அன்னதான பேனரில் அண்ணாமலையார் படம் வைக்க கோரிக்கை
13 லட்சம் பேருக்கு 100 வகையான சிறுதானிய உணவு வழங்க ஏற்பாடு – விதிமீறினால் அடுத்த தீபத்திற்கு அன்னதானத்திற்கு அனுமதியில்லை-கலெக்டர்
கார்த்திகை தீபதிருவிழா அன்னதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட பேனரில் அண்ணாமலையார் படம் இல்லாததால் அண்ணாமலையார் படம் பொறித்த பேனர்களை வழங்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்களுக்கான அனுமதி உரிமம் வழங்கும் நிகழ்ச்சி இன்று பகல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணி இளங்கோவன், எஸ்.விமல் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகிக்க நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில்சிக்கிய ராஜா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ் 244 பேருக்கு அன்னதானத்திற்கான அனுமதியை வழங்கி பேசினார். அவர் பேசுகையில் அன்னதானம் கொடுக்கும் இடத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் அன்னதானம் வழங்குபவர்களுக்கு இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்கும் போது பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது. ரோட்ல வைத்து கொடுக்கிறார்கள், பக்தர்கள் போவதற்கு வழி இல்லாமல் இருக்கிறது, சாதத்தை அங்கேயே கொட்டி விட்டு சென்று விட்டார்கள் என்ற புகார்கள் வரக்கூடாது. இந்த முறை விதிமுறைகளை சரியாக கடைபிடித்து அன்னதானம் வழங்கியவர்கள் யார்? விதிமுறை மீறி வழங்கியவர்கள் யார்? என என்பது குறித்து கணக்கெடுக்கப்படும். விதிமீறியவர்களுக்கு அடுத்த முறை அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றார்.
இந்த கூட்டத்தில் 236 இடங்களில் 22.50 லட்சம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது என்றும், 13 லட்சம் நபர்களுக்கு சிறுதானியத்தால் தயாரிக்கப்பட்ட 100-க்கு மேற்பட்ட உணவு வகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உணவு பாதுகாப்பு தரத்தில் ஏதேனும் ஐயப்பாடுகள் அல்லது புகார்கள் இருப்பின் உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்ப் புகார் எண்.9444042322-என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக போதுமான இருக்கை வசதி இல்லாததால் பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் வழக்கறிஞர் டி.எஸ்.சங்கரும், நிர்வாகி ஒருவரும் தரையில் உட்கார்ந்தனர். இதைப்பார்த்த கலெக்டர் அவர்களுக்கு இருக்கை அளிக்க உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர், அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டவர்களுக்கு தீபத்திருவிழாவை காண பாஸ் வழங்க வேண்டும் எனவும், அன்னதானத்திற்கு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை சனிக்கிழமை வரை தடை செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் அன்னதானம் வழங்க வேண்டிய இடத்தில் மாட்டுவதற்காக பெயர், செல்போன் எண், வரிசை எண் பதிக்கப்பட்ட பேனரும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த பேனரில் கார்த்திகை தீபத்திருவிழாவை குறிக்கும் அண்ணாமலையார்-உண்ணாமலையம்மன் படம் இல்லாததை பார்த்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர் சங்கர், கார்ததிகை தீபத்திருவிழா நடத்துவது குறித்து பொதுமக்களை அழைத்து கருத்து கேட்கப்படவில்லை என்றும், அன்னதான பேனரில் அண்ணாமலையார் படம் போடப்படவில்லை, ஒரு சிறிய பேனருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றனர் என குற்றஞ்சாட்டினார். கார்த்திகை தீபத்தை குறிக்கும் அண்ணாமலையாரின் படம் போடப்படாதது வருத்தத்தை அளிப்பதாகவும், அண்ணாமலையார் படம் பொறித்த பேனர்களை வழங்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.