திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு சம்மந்தப்பட்ட இடங்களில் நடந்து வரும் வருமானவரித் துறை சோதனை மேலும் 2 நாட்கள் தொடரும் எனவும், இதன் தொடர்ச்சியாக நாளை வங்கி லாக்கர்களை திறக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை தென்மாத்தூரில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட வளாகத்தில் எ.வ.வேலு குடும்பத்தினருக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பெண்கள் கல்லூரி, அருணை மருத்துவகல்லூரி, ஜீவாவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, பார்மஸி கல்லூரி என சுமார் 10 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
இதில் அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவகல்லூரி, எ.வ.வேலு வீடு, அவரது முகாம் அலுவலகம் ஆகிய 4 இடங்களில் 150க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 3ந் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக சோதனை தொடர்ந்தது.
எ.வ.வேலுவுக்கு தொடர்பான கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றில் எந்த மாதிரியான பணபரிமாற்றங்கள் நடைபெற்று உள்ளன? அதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பதை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதே போல் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் வீடு, அரசு ஒப்பந்ததாரர் அருணை வெங்கட்டின் வீடு மற்றும் அலுவலகத்திலும், தானிப்பாடியில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் ஜமால் ஏஜென்சீஸ் உரிமையாளரின் வீடு, கடை, குடோனிலும், பெட்ரோல் பங்க் உரிமையாளர் முருகேசன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ரைஸ்மில், வாட்டர் கம்பெனி ஆகியவற்றிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன் சென்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேற்கண்ட சோதனைகளில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், கட்டு, கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தானிப்பாடியில் சோதனை நடத்துவதற்கு அருணை வெங்கட் வியாபார ரீதியாக தொடர்பு வைத்திருந்ததே காரணம் என கூறப்படுகிறது. எ.வ.வே.கம்பன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் தொடர்ச்சியாக அவர்களது குடும்பத்தார் கணக்கு வைத்துள்ள சில வங்கிகளுக்கு நாளை சென்று லாக்கர்களை திறந்து சோதனையிட வணிகவரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
வருமானவரித் துறையினரின் சோதனை 7ந் தேதி வரை நீடிக்கலாம் என கூறப்படுகிறது. கணக்கு காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு வரியை பிடித்தம் செய்வதோடு, வருமானவரித் துறை தனது சோதனையை முடித்துக் கொள்ளும். அடுத்து கணக்கு காட்டப்படாத பணம் சம்மந்தப்பட்டவர்களுக்கு எப்படி வந்தது? என்பதை அமலாக்கத்துறை விசாரிக்கும்.