என்னுடைய வாழ்க்கையை மாற்றியது திருவண்ணாமலை
அண்ணாமலை பெயர் வரக்காரணம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்- 5 வருடம் கிரிவலம் வந்ததாக தகவல்
அண்ணாமலையாரின் பக்தர் என்பதால் தனது தாத்தா தனக்கு அண்ணாமலை என பெயரிட்டதாகவும், தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது திருவண்ணாமலை என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் எனும் யாத்திரை மேற்கொண்டு நடைபயணமாக சென்று மக்களை சந்தித்தார்.
கலசப்பாக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
அரசு பள்ளிகளுக்கு மூடு விழா
பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போது ஜவ்வாதுமலைக்கு நிச்சயம் வருவேன். தமிழ்நாட்டில் தரமான கல்வி கிடைக்காதது பிரச்சினையாக உள்ளது. அரசு பள்ளிகள் தரம் இல்லாமல் உள்ளது. தனியார் பள்ளியில் கிடைக்கக்கூடிய கற்றல் திறன் அரசு பள்ளியில் கிடைக்கிறதா? என்றால் கிடைக்கவில்லை.
அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசு மூடு விழா நடத்திக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது தமிழ்நாட்டில் மட்டும் 11 ஆயிரத்து711 வகுப்பறைகள் குறைவாக இருக்கிறது என்று. பிரதமர் மோடி அவர்கள் உலகம் தர வாய்ந்த கல்லூரி இலவசமாக தர வேண்டுமென நினைக்கிறார். உதாரணத்துக்கு நவோதயா பள்ளிகள்.இந்தப் பள்ளிகள் இந்தியா முழுவதும் இருக்கிறது ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் திருட்டுத்தனமாக உள்ளே வர விடாமல் வைத்திருக்கிறார்கள்.
பழங்குடியினருக்காக மத்திய அரசு 8 ஏகலைவா பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று ஜவ்வாதுமலையில் உள்ளது. இங்கு இந்த பள்ளியை கொண்டு வருவதில் கூட சிரமம் உள்ளது ஏனென்றால் மத்திய அரசின் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தமிழகத்தில் வரவிடக்கூடாது என இங்குள்ள அரசியல்வாதிகள் கங்கணம் கட்டி உள்ளனர்.
எ.வ.வேலுவின் வளர்ச்சி
பிரதமர் மோடி பிஎம்ஸ்ரீ என்ற திட்டத்தின் கீழ் புதிய பள்ளியை கொடுத்திருக்கிறார். இந்தியாவில் 16 ஆயிரம் பள்ளிக்கூடங்களை 18,128 கோடி ரூபாயில் தர தயாராக இருக்கிறார். ஆந்திராவில் 662 பள்ளியும், கர்நாடகாவில் 129 பள்ளியும், தெலுங்கானா மாநிலத்தில் 543 பள்ளியும் வேண்டுமென கேட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பள்ளிக்கூடம் கூட வேண்டாம் என தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக மத்திய அரசுக்கு கொடுத்திருக்கிறார்கள். பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழை மக்களுக்கு ஒரு கல்வி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்தால் பட்டி தொட்டி எங்கும் மத்திய அரசின் இலவசமான பள்ளிக்கூடங்களை கொண்டு வருவது தான் முதல் வேலையாக இருக்கும்.
அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ரிப்பன் கட் பண்ணத்தான் ஸ்டாலின் வருகிறார். ஏழை மக்களுக்கான திட்டங்கள் கொடுப்பதற்கு வரமாட்டார். திமுகவுக்கு ஒரு ஏடிஎம் யார் என்றால் அது எ.வ.வேலுதான். மக்களின் வரி பணத்தை எல்லாம் கொள்ளை அடித்து அவர் வளர்ந்து கொண்டே இருக்கிறார். அம்பதாயிரம் கோடி, அறுபதாயிரம் கோடி சொத்து சம்பாதித்து வைத்துள்ளார். எப்படி இந்த மாவட்டம் முன்னேறும்? அவர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
பினாமி மூலமாக சொத்து
அவரது கல்லூரி பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை புதிய புதிய கட்டிடங்கள் அருணை கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறது ஆனால் ஏழை மக்களுக்கு தரமான கல்வி கட்டிடங்கள் வருகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கு சிப்காட்டிற்கு நிலம் தரமாட்டோம் என போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்தியாவில் எங்கும் நடக்காதது, திருவண்ணாமலை மட்டும் நடக்கிறது.
