தேரோட்டத்தில் பக்தர்களை மின்சாரம் தாக்கியது ஏன்?
கலெக்டர் முருகேஷ் விளக்கம்
திருவண்ணாமலை பெரிய தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரிசனம் செய்வதற்காக ஒரு கடையில் காத்திருந்த பக்தர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதற்கான காரணம் குறித்து கலெக்டர் முருகேஷ் விளக்கமளித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 7ஆம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், முருகர் தேரை அடுத்து மாலை 5.10 மணியளவில் பெரிய தேரான அண்ணாமலையார் தேர் புறப்பட்டு வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நிலையில் தேரடி வீதியில் உடுப்பி பிருந்தாவன் ஓட்டல் செல்லும் சந்திப்பில் ஒரு கடையில் தேரோட்டத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர்.
தேர் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற போது அந்த கடையில் நின்றிருந்த பக்தர்கள் சிலரை மின்சாரம் தாக்கியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் பக்தர்களை பதட்டமடைய வேண்டாமென அறிவுறுத்தினர். பிறகு அவர்களை பாதுகாப்பாக கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மின்சார வாரிய லைன்மேன், மின் கம்பத்தில் ஏறி அந்த கடைக்கு செல்லும் மின்சார ஒயரை துண்டித்த பிறகு கடைக்குள் இருந்தவர்களும், மாடி மீது நின்று கொண்டிருந்தவர்களும் பத்திரமாக வெளியே வந்தனர். மின்சாரம் தாக்கியதில் புவனேஸ்வரி (வயது 16) உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் 2 பெண்கள்
இது சம்மந்தமாக கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் மகாரதம் தேரோட்டம் துவங்கியது. தேரோட்டம் துவங்கியவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
எனினும், மகாரதம் நின்ற இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு தனியார் கடையின் வைக்கப்பட்டிருந்த யூபிஎஸ் கருவியில் ஏற்பட்ட மின் கசிவினால் 2 பெண்களுக்கு லேசான அதிர்ச்சி ஏற்பட்டது. திருத்தேருடன் வந்த மருத்துவ குழுவால் உடன் முதலுதவி அளிக்கப்பட்டு இயல்பான நிலைக்கு திரும்பினர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் நலமுடன் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்வின் போது அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும். மேலும், ஒரு தனியார் கடையில் பயன்பாட்டில் இருந்த யூபிஎஸ் காரணமாக மட்டுமே இந்நிகழ்வு ஏற்பட்டது. எனவே, இந்நிகழ்வு தொடர்பான தவறான தகவல்களை பொருட்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அருள்மிகு அண்ணாமலையார் மகாரதம் தேரோட்டம் துவக்கம் முதல் தற்போது வரை தடங்கல்கள் ஏதுமின்றி பெருந்திரளான பக்தர்களின் மகிழ்ச்சி பெருக்குடன் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.