வேண்டாம் வம்பு, பின்வாங்கிய போலீஸ்-பாமகவிற்கு வெற்றி
3 ஆயிரம் பேர் திரண்டு வந்து அக்னி கலசத்தை நிறுவியதால் பரபரப்பு
நாயுடுமங்கலத்தில் போக்குவரத்து நிறுத்தம்-1300 போலீசார் பாதுகாப்பு
பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின் காரணமாக திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தில் அக்னி கலசம் இன்று வெற்றிகரமாக நிறுவப்பட்டது. தேர்தல் நேரத்தில் வேண்டாம் வம்பு, அக்னி கலசம் நிறுவுவதை தடுக்க வேண்டாம் என மேலிடத்திலிருந்து சிக்னல் வந்ததால் போலீசார் பாதுகாப்பு அளித்து விட்டு சென்றனர்.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் கடந்த 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
நிழற்குடை மற்றும் சாலை விரிவாக்கதிற்காக அகற்றப்பட்ட இந்த அக்னி கலசம், மீண்டும் வைக்கப்பட்டது. திடீரென வந்த அரசியல் பிரஷரை அடுத்து அந்த கலசத்தை போலீஸ் துணையோடு அதிகாரிகள் அகற்றினர். இதை கண்டித்து பல போராட்டங்களை பாமக நடத்தியது.
ராமதாஸ் எச்சரிக்கை
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் அக்னி கலச பிரச்சனையை கையிலெடுத்தது பாமக. கடந்த 10ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அகற்றப்பட்ட இடத்தில் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் பாமவினர் திரண்டு மீண்டும் அக்னி கலசத்தை நிறுவினர். அந்த கலசத்தை போலீசார் அகற்றி பக்தவச்சலம் உள்பட 15 பேரை கைது செய்தனர்.
இதை கண்டித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து, நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கார், பைக்குகளில் அணிவகுப்பு
இந்நிலையில் இன்று காலை நாயுடுமங்கலத்தில் அக்னி கலசத்தை வைப்பதற்காக திருவண்ணாமலையில் இருந்து பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் மோட்டார் சைக்கிள், கார், வேன்களில் அக்னி கலசத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையிலும், பாமக செயலாளர் பக்தவச்சலம் முன்னிலையிலும் 100 மோட்டார் சைக்கிள், 50 கார்கள், 10 வேன்களில் நிர்வாகிகளும், தொண்டர்களும் நாயுடுமங்கலத்தை நோக்கி சென்றனர். அங்கு பழைய இடத்திலேயே வெற்றிகரமாக அக்னி கலசத்தை வைத்தனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பாமக தொண்டர்கள் அக்னி கலசத்திற்கு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாமக கொள்கை பரப்புச் செயலாளரும், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான மீ.கா.செல்வகுமார், சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், திரைப்பட இயக்கநர் கௌதமன், மாவட்ட செயலாளர்கள் அ.கணேஷ்குமார், இல.பாண்டியன், ஆ.வேலாயுதம் உள்பட 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இந்த சம்பவத்தை யொட்டி இன்று காலை வேங்கிக்கால் முதல் நாயுடுமங்கலம் வரை போலீசார் குவிக்கப்பட்டனர். அக்னி கலசத்தை வைக்காமல் தடுக்க ஆங்காங்கே திரளும் பாமகவினரை தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதனால் சாலையில் தடுப்புகளை அமைத்திருந்தனர். எதிர்பார்த்ததை விட பாமகவினர் திரண்டதால் போலீசார் திகைத்தனர்.
1300 போலீசார் பாதுகாப்பு
இதனிடையே அக்னி கலசத்தை நிறுவுவதை தடுக்க வேண்டாம் என மேலிடத்தில் இருந்து திடீரென போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்தது. இதனால் எந்தவித இடையூறும் இன்றி நாயுடுமங்கலத்தில் பாமகவினர் அக்னி கலசத்தை அமைக்க முடிந்தது. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அக்னி கலசம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்தினால் அந்த சமுதாயத்தின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என நினைத்து ஆளும்கட்சி பச்சை கொடி காட்டியதாக சொல்லப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்து அந்த கலசத்தை அதிகாரிகள் மீண்டும் அகற்றாமல் இருப்பதை தடுக்க பெரிய பீடம் அமைத்து அதன் மீது அக்னி கலசத்தை அமைக்க பாமகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை யொட்டி அசாம்பாவிதங்களை தடுக்க வேலூர் டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் 6 ஏடிஎஸ்பி உள்பட 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தினால் நாயுடுமங்கலத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.