குண்டர் சட்டத்தில் அடைத்தது எனக்கு தெரியாது என எ.வ.வேலு கூறுகிறார். ஆனால் எந்தெந்த சொத்துக்கள் விலைக்கு வருவதற்கு தயாராக இருக்கிறது என்பது பற்றி அவருக்கு தெரியும். எல்லா சொத்துக்களையும் பினாமி மூலமாக வாங்குவதற்கு தெரிந்த எ.வ.வேலுவுக்கு விவசாய பெருமக்கள் மீது குண்டாஸ் போடுவது தெரியாது என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.
இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் நம்மிடம் உள்ளனர். சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 6000 கொடுக்கப்பட்டது. அது மத்திய அரசு பணம். ஆனால் ஸ்டாலின் கொடுத்தது இரண்டு ரூபாய் கவர் மட்டும். மாப்பிள்ளை எங்களுடையது, சட்டை உங்களுடையது என்பது போல திட்டங்கள் அனைத்தும் நம்முடையது. நிறைவேற்றக்கூடிய ஸ்டிக்கர் மட்டும் திமுகவுக்கு.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலையில் காமராஜர் சிலையிலிருந்து நடைபயணத்தை துவக்கிய அண்ணாமலை, காந்தி சிலையில் முடித்தார். வழி நெடுகிலும் அவர் பொதுமக்களிடம் கைகுலுக்கியதோடு, செல்பியும் எடுத்துக் கொண்டார்.
பிறகு காந்தி சிலை அருகில் அவர் பேசியதாவது,
திருவண்ணாமலை அருமையான தளத்தில் 171 தொகுதியாக நம்முடைய யாத்திரை நடக்கிறது. எல்லோரையும் விட எனது ஊனோடும், உடம்போடும், ரத்தத்தோடு கலந்து இருக்க கூடிய ஸ்தலம் திருவண்ணாமலை. என்னுடைய தாத்தா அடிக்கடி இங்கே வருவார். இங்கிருந்து 150 கிலோ மீட்டர் என்னுடைய கிராமம். தொலைவில் இருந்தாலும் கூட என்னுடைய தாத்தா அடிக்கடி வரக்கூடிய ஊர். அதனால் இங்கு இருக்கிற சாமியின் பேரை வைக்க வேண்டுமென அண்ணாமலை என்ற பெயரை ஞாபகார்த்தமாக சூட்டினார்.
5 வருடம் கிரிவலம்
கல்லூரியில் படிக்கும் போது தொடர்ச்சியாக எல்லா பௌர்ணமி கூட இங்கு வருவதற்கு பாக்கியம் கிடைத்தது. லட்சக்கணக்கான மக்கள் இந்த கிரிவலப் பாதையில் நடக்கும் போது நானும் ஒரு மனிதனாக கிரிவல பாதையில் இருப்பேன். ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி இங்கே வந்து மனதுக்கு ஒரு பெரிய அமைதியை, எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு, ஆண்டவனுடைய அருள் கிடைத்தது. என்னுடைய வாழ்க்கை மாற்றியது எல்லாம் இந்த இந்த சாலைகளும், திருவண்ணாமலை கடவுளும் தான்.
நாம் ஒன்றாக இணைந்து தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இப்போது இருக்கக்கூடிய அரசியல் அடுத்த முப்பது ஆண்டுக்கு தமிழகத்தை முன்னேற்றக் கூடிய அரசியல் இல்லை என்பதை முழுவதுமாக உணர்ந்து இந்த யாத்திரை செல்லும் இடங்கள் எல்லாம் ஒரு பெரிய எழுச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள், தாய்மார்கள் எல்லோரும் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுகின்றோம், என்ன செய்யப் போகிறோம், தமிழகத்திற்கான நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது, எப்படிப்பட்ட மாற்றத்தை நாம் கொண்டு வரப் போகிறோம் என்கின்ற ஆவல் இங்க இருக்கிற ஒவ்வொருவரும் உள்ளது.
