கொதிப்படைந்த பக்தர்கள்-கலெக்டர் செய்த ஏற்பாடு
2 நிமிடத்தில் தரிசனம்-தாய்மார்கள், பக்தர்கள் மகிழ்ச்சி
அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர் ஏற்பாடு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குழந்தைகளுடன் வந்திருந்திருந்த பக்தர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் 2 நிமிடத்தில் சாமி தரிசனம் செய்ய கலெக்டர் ஏற்பாடு செய்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையையே சிவனாக நினைத்து கிரிவலம் வருகின்றனர். மேலும் அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நிற்கும் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும், குடிதண்ணீர் இன்றியும் அல்லல்படும் நிலை தொடர்கதையானது.
பக்தர்கள் தங்கும் கூடம்
பக்தர்களுக்கு அடிப்படை வசதியை செய்வதை விட்டு விட்டு கோயில் நிர்வாகம் ராஜகோபுரம் முன்பு கடை கட்டுவதற்கான பணிகளை துவக்கியது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற தடையால் கடை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்கள் தங்கும் கூடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மாசி மாத பவுர்ணமி தினமான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க 7 மணி நேரம் ஆனது.
பக்தர்கள் கொதிப்பு
அதிகாலை 3 மணிக்கு வந்தோம். 11 மணி ஆகியும் வரிசையில் நின்று கொண்டே இருக்கிறோம். நிர்வாகமே சரியில்லை. பெண்கள் எல்லாம் விழுந்து, எழுந்து வருகிறோம். தண்ணீர் வசதி இல்லை. குழந்தைகள் மயக்கம் போட்டு விழ வேண்டியதுதான். எல்லோரும் மயக்கம் போட்டு விழ வேண்டியதுதான் என பெண்கள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.(பார்க்க வீடியோ)
இந்நிலையில் இன்று மாலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களை இருக்கையில் அமரவைத்து நேரடியாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். அவர்களோடு சென்று அண்ணாமலையாரை தரிசித்தார்.
கலெக்டருக்கு நன்றி
பவுர்ணமி நாளில் 2 நிமிடத்தில் சாமி தரிசனம் செய்ததை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்த அவர்கள் கலெக்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது,
வெளி மாநிலங்களிலிருந்து, வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கை குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, கிரிவலப்பாதையில் 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கோவிலுக்குள்ளாக 100 இடங்களில் குடிநீர் குழாய், 6 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமியில் தொடரும்
இன்றைய தினம் கோவிலுக்கு வருகின்ற கை குழந்தையை வைத்திருக்கின்ற பக்தர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு நேரடியாக சாமி தரிசனம் செய்ய தனி வரிசையை ஏற்படுத்தி அமர வைத்து உடனடியாக தரிசனம் ஏற்பாட செய்யப்பட்டது.
அவர்கள் 2 முதல் 3 நிமிடங்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தன்னார்வலர்களை கொண்டு இனிவரும் பௌர்ணமி நாட்களில் பந்தல் அமைத்து கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களை தனிவரிசையாக அமரவைத்து சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும்
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கலெக்டருடன் கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் சென்றிருந்தனர்.
வீடியோவை காண…