திருவண்ணாமலை:71 வருட காந்தி சிலை அகற்றம் ஏன்?
திருவண்ணாமலையில் 1952ம் வருடம் நிறுவப்பட்ட காந்தி சிலை இன்று திடீரென அகற்றப்பட்டது. ஏற்கனவே திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்ட நிலையில் காந்தி சிலையும் அகற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழமை வாய்ந்த காந்தி சிலை
திருவண்ணாமலை தேரடித் தெருவை பார்த்தவாறு பெரிய தெரு, கொசமடத் தெரு சந்திப்பில் காந்தி சிலை கடந்த 1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ந் தேதி நிறுவப்பட்டது. இந்த சிலையை அப்போதைய நகராண்மை கழகத்தின்(நகரமன்றம்) தலைவர் டி.வி.தேவராஜ முதலியார் தலைமையில் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் திறந்து வைத்திருக்கிறார்.
இதற்கான கல்வெட்டு காந்தி சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் ப.உ.சண்முகம், ஆட்சியாளர் என்றும், ஐ.மாணிக்கவேலு முதலியார், உப ஆட்சியாளர் என்றும், ஆர்.வைரசாமி ஆணையாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தேரடித் தெரு சந்திப்பில் காந்தி சிலை இருப்பது போல் காந்தி நகரிலும் ஒரு காந்தி சிலை உள்ளது. ஆனாலும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேரடித் தெரு சந்திப்பில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கலெக்டரும் வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.
இந்நிலையில் அந்த காந்தி சிலை இன்று காலை திடீரென அகற்றப்பட்டது. காந்தி சிலை அடியில் இருந்த பீடம் டிரில்லிங் மிஷின் கொண்டு உடைக்கப்பட்டது. பிறகு காந்தி சிலை பத்திரமாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் நகராட்சி வாகனத்தில் ஏற்றப்பட்டது. அதன் பிறகு காந்தி சிலை இருந்த தடமே தெரியாமல் பீடம் அடியோடு இடித்து தள்ளப்பட்டது.
திருவள்ளுவர் சிலை என்ன ஆனது?
பேகோபுரத் தெருவிலிருந்து தொடங்கி காந்தி சிலை வரை சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. பெரிய தெருவிலிருந்து தேரடித் தெருவிற்கு பெரிய தேர் திரும்புவதற்கு சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு காந்தி சிலையை சிறது தள்ளி வைப்பதற்காக தற்போது அகற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் பீடம் கட்டப்பட்டு அதன் மீது காந்தி சிலை வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வேட்டவலம்-திருக்கோயிலூர் ரோடு சந்திப்பில் இருந்த திருவள்ளுவர் சிலை சாலை அகலப்படுத்தும் பணிக்காக 2 மாதத்திற்கு முன் அகற்றப்பட்டது. இந்த சிலை மீண்டும் நிறுவப்படவில்லை. அதே போல் தற்போது காந்தி சிலையும் அகற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் முடிந்த பிறகே காந்தி சிலை நிறுவும் பணி துவங்கும் என தெரிகிறது.