கிரிவலப்பாதையில் கடைகள்-அமைச்சர் எ.வ.வேலு புது உத்தரவு
அமைச்சரிடம் முறையிட்ட வியாபாரிகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பவுர்ணமி, தீபத்திருவிழா நாட்களில் வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து தரும்படி கோயில் இணை ஆணையருக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலையில் பிரசித்த பெற்ற தீபத்திருவிழா கடந்த 17ந் தேதி முதல் வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. மகாதேரோட்டம் வரும் 23ந் தேதியும், மகாதீப பெருவிழா வரும் 26ந் தேதியும் நடக்கிறது.
தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவல பாதையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் தொடங்கி கிரிவல பாதையில் குபேர லிங்கம் வரை சென்று பார்வையிட்டார். அப்போது கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குடிநீர் கழிப்பறை வசதிகள், மின்னொளி ஏற்பாடு உள்ளிட்டவைகளை குறித்து பார்வையிட்டார். தேவையான கூடுதல் வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அனைத்து வசதிகளும் 100 சதவீதம் முழுமையடையும்
மேலும் தீபத்திருவிழா முடியும் வரை கிரிவலபாதையில் அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டு பணிகளை கண்காணிக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு உயர் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி 14 கிலோ மீட்டர் தூரத்தையும் தொடர்ந்து கண்காணித்து பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு செய்தியளார்களுக்கு அளித்த பேட்டியில், மின்விளக்குகள் கிரிவலப்பாதையில் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. நாளைக்குள் அனைத்து வசதிகளும் 100 சதவீதம் முழுமையடையும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபத்திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மாதம் மாதம் அதிக கிரிவலம் வருபவர்கள் விவிஐபி-க்கள், அண்டை மாநில பக்தர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். அதற்காக முதலமைச்சர் என்னை இங்கே இருந்து அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் என்றார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரீட் தளத்துடன் கடைகள்
இந்த ஆய்வின் போது அமைச்சர் எ.வ.வேலு, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளர் ஜோதியை அழைத்து கிரிவலப்பாதையில் எங்கெல்லாம் கோயில் பகுதியில் காலி இடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் நடைபாதையை தாண்டி 4க்கு 6 என்ற அளவில் காங்கிரீட் தளம் போட்டு கடைகளுக்கு இடம் ஒதுக்கி தந்து அங்கு பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் மட்டும் கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளித்து சிறிய தொகையை வாடகையாக வசூலித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டார்.
கிரிவலப்பாதையில் அதிகாரிகளுடன் சில தூரம் நடந்து சென்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். திருநேர் அண்ணாமலை அருகே கிரிவலப்பாதையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து குழந்தைளுடன் கஷ்டப்படுகிறோம், எங்கள் பிழைப்புக்கு கடை வைத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என முறையிட்டனர்.
365 நாளும் கடை விட முடியாது
அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் விஐபிக்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதை என்ன இப்படி இருக்கிறதே என கேட்கின்றனர். இருந்தாலும் நம்ம ஊர் ஜனங்க பிழைப்பு நடத்த வேண்டும் என்பதற்காக, தீபம் 10 நாட்கள் நடக்கிறது, அந்த நேரத்திலும், மாதம் தோறும் கிரிவலம் வரும் நேரத்திலும் கோயில் இடத்தில் கடை ஒதுக்கி தர சொல்லியிருக்கிறேன். அதற்கு சிறிய தொகை வாடகை வசூலிப்பார்கள். ஆனால் 365 நாளும் கடை வாடகைக்கு விட முடியாது, சீசனுக்கு மட்டுமே விட முடியும் என்றார்.
இதையடுத்து இணை ஆணையாளர் ஜோதியிடம், சாதாரண நாட்களில் கடை யாரெல்லாம் நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள் என கணக்கெடுக்கும்படியும், எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தற்காலிக ஷெட் அமைத்துக் கொடுங்கள், இது சம்மந்தமாக நான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமும், ஆணையாளரிடமும் பேசுகிறேன் என்றார்.