அளவில் தீபத்திருவிழாவிற்காக வசூலிக்கப்படுவதாக வரப்பெற்ற புகார் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர், தீபத் திருவிழாவை முன்னிட்டு சாதாரண நாட்களை விட அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தவிர்க்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் ஓட்டல்கள், லாட்ஜ்கள் சரியான கட்டண விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு நல்ல சேவை வழங்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் இராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.