Homeசெய்திகள்ராஜகோபுர பகுதி-1916-ல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

ராஜகோபுர பகுதி-1916-ல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

ராஜகோபுர பகுதி- 1916-ல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு-
திரட்டப்பட்ட ஆதாரங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் பகுதி குறித்து 1962ம் ஆண்டே கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சம்மந்தமான ஆதாரங்களை இந்து அமைப்புகள் திரட்டி கோர்ட்டை நாடியுள்ள நிலையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி கோர்ட்டு தடையை உடைக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

ராஜகோபுர பகுதி-1916-ல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

திருவண்ணாமலை ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதியில் (பாத்திர கடைகள் இருந்த பகுதியில்) முதல் தளத்துடன் 95 கடைகளும், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் தரை தளத்தில் 56 கடைகளும் 6500 சதுர அடியில், ரூ.6கோடியே 40 லட்சம் கட்டப்பட உள்ளது. ஒரு வருடத்திற்குள் இந்த கடைகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. கடந்த மாதம் இப்பணிக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்

கோபுர பகுதி என்பதால் மாடியுடன் கூடிய கடைகள் அமைப்பதற்கு பெரும்பாலான பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கோயில் முன்பு கடைகள் கட்டுவதற்கு ஐகோர்ட் கடந்த 10ந் தேதி தடை விதித்தது. இதை வரவேற்று பலர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.

திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படும் வகையில் தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை முன்வரவேண்டும், பக்தர்களின் காணிக்கையில் அறநிலையத்துறை நிதியை எடுத்து பொதுப்பணித்துறைக்கு வழங்கியது ஏற்புடையதல்ல. பெரிய கோபுரம் முன் பகுதியை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு தங்கும் மற்றும் கழிவறை வசதிகளை தான் கோயிலுக்கு வெளியில் அரசு செய்திருக்க வேண்டும்.

பக்தர்கள் நலனை காக்க வேண்டும்

அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறைகள், தங்கும் வசதிகள் செய்ய முன் வர வேண்டும். இந்து அறநிலையத்துறை துறை பக்தர் நலன் தான் காக்க வேண்டுமே தவிர பணம் சம்பாதிக்க கடை கட்டுவது அண்ணாமலையாருக்கு செய்யும் தீங்காகும் என்றெல்லாம் தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். ஏற்கனவே கடை உள்ள பகுதியல்தான் கடைகள் கட்டப்படுகிறது, மேலும் கடை கட்டுவது சட்டபூர்வமான கூடுதல் வருவாயை தரும் என கடைகள் கட்டப்படுவதற்கு ஆதரவாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டன.

கடை கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு பாஜகதான் காரணம், ராஜகோபுரத்தை மறைத்து கட்டிடமா? என வதந்தியை பரப்பினர். 217 அடி கோபுரத்தை எப்படி 25 அடி கட்டிடம் எப்படி மறைக்கும்? வியாபாரிகள் பாஜகவிற்கு எதிராக நிற்கிறார்கள் என வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. எனக்கு எந்த பிழைப்பும் இல்லை, என் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும், கடையை விட்டால் வழியில்லை என பெண் ஒருவர் அழுது கொண்டே கூறுவதும் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது கோர்ட்டு விதித்த தடையை உடைக்கும் வண்ணம் சட்ட வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் ராஜகோபுர பகுதி காலியாக இருக்க வேண்டும் என்பது குறித்து 1916-ல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு போன்ற சில ஆதாரங்களை இந்து அமைப்புகள் திரட்டியிருக்கின்றன.

ராஜகோபுர பகுதி-1916-ல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

புதிய கடைகள் கட்டுவதற்காக அகற்றப்பட்ட பாத்திர கடைகளுக்கு திருமஞ்சன கோபுரத்தை தாண்டி உள்ள பகுதியில் தற்காலிக கடைகள் கட்டும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இப்பகுதியிலும், புதியதாக கடைகள் கட்டப்படும் போதும் கோயில் வாடகை பதிவேட்டில் இருக்கிறவர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோயில் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் திருவண்ணாமலைக்கு தற்போதைய முக்கியத் தேவையான அடுக்கு மாடி கார் பார்க்கிங், கழிவறை, குளியறையுடன் கூடிய பக்தர்கள் காத்திருப்பு அறைகள், ஓய்வு அறைகள் ஆகியவற்றிற்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும், வியாபாரிகளும் பாதிக்காத வகையில் கடைகளை ஏற்படுத்த திட்டங்களை தீட்ட வேண்டும், அலங்கார மண்டபம் முன்பு பக்தர்களுக்கு தேவையான பூ, பழம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

படங்கள்-வர்மா, மணிமாறன்


Link: http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!