போலி பாஸ் தயாரிக்க முடியாது-சேகர்பாபு கூறுகிறார்
அண்ணாமலையார் கோயிலில் காலை, மாலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தகவல்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு போலி அடையாள அட்டைகள் உருவாகாத வண்ணம் அடையாள அட்டைகள் நேர்த்தியாக தயார் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (16.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகின்ற நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டோம். கடந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள். இந்தாண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் தீபத் திருவிழாவிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றபோது மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை பேணி காப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், தற்காலிக பேருந்து நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர வசதிகள் குறித்தும் இன்றைக்கு கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ள இருக்கின்றோம்.
காலை-மாலைகளில் சிற்றுண்டி
இக்கோயிலில் முழு நேர அன்னதானத் திட்டத்தில் சாதாரண நாட்களில் 2,500 நபர்களும், விசேஷ நாட்களில் 3,500 க்கு மேற்பட்ட நபர்களும் பயன் அடைகிறார்கள். இங்கு வழங்கப்படும் அன்னதானம் சிறப்பாக இருந்தததாக வெளி மாநில பக்தர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் திருத்தணி கோயிலில் காலை மற்றும் மாலை நேரங்களில் சிற்றுண்டி வழங்கப்படுகின்றது.
அந்த திட்டத்தையும் இந்த திருக்கோயிலிலும் வெகு விரைவில் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம். அன்னதானம் வழங்குகின்ற திட்டங்கள் புதிதாக ஆறு திருக்கோயில்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு கூடுதலாக மூன்று திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்த உள்ளோம். அதனை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
பக்திப் பசியோடு வருபவர்கள் யாரும் வயிற்றுப் பசியோடு செல்லக்கூடாது என்பது முதலமைச்சரின் கொள்கையாகும். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருக்கோயில்களில் முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி அட்டை (விஐபி பாஸ்) என்பது எங்குமே இல்லை. முழுவதுமாக தடை செய்யப்பட்டிருக்கின்றது. திருக்கோயில்களின் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் மற்றும் பணியாளர்கள்தான் பாஸ்கள் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு என்ன நடைமுறை இருந்ததோ அதே நடைமுறை தான் இந்தாண்டும் பின்பற்றப்படும். திருவண்ணாமலை தனியார் விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையை மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விருந்தினரை முதலில் உபசரிக்க வேண்டும்.
உள்ளூர் மக்கள் எப்போது நினைத்தாலும் இறை தரிசனம் செய்யலாம். வந்தாரை வரவேற்கின்ற தமிழகம் விருந்தினரை தான் முதலில் உபசரிக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அயல் நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அதையும் கணக்கிட்டு அதற்கேற்றார் போல் உள்ளூர் மக்களுக்கும் உரிய முன்னுரிமை வழங்கப்படும்.
பரணி மற்றும் மகாதீபத்திற்கு அடையாள அட்டை உள்ளவர்களை கோபுரத்தின் வாசலில் இருந்து முழுமையாக பரிசோதித்த பின்னரே உள்ளே அனுப்பப்படுவார்கள். போலி அடையாள அட்டைகள் உருவாகாத வண்ணம் அடையாள அட்டைகள் நேர்த்தியாக தயார் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கலெக்டர் பா.முருகேஷ், எஸ்.பி, கி.கார்த்திகேயன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, அறங்காவலர் குழுத்தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர்கள் அர.சுதர்சன், சி.ஜோதி மற்றும் அலுவலர்கள் சென்றிருந்தனர்.