தனது நிலத்திற்கு சென்றார் அண்ணாமலையார்
கிராமமே விழாக்கோலம்-பொங்கல் வைத்து வழிபாடு
அண்ணாமலையார் முன் வரவு-செலவு கணக்கை பட்டியலிட்ட கோயில் அலுவலர்
தனக்கோட்டிபுரத்தில் உள்ள தனது நிலத்திற்கு அண்ணாமலையார் சென்று பார்வையிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனால் கிராமமே விழாக்கோலம் பூண்டது. நிலத்திலிருந்து ரூ.28லட்சத்து 88ஆயிரத்திற்கு நெல் அரவை நடைபெற்றதாக அண்ணாமலையார் முன்பு கோயில் அலுவலர் வரவு-செலவு கணக்கை படித்து காட்டினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமாக 147ஏக்கர் நிலமும், 38ஏக்கர் ஏரி ஒன்றும் திருவண்ணாமலை-போளூர் ரோடு நாயுடுமங்கலம் அருகே உள்ள தனக்கோட்டிபுரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை அண்ணாமலையார் வருகை தந்து பார்வையிடுவார். அப்போது அவரிடம் வரவு-செலவு கணக்கு படித்து காட்டப்படும்.
அதன்படி இன்று ரதசப்தமியை யொட்டி தனக்கோட்டிபுரத்தில் உள்ள தனது நிலத்திற்கு உண்ணாமலையாhர் சமேத அண்ணாமலையார் திருவண்ணாமலையிருந்து அதிகாலை புறப்பட்டு சென்றார். இதையொட்டி தனக்கோட்டிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
அண்ணாமலையார் வரும் சாலைகள் கழுவி சுத்தமாக வைக்கப்பட்டன. சாலைகளில் பெரிய அளவிலான கோலங்கள் வரையப்பட்டது. இதே போல் கிராம மக்கள் தங்களது வீடுகளில் மாவிலை தோரணம் கட்டியும், கோலங்கள் வரைந்தும் அண்ணாமலையாரை வரவேற்றனர்.
கிராமத்தில் உள்ள தெருக்களில் வலம் வந்த பிறகு அண்ணாமலையார் அங்குள்ள தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அவரிடத்தில் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. அப்போது கூடியிருந்தவர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் அண்ணாமலையாருக்கு பொங்கல் படையிலிட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பிறகு வரவு-செலவு கணக்கு படிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு,
அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான தனகோட்டிபுரம் பண்ணையில் 42.50 ஏக்கர் நிலப்பரப்பில் ஆடிப்பட்டமாக விளைந்த பொன்னி நெல் அரவை அரவு மற்றும் செலவு விவரம்
வரவு
1. பொன்னி பச்சை அரிசி- 9917 கிலோ- ரூ.7லட்சத்து 93ஆயிரத்து 360
2. பொன்னி புழங்கல் அரிசி- 12850 கிலோ- ரூ.11லட்சத்து 56ஆயிரத்து 500
3. பொன்னி பச்சை பெருநொய்- 3705 கிலோ- ரூ.2லட்சத்து 22ஆயிரத்து 300
4. பொன்னி சிறு நொய்- 1290 கிலோ- ரூ.90ஆயிரத்து 300
5. சிறு நொய்- 611 கிலோ- ரூ.24ஆயிரத்து 440
6. கருப்பு நொய்- 615 கிலோ- ரூ.18ஆயிரத்து 440
7. தவிடு (பச்சை)- 4250 கிலோ- ரூ.85ஆயிரத்து 600
8. புழுங்கல் தவிடு- 4132 கிலோ- ரூ.61ஆயிரத்து 980
9. வைக்கோல்- 1451 கிலோ- ரூ.4லட்சத்து 35ஆயிரத்து 300
மொத்த வரவு- ரூ.28லட்சத்து 88ஆயிரத்து 220
செலவு
1.நெல் வயல் நடவுக்கு வரப்பு கழித்தல், பரம்பு ஓட்டுதல், நடவு செய்தல், அடி உரம் வைத்தல்- ரூ.3லட்சத்து 63ஆயிரத்து 885
2.களை எடுத்தல்- ரூ.1லட்சத்து 20ஆயிரம்
3.உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல்- ரூ.2லட்சத்து 84ஆயிரத்து 975
4.நெல் அறுவடை- ரூ.1லட்சத்து 90ஆயிரத்து 820
5.வைக்கோல் கட்டியது- ரூ.1லட்சத்து 4ஆயிரத்து 525
மொத்த செலவு- ரூ.10லட்சத்து 64ஆயிரத்து 205
நிகர லாபம் ரூ.18லட்சத்து 24ஆயிரத்து 015
இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் அரிசி, அண்ணாமலையார் கோயில் அன்னதான திட்டத்திற்கும், வைக்கோல் கோசாலையில் உள்ள மாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிலத்தை பார்வையிட்ட பிறகு அண்ணாமலையார்,கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவில் திருமாமுடீஸ்வரர் உடனாகிய திரிபுரசுந்தரி அம்பாளுடன் பங்கேற்றார். தை அமாவாசை முடிந்து 7வது நாளாக வரும் ரதசப்தமியை யொட்டி கலசப்பாக்கத்தில் தீர்த்தவாரியும், ஆற்றுத் திருவிழாவும் நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் 136வது ஆண்டாக விழா நடைபெற்றது. இந்த ஆற்றுத் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார்-உண்ணாமலையம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.