அரசியல் திருப்புமுனை
இப்போது ஒரு அரசியல் திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறோம் 2024 பாராளுமன்ற தேர்தல் என்பது எத்தனையோ தேர்தல் வந்திருந்தாலும் கூட இது ஒரு திருப்புமுனை சரித்திரத் தேர்தல். பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகள் இந்தியா முன்னேற்ற பாதையில் இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஊழல் என்ற பெயரை மட்டும் காங்கிரஸ் வாங்கி கொடுத்தது.
இன்றைக்கு 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்தியா வளர்ச்சி பாதையில், உலகத்திலே வேகமாக வளரக்கூடிய நாடாக, 11 வது பெரிய பொருளாதார நாடாக இருந்த நம்முடைய நாடு இன்று ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி பட்டி தொட்டி எல்லாம் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் நரேந்திர மோடி என்ற மனிதர். அரசியல் இலக்கணத்தில் லஞ்ச, லாவண்யம், ஊழல் இல்லாமல் ஆட்சியை நடத்திக் காட்ட முடியும் என்று பத்து ஆண்டுகளாக இந்திய ஜனநாயகத்தில் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்திய அரசியலில் இது போன்ற ஒரு தலைவர் வந்ததில்லை. உலகத் தலைவர்கள் பார்வை எல்லாம் இந்தியா மீது உள்ளது. ஏனென்றால் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் மூன்று ஆண்டுகளில் உலகத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் நாடாக முன்னேற போகிறோம். வளர்ச்சி இருந்தாலும் கூட நமது பாரம்பரியத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம். இந்தியா ஒரு சனாதன தர்மம் இருக்கக்கூடிய நாடு, இந்து தர்மத்தை மக்கள் அனைவரும் பின்பற்றக் கூடிய நாடு, இந்து வாழ்வியல் முறை முறையாக இருக்கக்கூடிய நாடு என்பதை பத்தாண்டுகளாக மீட்டெடுத்து இருக்கிறோம்.
எல்லோருடைய எதிர்பார்ப்பும் மிகத் தெளிவாக இருக்கிறது ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வாழப் போகிறோம். அது மோடி அவர்களால் முடியும். நாங்கள் மோடியின் பக்கம் இருக்கப் போகிறோம். ஆண்ட கட்சிகள், ஆளுகின்ற கட்சிகளுக்கு நாங்கள் கவனம் கொடுக்கப் போவதில்லை தமிழ்நாட்டில் என்கிற உறுதியான நிலைப்பாடில் நின்று கொண்டிருக்கிறோம்.
திருவண்ணாமலையின் மகாராஜா
இது பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம். மிகப்பெரிய ராஜாக்கள் சிவபெருமானை மண்டியிட்டு, வணங்கி விட்டு சென்ற கோயில். எவ்வளவு பெரிய ராஜாவா இருந்தாலும் ராஜாவுக்கு ராஜா திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய மகாராஜா. ஆனால் இந்த கோவிலில் அநியாயம் நடக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். நீங்களும் நானும் இங்கிருந்து கோபுரத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு சென்றிருக்கிறோம். இன்றைக்கு கோபுரத்தை மறைத்து ஒரு வணிக வளாகம் கட்டும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறது. இதை கண்டித்து பாஜக போராட்டம் நடத்திய போது நாயை தூக்கி சொல்வது போல் தூக்கி சென்றார்கள். மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். கடைசியில் கோர்ட்டு தடை விதித்து விட்டது.
