தர்பூசணி வாங்கி ரூ.5 லட்சத்தை ஏமாற்றியவர் கைது
வேட்டவலம் வியாபாரி ஜெயிலில் அடைப்பு
19 லோடு தர்பூசணி வாங்கியதற்கான பணத்தில் ரூ.5லட்சத்தை தராமல் ஏமாற்றிய வேட்டவலம் வியாபாரி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், உலகாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் வயது (56). இவர் விவசாயிகளிடமிருந்து தர்பூசணி பழத்தை மொத்தமாக கொள்முதல் செய்து பெங்களுர், கேரளா, கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வந்தார்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து தர்பூசணி பழம் மொத்தமாக கொள்முதல் செய்த போது பாலகிருஷ்ணன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. பாலகிருஷ்ணன், வேட்டவலம் பாரதி தெருவைச் சேர்ந்தவர்.
பெங்களுரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், தன்னுடைய கடைக்கு தர்பூசணி பழம் அனுப்பி வைக்குமாறு ராஜேந்திரனிடம், பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
இதனால் ராஜேந்திரன் கடந்த 14.02.2022 முதல் 12.04.2022 ந்தேதி வரை 19 லோடு தர்பூசணி பழம் அனுப்பிவைத்துள்ளார். எதிரி தர்பூசணி பழங்களை பெற்றுக் கொண்டு, அதற்கான பணத்தை ராஜேந்திரன் மகன் வரதராஜன் என்பவரின் வங்கி கணக்கிற்கு சிறுக சிறுக அனுப்பி வைத்திருக்கிறார்.
மீதி தொகைகையான ரூ.5லட்சத்து 26ஆயிரத்து 235ஐ பாலகிருஷ்ணன் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம். பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று ராஜேந்திரன் கேட்ட போது அவரை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் படி ஜெயிலில் அடைத்தனர்.