லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
சேத்துப்பட்டில் பட்டா மாறுதலுக்காக ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் நில அளவையர் அலுவலக பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு சர்வேயராக இருப்பவர் தீனதயாளன்.
கூட்டு பட்டா
செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கடந்த 2023ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சௌபாக்கியத்திடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலம் கூட்டு பட்டாவில் இருந்ததால் அதை பிரித்து தனிப்பட்டாவாக மாற்றிட நில அளவையர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இது பற்றி ஹரிகிருஷ்ணன், போட்டோகிராபரான தனது தம்பி சகாதேவனிடம் கூறினார். அவர் சர்வேயர் தீனதயாளனை அணுகினார். அவர் 3 கூட்டு பட்டாக்களை பிரிக்க ஒரு பட்டாவிற்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் கேட்டாராம். அதற்கு சகாதேவன் ரூ.10 ஆயிரம் தந்து விடுவதாக சொல்ல அதற்கு தீனதயாளன் சம்மதம் தெரிவித்தார். முன்பணமாக ரூ.5ஆயிரம் தருவது எனவும், மீதி ரூ.5ஆயிரத்தை வேலை முடிந்த பிறகு தருவதாகவும் முடிவு ஏற்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ்
இது குறித்து சகாதேவன், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து தீனதயாளனை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சகாதேவனிடம் கொடுத்து அனுப்பினர்.
அந்த பணம் ரூ.5ஆயிரத்தை எடுத்துக் கொண்டு சகாதேவன், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவிற்கு சென்றார். அங்கு தீனதயாளன் இல்லாததால் அவருக்கு போன் செய்தார். போனில் பேசிய தீனதயாளன் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுக்க சொன்னாராம். அதற்கு சகாதேவன், அலுவலகத்தில் காத்திருந்து உங்களிடமே கொடுத்து விடுகிறேன் என தீனதயாளனிடம் கூறினாராம்.
சிறிது நேரம் கழித்து அலுவலகத்திற்கு வந்த சர்வேயர் தீனதயாளனிடம் ரூ.5 ஆயிரத்தை சகாதேவன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீனதயாளனை கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.