கோபாலபுரத்து குடும்பத்தில் ஒரு இன்ஷியலை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். திமுக ஆட்சி நேர்மைக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஒரு பக்கம் லஞ்சம், ஒரு பக்கம் குடும்ப ஆட்சி, ஒரு பக்கம் ஜாதி அரசியல், ஒரு பக்கம் அடாவடித்தனம் என்ற நான்கு கால்களை வைத்து ஆட்சி நடத்தினால் எப்படி சமுதாயம் முன்னேறும்? சாராயத்தின் மூலமாக 44 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது என்று பெருமையாக ஒரு முதலமைச்சர் சொன்னால் அது சமுதாயத்துக்கு பெருமையா? இதனால் நாம் கூனி குறுகி, கைகட்டி நின்று கொண்டிருக்கிறோம்.
ஆண்டவன் அனுப்பிய தலைவன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மோடி என்ற மாபெரும் தலைவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும்போது அதை இழப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமோ என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். அமெரிக்கா, சீனாவை நேருக்கு நேர் பார்த்து ஆட்சியை நடத்தக்கூடிய தலைவர் மோடி. பயம் என்னவென்று தெரியாத தலைவர். நேர்மை மட்டும் தன் உள்ளத்திலே, உடம்பிலே வைத்து ஆட்சி நடத்தக்கூடிய ஒரு தலைவர். ஏழை மக்கள் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர். இத்தனை குணம் கொண்ட ஒரு தலைவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சமுதாயத்துக்கு கிடைப்பான். அதை ஆண்டவன் அனுப்பி வைப்பான். எனவே 2024 தேர்தலில் தமிழக மக்களுக்கு, திருவண்ணாமலை மக்களுக்கு ஒரே ஒரு அன்பு கேள்வி இந்த வாய்ப்பை நாம் விடப் போகிறோமா? 2014, 2019 இல் செய்த வரலாற்று பிழையை 2024 செய்ய போகிறோமா?
வாரணாசி போல் திருவண்ணாமலை
எங்கள் எம்பி வரட்டும். வாரணாசி எப்படி உலகின் மையப் புள்ளியாக இருக்கிறதோ அதே போல் திருவண்ணாமலையை மைய புள்ளியாக கொண்டு வருகிறோம். அதற்கு ஒரு எம்பி வரணும். ஆயிரம் கோடியை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாங்கள் கொண்டு வருகிறோம். அது எங்களுடைய பொறுப்பு. இந்த ஊரை மாற்றி காட்டுகிறோம்.
பௌர்ணமி அன்று கடையை பூட்டி விட்டு யாரும் ஓட வேண்டாம். மூன்று நாள் டிராபிக்கால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்க வேண்டாம். இந்த ஊரை ஒரு மாடர்ன் சிட்டியாக எப்படி வாரணாசியை பாரதப் பிரதமர் மாற்றிக் காட்டி இருக்கிறாரா அதே போல் திருவண்ணாமலையை எங்களால் மாற்றிக் காட்ட முடியும். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நம்பிக்கையோடு மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.
பெரிய பெரிய மகான்கள் வாழ்ந்த ஊர் இதுவாகும். ரமணாஸ்ரமத்திற்கு உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வருகிறார்கள். அவர்களுக்கு நாம் வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோமா? ரோடு சரியாக இருக்கிறதா? பஸ் நிலையம், ரயில்வே நிலையம் சரியாக இருக்கிறதா? பக்கத்தில் விமான நிலையம் உள்ளதா? எத்தனை ஜீவ சமாதிகள் இங்கு இருக்கிறது. இந்தியாவில் அதிகமாக ஜீவசமாதிகள் இந்த மண்ணில்தான் உள்ளது. எவ்வளவு பெரிய புண்ணிய மண் இது.
அயோத்தியில் ராமர் சிலை திறப்புக்கு பிறகு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு அயோத்தியாவில் இருக்கிற ராமர் கோவில் மூலமாக உத்தரபிரதேசத்திற்கு வரக்கூடிய வருமானம் 25 ஆயிரம் கோடி. ஒரு கோவில் 25 ஆயிரம் கோடியை ஈட்டி தர போகிறது.
