திருவண்ணாமலையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகம் ஆன்மீக பூமி என்பதற்கு உதாரணம் திருவண்ணாமலை, சிலருக்கு ஆன்மீகம் நாக்கில் இல்லை,உள்ளத்தில் உள்ளது, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் மிகுந்த மனவருத்தத்தை தந்தது, அண்ணாமலையார் நினைத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமாரின் 105வது ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு யோகி ராம்சுரத்குமாரை வழிபட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
யோகி ராம்சரத்குமாரின் அதிசயத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். எனது அப்பாவுக்கு குரல் வளையில் பிரச்சனை வரும்போது பகவானிடம் வந்ததால் அவருக்கு உடனடியாக குரல் வந்தது. அதனால் தான் பல பணிகள் இருந்தாலும் யோகி ராம்சரத்குமாரின் 105ஆவது பிறந்தநாளில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
திருவண்ணாமலையே உதாரணம்
இது ஆன்மீக பூமி எவ்வளவு தான் அரசியலிலும், சமுதாயத்திலும் ஆன்மீகத்துக்கு எதிராக பேசினாலும் அதற்கு ஒரே பதில் திருவண்ணாமலையில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நடந்த ஜோதியில் (கார்த்திகை தீபத்திருவிழா) லட்சக்கணக்கான மக்கள் எந்த பிரச்சினை இல்லாமல் கூடி ஜோதியை தரிசத்ததுதான். இதுதான் ஆன்மீகம். கோயிலில் எந்த வேற்றுமையையும் பார்ப்பதில்லை.
இது ஒரு ஆன்மீக பூமி என்பதை தமிழகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு திருவண்ணாமலை ஒரு உதாரணம். அருணாசலேஸ்வரர் ஒரு உதாரணம். ஆன்மிகத்தை பற்றி தெரியாதவர்கள் சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள். நிச்சயமாக அவர்களுக்கு ஆன்மீகத்தை பற்றி தெரியவில்லை. தெரிந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள். ஆன்மீகத்தையும், அதன் அதிசயத்தை பற்றியும் முழுவதுமாக உணர்ந்து இருந்தார்கள் என்றால் அவர்கள் பேச மாட்டார்கள்.
என்னை பொறுத்த வரைக்கும் அவர்கள் நாக்கில் தான் பேசுகிறார்கள், அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது அதனால் தான் அவர்கள் குடும்பத்தில் சில பேர் இதை கடைப்பிடிக்கிறார்கள். சும்மா ஒரு பேஷனுக்கு சொல்லிவிட்டு செல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் உள்ளத்தில் இருந்து இதை பேச முடியாது.
ஆன்மீகம் அப்படி எல்லோரையும் ஆட்கொண்டிருக்கிறது. இறைவனை தெரிய வேண்டும் என்றால் அதற்கு நமக்கு அந்த அறிவாற்றல் வந்திருக்க வேண்டும். இறைவன் அப்படித்தான் தெரிவார். ஏதோ பேச வேண்டும் என்பதற்காகவே இறைவன் தெரிய மாட்டார். இறைவன் அவர்களுக்கு தெரியவில்லை என்பதால் இறைவன் இல்லை என சொல்ல முடியாது. உயிர் வெளியே தெரியவில்லை என்றால் உயிர் இல்லை என சொல்ல முடியுமா?
மூச்சு இருக்கிறது, உயிர் இருக்கிறது, ஆன்மீகம் இருக்கிறது. இந்த தமிழக மண்ணின் ஒவ்வொரு துகளிலும் ஆன்மீகம் இருக்கிறது ஆன்மீகம் இல்லை என்று சொல்பவர்கள் அதை தெரிந்து கொள்வார்கள். இது ஒரு ஆன்மீக பூமி. ஒவ்வொரு துகளிலும் ஆன்மீகம் இருக்கிறது. ஆன்மீகத்தை எதிர்த்து பேசுகிறவர்கள் சீக்கிரம் அதை தெரிந்து கொண்டு அவர்களே கோயிலுக்கு வர ஆரம்பிப்பார்கள்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டதற்கு நானும் எதிர்ப்பு தெரிவித்தேன். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது மிக மிக தவறு. அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது. பல எதிர்ப்புகள் வந்ததால் அதை அவர்கள் திரும்ப பெற்றார்கள். தமிழகத்தைச் சார்ந்தவராக இருப்பதால் எனது கண்டனத்தை தெரிவித்து இருந்தேன். விவசாயிகளை மதிக்க வேண்டும். விவசாயிகள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்படுவதாக ஒரு கருத்து வருகிறது. அப்படி முடிவு எடுத்தால் அதை எதிர்க்கக்கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன். தமிழிசை இருக்கும் இடத்தில் தமிழுக்கு எதிராக எதுவுமே வர முடியாது. அதே போல் புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி இல்லை என்கிறார்கள். தாய்மொழி தமிழ் உள்ளது. சிபிஎஸ்சி புதுச்சேரியில் கொண்டு வந்தோம். தமிழை அழிக்கிறார்கள், சிபிஎஸ்சியில் தமிழ் இல்லை என்றார்கள். தமிழ் மீடியம் சிபிஎஸ்சியில் வருவதற்கு பாரதப்பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழை மிகச் சிறப்பாக பேசக்கூடிய பிரதமராக, ஆன்மீகத்தை சிறப்பாக பேசக்கூடிய பிரதமராக மோடி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி?
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்.
அருணாசலேஸ்வரர் என்ன சொல்றாரோ அதுதான். ஆண்டவரும் ஆண்டு கொண்டு இருப்பவர்களும் என்ன சொல்கிறார்களோ அதுதான். எனது வாழ்க்கை என்பது நான் எதையுமே கேட்டு பெறவில்லை. எல்லாமே இறைவனும் ஆண்டு கொண்டு இருப்பவர்களும் கொடுத்தது தான். மக்கள் சேவை செய்வதில் எனக்கு விருப்பம் உண்டு. இப்போது ஐந்து வருடமாக ஆளுநராக என்னை மக்கள் சேவை செய்ய சொல்லி இருக்கிறார்கள். அடுத்த ஐந்து வருடம் என்ன செய்ய சொல்ல போகிறார்கள் என்பது அருணாசலேஸ்வரருக்குத்தான் தெரியும். அருணாசலேஸ்வரர் என்ன விரும்புகிறாறோ அதுதான் எனது விருப்பம். நிற்கிற மாதிரி இருந்தால் அருணாசலேஸ்வரர் சொல்கிற தொகுதியில் நிற்பேன்.
முதல்வருடன் கருத்து வேறுபாடா?
புதுச்சேரி முதல்வருடன் கருத்து வேறுபாடா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்
கருத்து வேறுபாடு இல்லை. நான் அவரோட திட்டங்களுக்கு பாலமாக இருக்கிறேன். பாசமாக இருக்கிறேன். ஒன்றாக இருக்கிறோமே என்று சில பேர் இதை மாத்தி மாத்தி பேசலாமே தவிர எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணன் தங்கையாக புதுவையை வளர்ப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அருணாசலேஸ்வரர் சாட்சியாக சொல்லிக் கொள்கிறேன்.