வருமானவரித் துறை சோதனையில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். அமைச்சரான பிறகு ஒரு சென்ட் இடம் கூட வாங்கவில்லை என்று தெரிவித்த அவர் மீனா ஜெயக்குமார் என்ற பெயர் ஞாபகத்திற்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அவரது குடும்பத்தார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினருடன் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3ந் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று 5வது நாளாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நேற்று இரவு முடிவு பெற்றது. மேலும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.22 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தை எண்ணுவதற்காக 2 சூட்கேஸ்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளைக்கு துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் எடுத்து வந்தனர்.
நேற்று இரவு வருமானவரித் துறை சோதனை நிறைவு பெற்றதும் 4 நாட்கள் கழித்து எ.வ.வேலு, கல்லூரியை விட்டு வெளியே வந்தார். திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எ.வ.வேலு கூறியதாவது,
அச்சுறுத்தி விசாரித்தனர்
ஐடி ரெய்டு என்பது தவறு என்று சொல்ல மாட்டேன் அது அவர்களுடைய கடமை. ஐடி ரெய்டு என்ற பெயரில் என்னுடைய நேர்முக உதவியாளர் சுப்பிரமணியனை ஐந்து நாட்களாக சென்னையில் வைத்து அவரிடம் பல்வேறு கேள்விகளை என்னை தொடர்பு படுத்தி கோப்புகள் பற்றியும், எங்கெங்கெல்லாம் இடம் வாங்கப்பட்டு இருக்கிறது என்பது பற்றியும் அவரை அச்சுறுத்தி அவர் கண்ணீர் விட்டு அழுகிற அளவுக்கு விசாரித்துள்ளார்கள். பிறகு என்னுடைய ஓட்டுநர் அவரை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி விசாரித்து இன்று மாலை தான் விடுவித்தனர்.
அது இல்லாமல் எனது மனைவி, எனது மகன்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கேள்விகளை என்னை தொடர்பு படுத்தி கேட்டுள்ளார்கள். கடைசியாக நான் தங்கி இருந்த கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் சல்லடை போட்டு ஆய்வு செய்தனர். என்னை தொடர்பு படுத்தி விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலை உள்ள பல இடங்களிலும் சென்று பல்வேறு கேள்விகளை அச்சுறுத்தி கேட்டுள்ளனர்.
இதனால் ஐடி ஆபிசர் மீது எனக்கு கோபம் வரவில்லை. அவர் ஒரு அம்பு தான். அம்பு விட்டவர்கள் எங்கேயோ இருக்கின்றனர். 2021 இல் சட்டமன்ற தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது தலைவர் ஸ்டாலின் வந்து தங்கி இருந்த போது கூட சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் எனது தேர்தல் வேலையை முடக்கினார்கள். மன உளைச்சலை தந்தனர். விளைவு என்ன? ஐம்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய என்னை ஏறத்தாழ ஒரு லட்சம் ஓட்டில் திருவண்ணாமலை மக்கள் ஜெயிக்க வைத்தார்கள்.
நான் வெளிநாட்டிலிருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தக்காரன். அடிப்படையில் நான் ஒரு விவசாயி வீட்டு பிள்ளை. திருவண்ணாமலைக்கு வந்து திருடத் தெருவில் ஜீவா அச்சகம் என்பதை உருவாக்கி நடத்தினேன் அதற்கு பின்னால் லாரி வாங்கி லாரி தொழிலில் இறங்கினேன். அதற்கு பின்னால் சென்னையில் படத் தொழில் ஈடுபட்டு பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தேன். பட தயாரிப்பாளராக இருந்தது எல்லோருக்கும் தெரியும்.
அறக்கட்டளைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை
அப்படி ஈட்டிய பணத்தை தான் சரஸ்வதி அம்மாள் என்ற எனது தாயார் பெயரில் அறக்கட்டளை 1991 இல் தொடங்கினேன் அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கினோம். இந்த கல்லூரியை மட்டும் நான் ஆரம்பிக்கவில்லை என்றால் எத்தனை பேர் கிராமத்து பிள்ளைகள் சென்னைக்கு சென்று படித்திருக்க முடியும்? அப்படிப்பட்ட பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். இந்த நிலையில் தான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மக்களுக்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறேன்.
