அதிகாலை நேரத்தில் பாமக அதிரடி-போலீஸ் டென்ஷன்
எ.வ.வேலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்- ராமதாஸ் அறிக்கை
நாயுடுமங்கலத்தில் அதிகாலை நேரத்தில் அக்னி கலசத்தை நிறுவிய பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் கடந்த 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
அதிகாரிகள் வாக்குறுதி
இந்நிலையில் அப்பகுதியில் நிழற்குடை கட்டுவதற்காக அக்னி கலசத்தை எடுக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிழற்குடை கட்டும் பணி முடிவடைந்ததும் அக்னி கலசத்தை மீண்டும் வைத்துக் கொள்ள அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் அக்னி கலசம் அங்கிருந்து அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. பிறகு திடீரென அந்த கலசத்தை போலீசாரின் துணையோடு அதிகாரிகள் அகற்றினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாமகவினர் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகளை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
15 பேர் கைது
இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் அகற்றப்பட்ட இடத்தில் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் பாமவினர் திரண்டு மீண்டும் அக்னி கலசத்தை நிறுவினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிகாலை 4-30 மணியளவில் அங்கு வந்த போலீசார் அக்னி கலசத்தை அகற்றி எடுத்துச் சென்றனர். மேலும் மாவட்ட செயலாளர் பக்தவச்சலம், தெற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் க.நாராயணசாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி உள்பட 15 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதைக் கேள்விப்பட்டதும் பாமகவினர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டு அசாம்பாவிதத்தை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அக்னி கலசத்தை அகற்றப்பட்ட இடத்தில், பாமக கொள்கை பரப்புச் செயலாளரும், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான மீ.கா.செல்வகுமார் தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர்கள் அ.கணேஷ்குமார், இல.பாண்டியன், ஆ.வேலாயுதம் உள்பட 200க்கும் மேற்பட்ட பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஊருக்கெல்லாம் ஒரு நீதி, வன்னியர்களுக்கு அநீதி, கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், வன்னியர் விரோதி எ.வ.வேலுவை கண்டிக்கிறோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனிடையே அக்னி கலசத்தை நிறுவுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாமக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் திருப்தி ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. எனவே வருகிற 12ந் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்த பாமகவினர் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் புதிதாக அமைக்கப்பட்ட அக்கினிக்கலச சின்னத்தை நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் இன்று அதிகாலையில் அமைத்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அக்கினிக் கலச சின்னத்தை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி பா.ம.க.வினரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
விதிகளுக்கு மாறாக சிலைகள்
நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னம் அமைக்கப்பட்டதால் கடந்த காலங்களில் போக்குவரத்துக்கோ, அல்லது வேறு வகையிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதை மாவட்ட நிர்வாகமே ஒப்புக்கொள்ளும் வகையில் தான் சாலை மேம்பாட்டுப் பணிகளின் போது அகற்றப்பட்ட அக்கினிக்கலச சின்னம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது, அக்கினிக் கலச சின்னம் 2022-ஆம் ஆண்டில் அகற்றப்பட்டது ஏன்? அதன்பின்னர் இரு ஆண்டுகளாக பேச்சு நடத்தியும் அக்னிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளிக்காதது ஏன்?
இந்த சிக்கலில் இரு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மாவட்ட நிர்வாகம், இப்போது மட்டும் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்ட அக்கினிக் கலச சின்னத்தை ஒரு சில நிமிடங்களில் அகற்றியது ஏன்? யாரை திருப்திப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கைகளைக் கட்டிக் கொண்டு கட்டளைகளை நிறைவேற்றுகிறது? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விளக்கியாக வேண்டும்.
திருவண்ணாமலை, நாயுடுமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல சிலைகளும், சின்னங்களும் உள்ளன. அண்மையில் கூட விதிகளுக்கு மாறாக சிலைகள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது. ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அக்கினிக் கலச சின்னத்தை மட்டும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மீண்டும், மீண்டும் அகற்றுகிறது என்றால், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
பாடம் புகட்டுவோம்
அக்கினிக் கலசம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. அதை பலவீனமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கருதினால் அவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
எனவே, வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து, நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.