திருவண்ணாமலை கோயிலில் பெண் பக்தர் மரணம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்து விட்டு சென்ற பெண் பக்தர்கள் நெஞ்சு வலி வந்து இறந்தார்.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, பவுர்ணமி, விடுமுறை நாட்கள் மட்டுமன்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதில் பெரும்பாலும் ஆந்திர பக்தர்கள் அதிகம். பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததின் காரணமாக கோயிலின் மாத வருமானமும் ரூ.3 கோடியை தாண்டி வருகிறது. இவ்வளவு வருமானம் பக்தர்களிடமிருந்து கிடைக்க பெற்றாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்த கோயில் நிர்வாகம் தவறி விட்டது.
இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று அண்ணாமலையாரை தரிசிக்க சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் ரோட்டில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கியூவில் நின்றிருந்த திருவள்ளுரைச் சேர்ந்த விமானப்படை ஊழியர் ராஜராஜன் நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் போகபுரத்தைச் சேர்ந்த சச்சின் நாராயணின் மனைவி சாகமங்க மணி(வயது 57) என்பவர் கணவருடன் கோயிலுக்கு வந்திருந்தார்.
சம்மந்த விநாயகர் சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்ற போது சாகமங்க மணிக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த அவருக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி செய்தனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. தன் கண் எதிரில் மனைவி இறந்ததை பார்த்து கணவர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பிறகு மனைவியின் உடலை சொந்த ஊருக்கு அவர் எடுத்துச் சென்றார்.
கோயிலுக்குள் மரணம் நிகழ்ந்ததால் சாமிக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் மருத்துவ வசதிகள் சரிவர இருந்திருந்தால் பெண் பக்தரை காப்பாற்றி இருக்கலாம் என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தரும், இன்று ஒரு பக்தரும் நெஞ்சு வலி வந்து இறந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.