யாராவது இந்த மாவட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்களோ, எனது கட்சிக்காரர்களோ நான் ஏதாவது ஒரு கையூட்டு பெற்று இருக்கிறேன் என்று யாராவது ஒருவர் சொன்னால் கூட நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் அப்படி நான் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப் பிடித்துக் கொண்டிருப்பவன். எனது மகன் குமரன் அறக்கட்டளை தலைவராக இருக்கிறார் நான் அறக்கட்டளையை விட்டு வெளியே வந்து விட்டேன். எனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
எனக்கு இருக்கிற சொத்து 48 ஏக்கர் 38 சென்ட் நிலம் தான் உள்ளது. காந்தி நகரில் வீடு கட்டும் சங்கம் மூலமாக எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மருத்துவமனையாக ஆக்க வேண்டும் என்று 33 ஆண்டுக்கு லீசுக்கு விட்டு இருக்கிறேன். சென்னையில் எனக்கு ஒரு வீடு உள்ளது. இதுதான் எனது சொத்து. வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
ஒரு சென்ட் இடம் கூட வாங்கவில்லை
என் மீது நம்பிக்கை வைத்து தமிழக முதல்வர் இந்தத் துறையை என்னிடம் ஒப்படைத்த பிறகு ஒரு சென்ட் இடம் கூட நான் வாங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நான் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து ஒழுங்காக வரியை கட்டி வருகிறேன். வருமானவரித் துறையை ஏமாற்றுபவன் அல்ல.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 11 லட்ச ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறேன் என என் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் உள்நோக்கத்தோடு போடப்பட்ட கேஸ் என தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்கள். அதிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதிலும் நான் நிரபராதி, அரசியல் உள்ள நோக்கத்திற்காக போடப்பட்ட வழக்கு என வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. ஐந்து நாள் என்னை ரெய்டு என்ற பெயரில் வைத்திருந்தீர்கள். இதனால் எனது கழகப் பணிகள், அரசு பணிகள் நடைபெறவில்லை. அதைத்தான் உங்களால் முடக்க முடிந்தது. இன்னும் வேகமாக அரசாங்கத்துக்காகவும், கட்சிக்காகவும் உழைக்க தயாராக இருக்கிறேன்.
காசா கிராண்ட் யார்?
நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என்பதற்காக திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளை. அமைச்சர் பெருமக்களை அச்சுறுத்துவது என்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய ஒரே இலக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தல் தான். 40க்கு 40 என நாடாளுமன்றத்தை பிடிப்பது தான் எங்களுடைய நோக்கமாக இருக்கும்.
காசா கிராண்ட் என்பது யார் என்றே எனக்கு தெரியாது. அப்பாசாமி என்பவர் நான் கோயம்புத்தூருக்கு செல்லும்போது தேர்தல் நேரங்களில் அரசு விடுதி கிடைக்காத போது அவர் கட்டியிருக்கிற ஓட்டலில் தங்குவது உண்டு. அவர்களுக்கும், எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார் என்ற பெயர் எனக்கு ஞாபகம் வருகிறது. ஜெயக்குமார் திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் பிறந்தவர். அவர் தம்பி முருகன் இன்றைக்கும் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார். சிறிய வயதில் ஜெயக்குமார் கோயமுத்தூருக்கு சென்று தொழில் ஆரம்பித்தார். ரியல் எஸ்டேட் தொழிலோடு பல தொழில்களை செய்து வருகிறார். அங்கேயே திருமணம் செய்து கொண்டார். நம்ம ஊர் என்பதால் கோயம்புத்தூர் செல்லும் போது என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்வார்.
ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் அப்போதுதான் பழக்கம். அது ஒரு பெரிய கொலை குற்றமா? அவருடைய மனைவி, அந்த ஊரில் உள்ள கழக முன்னோடிகள், அமைச்சர்களின் பரிந்துரையின் பேரில் கட்சியில் பதவி வாங்கி இருக்கலாம். அதையும் என்னையும், அவர்கள் குடும்பத்தையும், எனது குடும்பத்தையும் தொடர்புபடுத்தி பேசுவது எந்த விதத்தில் நியாயம்? அதை யாராவது உறுதிப்படுத்த முடியுமா?
என்னைப் பொறுத்த வரைக்கும் நேர்மையுள்ளவனாக, மனசாட்சிக்கு பயந்தவனாக, தலைமைக்கு கட்டுப்பட்டவனாக என்றைக்கும் இருப்பேன். என் வீட்டிலோ, எனது மனைவி வீட்டிலோ, எனது இரண்டு பிள்ளைகள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரே ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை
அருணை வெங்கட்
அவரவர்கள் தொழில் செய்கிறார்கள். அவர்கள் கணக்கு சரியாக காட்டவில்லை, சோதனை நடத்தும் போது பணம் கிடைக்கிறது என்று சொன்னால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? தானிப்பாடி முருகேசன் திமுகவில் அடிப்படை உறுப்பினர்.திருவண்ணாமலையில் பெட்ரோல் பங்கும், தானிப்பாடியில் ரைஸ் மில்லும் வைத்திருக்கிறார் அவர் வீட்டில் பணம் எடுத்தால் என்னை எப்படி தொடர்பு படுத்த முடியும்?
அருணை வெங்கட் என்பவர் 20 ஆண்டுகளாக ஒப்பந்ததாரராக உள்ளார். பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் கூட அவர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருந்தார். திமுகவில் அவருக்கு எந்தவித பதவியும் இல்லை. அவர் ஒரு அனுதாபி. ஒப்பந்ததாரர் என்ற அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். அவர் வீட்டில் சோதனை செய்யும் போது பணம் இருந்தால் அது எப்படி வேலுக்கு சம்பந்தமாகும்?
அவர் எவ்வளவு வேலை எடுத்திருக்கிறார்? எவ்வளவு பணம் செலவு செய்து இருக்கிறார்? எவ்வளவு வரி கட்ட வேண்டும்? என்பதை எல்லாம் வருமானவரித் துறைதான் பார்க்க வேண்டும். அந்த பணியை அவர்கள் செய்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் பணம் கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு அவர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.
அப்போது அவரது மகன்கள் குமரன், கம்பன் மற்றும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.