Homeஅரசியல்ஜூன் 5 சென்னைக்கு ரயில்-பாஜக வேட்பாளர் உறுதி

ஜூன் 5 சென்னைக்கு ரயில்-பாஜக வேட்பாளர் உறுதி

ஜூன் 5 சென்னைக்கு ரயில்-பாஜக வேட்பாளர் உறுதி
1000 பேருக்கு வேலை தரும் தொழிற்சாலை-கரும்பு விவசாயிகள் முதலாளிகளாக மாறுவர்-உண்டு உறைவிட வசதியுடன் இலவச கல்வி
மத்திய சுற்றுலா துறை கட்டுப்பாட்டில் அண்ணாமலையார் கோயில்

ஜூன் 4ந் தேதி எனது வெற்றி அறிவிப்பு வந்தவுடன், ஜூன் 5ந் தேதி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ரயில் விடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் உறுதி அளித்துள்ளார்.

மேலும் மத்திய சுற்றுலா துறை கட்டுப்பாட்டில் அண்ணாமலையார் கோயில் கொண்டு வரப்படும் என்றும், 1000 பேருக்கு வேலை தரும் தொழிற்சாலையும், 6 சட்டமன்ற தொகுதியிலும் உண்டு உறைவிட வசதியுடன் இலவச கல்வி அளிக்கும் பள்ளியும் கொண்டு வரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.அஸ்வத்தாமன், திருவண்ணாமலை கிரிவல பாதை இடுக்குப்பிள்ளையார் கோயில் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் தேர்ந்தெடுத்த எம்பி எந்தவித நலத்திட்ட உதவிகளையும் பெற்று தரவில்லை. இந்த மாவட்டத்தில் தான் ஒரு புதுமை, சுதந்திரம் அடைந்ததிலிருந்து யாரும் பார்க்காத ஒரு அவலம் நடந்திருக்கிறது. விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அண்ணாமலையார் கோயில் உள்ள ஒரு புனிதமான தலத்தில், வல்லாள மகாராஜா வாழ்ந்த புண்ணியமான பூமியில் அர்த்தநாரீச வர்மா முக்தி அடைந்த பூமியில் ஆன்மீகத்தை பயன்படுத்தி நிறைய சுரண்டல்கள் நடக்கிறது. மத்திய அரசிடம் இருந்து மோடி தருகிற நிதிகள் இந்த மக்களுக்கு முழுமையாக சென்று அடையவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு லஞ்சம் கேட்கப்படுகிறது. போதை பொருள் பரவலாக உள்ளது.

ஜூன் 5 சென்னைக்கு ரயில்-பாஜக வேட்பாளர் உறுதி

திருவண்ணாமலை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி ஜெயிப்பது உறுதி ஆகிவிட்டது. இங்கு பாஜக பலமாக உள்ளது. மக்கள் ஆதரவும் உள்ளது. நான் வெற்றி பெற்றால் இளைஞர்கள் முன்னேற்றம் அடைய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்பது ஏற்படுத்தப்படும். அனைத்து ஊராட்சிகளிலும் எனது பாராளுமன்ற அலுவலகங்கள் திறக்கப்படும்.

மாதம் ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இந்த பகுதி இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர். ராணுவத்திலும் பலர் சேருகின்றனர். எனவே இங்கு ராணுவத்திற்கான இலவச பயிற்சி முகாம் அமைக்கப்படும். விளையாட்டுப் பயிற்சி அளிக்க கூடங்கள் அமைக்கப்படும்.

அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறநிலைத்துறை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு மத்திய சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இந்த கோயிலை ஒரு கொள்ளையர்களின் கூடாரமாக மாற்றி வைத்திருக்கின்ற அந்த அறநிலையத்துறையிடமிருந்து கோயில் மீட்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் புதுப்பிக்கப்பட்டு பழமை மாறாமல் பாதுகாக்கப்படும்.

கரும்பு விவசாயிகள் பயன்படுகிற அளவுக்கு பயோ எத்தனால் தொழிற்சாலை திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் அமைக்கப்படும். கரும்பு விவசாயம் லாபம் அடையக்கூடிய தொழிலாக மாறும்.

ஜூன் 4-ம் தேதி எனது வெற்றி அறிவிப்பு வந்தவுடன் ஜூன் 5ஆம் தேதி திருவண்ணாமலை இருந்து சென்னைக்கு ரயில் செல்லும் விதம் ரயில் பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு நான் அளிக்கக்கூடிய முதல் வாக்குறுதி.

பிரதமரின் பிஎம்ஸ்ரீ பள்ளி

எல்லா இளைஞர்களுக்குமான வேலைவாய்ப்பு என்பது இந்த பாராளுமன்றத்துக்குள் சாத்தியப்படும். இது அடுத்த வாக்குறுதி. பயோ எத்தனால் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர முடியும். கரும்பு விவசாயிகள் முதலாளிகளாக மாற்றப்படுவார்கள்.

நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வந்திருந்தால் கூட ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் கட்டணம் இல்லாமல் உண்டு, உறைவிடத்துடன் ஆறிலிருந்து வரை பிளஸ் 2 வரை இலவசமாக கல்வி கற்றிருக்க முடியும். இப்பள்ளி இந்தியா முழுவதும் உள்ளது. அந்தமானில் உள்ளது, பாண்டிச்சேரியில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை காரணம் காட்டி இங்கு வரவிடாமல் செய்தனர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவன் நான். நான் வெற்றி பெற்றால் பாரத பிரதமரின் பிஎம்ஸ்ரீ பள்ளி ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின் போது கோட்ட அமைப்பாளர் டி.எஸ்.குணசேகரன், மாவட்ட தலைவர்கள் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், வாசுதேவன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் டி.எஸ்.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!