திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைத்து முடிக்கப்பட்ட இடங்களில் தரைவழியாக மின் விநியோகம் துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தன்னிச்சையாக பள்ளம் தோண்டக் கூடாது என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர் ஓடும் வீதியான மாடவீதியை சிமெண்ட் சாலையாக மாற்றும் பணி சுமார் ரூ.25 கோடியில் துவங்கப்பட்டுள்ளன. முதலாவதாக பேகோபுரத் தெரு, பெரியத் தெருக்களில் சிமெண்ட் ரோடு போட்டு முடிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் செலவில் புதியதாக குடிநீர் பைப்புகள் புதைக்கும் பணியும், அதே போல் ரூ.4 கோடியில் புதை வட கேபிள்கள் புதைக்கும் பணியும் நிறைவடைந்தன.
பெருநகரங்களில் மட்டுமே இருந்த புதை மின் வடம்(தரை வழி மின்சாரம்) திட்டம் முதன் முறையாக திருவண்ணாமலையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா முடிந்ததும் அடுத்த ஆண்டு திருவூடல் தெரு, தேரடித் தெரு ஆகியவற்றில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த தெருக்களிலும் பேகோபுரம், பெரியத் தெருவை அடுத்து புதை மின் வடம் அமைக்கப்பட உள்ளது.
புதை மின் வடம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் பேகோபுரத் தெரு, பெரியத் தெருக்களில் இருந்த மின் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து தரைக்கு அடியில் பாதுகாப்பான முறையில் தடையில்லா மின்விநியோகம் வழங்கும் நான்கு மின் வலை சுற்று அமைப்பு (Ring Main Unit) மூலம் மின்சாரம் செலுத்தபட்டுள்ளது.
இப்பணி இன்று தொடங்கியது. தரைக்கு அடியில் மின் விநியோகம் வழங்கும பணியை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் துவக்கி வைத்தார். இதில் செயற்பொறியாளர்கள் ராமு, வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதை மின் வடம் திட்டம் துவங்கப்பட்டுள்ளதால் மாட வீதியை சுற்றிலும் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த 11KV மற்றும் தாழ்வழுத்த மின் கேபிள்களில் மின்சாரம் தொடர்ந்து இருக்கும். எனவே மாட வீதிகளில் மற்ற துறைகள் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் ஏதாவது இருப்பின் மின்வாரியத்தின் ஆலோசனை பெற்று மட்டுமே செய்யுமாறு பொதுமக்களை மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.