தமிழ்நாட்டில் கோயிலுக்கா பஞ்சம்? எதையும் செய்யாமல் ஒரு காவி வேட்டி கட்டிக்கிட்டு ஒரு பட்டையை போட்டு கொண்டு ஏமாற்றுவதற்காக ஒரு அறநிலையத்துறை அமைச்சர் இருக்கிறார். அவரை வரலாறு மன்னிக்கப் போவதில்லை பொங்கல் அன்று முதலமைச்சருக்கு சென்று ராமாயணம் புத்தகத்தை பரிசாக கொடுக்கிறார். படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்று கிராமத்தில் சொல்வார்கள். அது போன்று இந்து மக்களுக்கு எதிராக ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் ஒரு மோசமான ஆட்சி என்றால் அது திமுக ஆட்சித்தான். எந்த காரணத்துக்காகவும் நாம் அவர்களை மன்னிக்க கூடாது.
அரசியலை விட்டு சென்று விடுவேன்
தமிழ்நாட்டில் என்ன பிரச்சனை என்றால் வருகிறவன், போகிறவன் எல்லாம் கல்வி தந்தையாகி விடுகிறார்கள். சாராயம் காய்ச்சுபவர்கள் ஸ்கூல் ஆரம்பித்த உடனே கல்வித் தந்தை என்ற பட்டத்தை போட்டுக் கொண்டு தனியார் கல்லூரிக்கு பணத்தை கொடுத்து டாக்டர் பட்டத்தை வாங்கி விடுகிறார்கள். அதில் எ.வ.வேலு ஒரு உதாரணம். வேலுவிற்கு உண்மையான மானம் ரோஷம் இருந்தால் மத்திய அரசினுடைய நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்லுங்கள். 100 பள்ளிகளில் ஒரு வாரத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம்.
போட்டி வைத்துக் கொள்வோம். உங்கள் இண்டர்நேஷனல் பள்ளி நவோதயா பள்ளியிடம் போட்டி போட்டு ஜெயித்தால் அந்த நிமிடம் நான் அரசியலை விட்டு சென்று விடுவேன். அண்ணாமலையாரின் பாதத்தில் நின்று கொண்டு இந்த சத்திய வாக்கை சொல்லுகிறேன்.
நீங்க ஒரு இண்டர்நேஷனல் ஸ்கூலை பெரிய ஆட்களுக்கு மட்டும் கல்வி கிடைக்க வேண்டும் ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்று நடத்துகிறீர்கள். ஆனால் நவோதயா பள்ளியில் ஒரு பைசா கட்டணம் இல்லை சீருடை, சாப்பாடு எல்லாமே இலவசம். ஒரு மாவட்டத்திற்கு மூன்று பள்ளி அல்லது இரண்டு பள்ளி கொண்டு வருகிறோம். ஒரு வருஷம் கழித்து நவோதயா பள்ளிக்கும், இன்டர்நேஷனல் பள்ளிக்கும் திறன் தேர்வு வரும் போது இண்டர்நேஷனல் பள்ளி ஜெயித்து விட்டால் அன்றைக்குத் தான் எனது அரசியலின் கடைசி நாளாக இருக்கும். அந்த சவாலுக்கு நீங்கள் வரவேண்டும்.
ஏழை மக்கள் ஏழை மக்களாக இருக்க வேண்டும், கைகட்டி உனக்கு சேவை செய்ய வேண்டும். நீ ஆட்சியில் அப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டும். இன்பநிதியை ட்ரெய்லர் போட்டு ரிலீஸ் பண்ணி விட்டார்கள். இது நான்காவது தலைமுறை. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் கைகட்டி நின்று கொண்டிருக்க, ஒரு குடும்பம் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்க வேண்டும். இதுதான் உங்கள் திட்டம். இந்த மாடலுக்கு பெயர் தான் திராவிட டெவலப்மெண்ட் மாடல். இதை உடைத்து காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு பிரதமர் நலத்திட்டங்களில் பயனடைந்த 10 பேருக்கு வாழ்த்து கடிதத்தை வழங்கினார்.
இந்த யாத்திரையில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத்கண்ணா, குமாரராஜா, முருகன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் ரமேஷ், கோட்ட இணை பொறுப்பாளர் பிரதீஷ்குமார், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் நேரு, நகரத் தலைவர் மூவேந்தன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.