Homeஅரசியல்எ.வ.வேலு கல்லூரியில் சோதனை தொடரும் என தகவல்

எ.வ.வேலு கல்லூரியில் சோதனை தொடரும் என தகவல்

திருவண்ணாமலையில் எ.வ.வேலு உறவினர் சம்பந்தப்பட்ட இடங்களில் 150 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனை நாளையும் தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவகல்லூரியில் மட்டும் பாதிக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

23 கார்-150 அதிகாரிகள்-வேலு கல்லூரியில் தொடரும் சோதனை

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு, இவரது வீடு மற்றும் அவரது கல்வி நிறுவனங்களிலும், சென்னை, கோவை, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை தென்மாத்தூரில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட வளாகத்தில் அவருக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பெண்கள் கல்லூரி, அருணை மருத்துவகல்லூரி, ஜீவாவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என சுமார் 10 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களை நடத்தும் அறக்கட்டளையிலிருந்து அவர் விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு 20 இன்னோவா கார், 3 டெம்போ ட்ராவலர்களில் அருணை கல்லூரி வளாகத்திற்குள் வந்து இறங்கிய 150க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒவ்வொரு பகுதிக்குமாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக அருணை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வளாகத்தில் சுமார் 10 கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவகல்லூரி, எ.வ.வேலு வீடு, அவரது முகாம் அலுவலகம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்த மத்திய துணை ராணுவப்படையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அடையாள அட்டை வைத்துள்ள பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். இதே போல் கல்லூரியிலிருந்து வெளியே செல்லும் கல்லூரி பஸ்களையும், உள்ளே வரும் பஸ்களையும் சோதனை செய்தே அனுமதிக்கின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கலையரங்களத்தில் இன்று காலை 9 மணிக்கு மாணவர்களிடம் டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைப்பதற்காக அமைச்சர் எ.வ.வேலு அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் வருமானவரித் துறை சோதனையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. இதே போல் அங்குள்ள மைதானத்தில் இன்று துவங்க இருந்த மண்டல அளவிலான வாலிபால் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எ.வ.வேலுவின் முகாம் அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் வருமானவரித் துறை சோதனை நாளையும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவக் கல்லூரியில் சோதனை ஏன்?

எ.வ.வேலு, பவர்புல் அமைச்சரான பிறகு அருணை மருத்துவகல்லூரி பல கோடி ரூபாயில் அடிக்கடி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. சென்ற மாதம் 22ந் தேதி அந்த கல்லூரியில் 600 நவீன படுக்கை வசதி கொண்ட கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவகல்லூரியின் அசுர வளர்ச்சிக்கான நிதி வரவு குறித்தும், அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைகள் குறித்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருணாசலம் சர்க்கரை ஆலையை ஏலம் எடுத்தவர் யார்?

திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் இயங்கி வந்த அருணாசலம் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு சுமார் ரூ.6 கோடியை பாக்கி தர வேண்டிய நிலையில் மூடப்பட்டு விட்டது. விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை அரசாங்கம் பெற்றுத் தர கோரி அதிமுக ஆட்சி காலத்தில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். இந்த சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த திமுகவைச் சேர்ந்த ஆர்த்தீஸ்வரி ராஜேந்திரன், எ.வ.வேலுவிடம் நேர்முக உதவியாளராக இருந்த செல்வராஜ் ஆகியோர் போராட்டங்களை முன்நின்று நடத்தினர்.

பிறகு இந்த ஆலை கோர்ட்டு மூலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஜெயக்குமார் என்பவர் ஏலம் எடுத்ததாக பாஜக தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த ஜெயக்குமார், அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளருமான மீனாவின் கணவராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஏலம் எடுக்கப்பட்ட இடத்தில் கடந்த மாதம் 22ந் தேதி நடைபெற்ற திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால் விவசாயிகளுக்கு பாக்கித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்த அமைப்புகளும் முன்வைக்கவில்லை என குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சி காலத்தில் போராட்டம் நடத்திய விவசாய அமைப்பும் இதை கண்டு கொள்ளவில்லை.

அருணாசலம் சர்க்கரை ஆலை இடத்தை ஏலம் எடுத்த பணம் யாருடையது? என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில்தான் மீனாஜெயக்குமாரின் கோயமுத்தூரில் இல்லத்திலும், அவரது மகன் அலுவலகம், அவர் சம்மந்தப்பட்ட இடங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஜெயக்குமார், எ.வ.வேலுவின் உறவினர் என்று சொல்லப்பட்டதை திமுக மறுத்திருக்கிறது.

ரெய்டு விஷயம் லீக் ஆனதா?

இந்நிலையில் வருமானவரித்துறை இன்று நடத்திய சோதனை விவரம் நேற்றே சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது வருமானவரித் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தகவலை கசிய விட்ட கருப்பு ஆடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனை வெற்றியா? தோல்வியா? கண்டுபிடிக்கப்பட்டது என்ன? என்பது குறித்து சோதனை நிறைவு பெற்ற பிறகே தெரிய வரும்.

படங்கள்-பார்த்திபன்

Link:TIRUVANNAMALAI AGNIMURASU

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!