சிவராத்திரி: 10 கிலோ சலங்கை கட்டி ஆவேச நடனம்
அறங்காவலர்கள் தடையால் மனம் வருந்தி சென்ற கலை குழுவினர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் 10 கிலோ சலங்கையை கட்டி கலைஞர்கள் ஆவேச நடனம் ஆடினர். இந்நிலையில் அறங்காவலர்கள் கலைநிகழ்ச்சிகளை பாதியில் நிறுத்தியதால் கலைஞர்கள் மனம் வருந்தி சென்றனர்.
படைப்புக் கடவுளாகிய பிரம்மனும், காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும் தன்னில் யார் பெரியவர் என பல வாதங்கள் புரிந்து இறுதியில் சண்டையிட்டனர். அவர்களுடைய ஆங்காரத்தை போக்கிட அவர்களால் அளவிடமுடியாத சிவலிங்கத் திருவுருவில் அடிமுடி காண இயலாத ஜோதி பிழம்பாக, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் காட்சியளித்தார். அந்நாள்தான் சிவராத்திரியாகும்.
சிவபெருமானுக்குரிய திருவடிவங்களில் முதலாவதாக அமைவது லிங்கோத்பவமூர்த்தி அது அருவுருவாகும். இறைவன் அருவாகவே நின்றால் உலகுயிர்களுக்குப் பெருநன்மை விளைவிக்க முடியாது என்று திருவுள்ளம் கொண்டு அவர்களின் கண்காணத் தோன்ற நினைத்தபோது முதலில் அருவுருவாகவும் பின்பு உருவாகவும் தோற்றியருளினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறம் சுவற்றில் லிங்கோத்பவர் அமைய பெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இவரை வழிபடுவர்களின் ஆணவத்தை அவர் அகற்றி விடுவார் என்பது ஐதீகம். தன்னுடைய அடிமுடியை பிரம்மா கண்டதாக பொய் சாட்சி கூறிய தாழம்பூவை இறைவன் இனி எந்த பூஜைக்கும் நீ ஏற்றதல்ல என சபித்தார். தாழம்பூ மனம் வருந்தவே சிவராத்திரி அன்று மட்டும் பூஜையில் பங்கேற்கும் வரம் அதற்கு கிடைத்ததாக வரலாறு.
அதன்படி அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு லிங்கோத்பவருக்கு தாழம்பூ வைத்து பூஜை செய்யப்பட்டது. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு ஈசான்ய மைதானத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை கயிலாய வாத்தியம், வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், விவாத மேடை, பக்தி இசை, நாட்டிய நாடகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய, விடிய நடைபெற்றன.
இதில் பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டமும், பெருஞ்சலங்கையாட்டமும் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் 110 கலைஞர்கள் பங்கேற்றனர். பெருஞ்சலங்கையாட்டத்தில் ஒவ்வொருவரும் 10 கிலோ கொண்ட சலங்கைகளை காலில் கட்டி நடனம் ஆடி காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த அண்ணாமலையார் கோயில் அறங்காவலர்கள், சுகி சிவத்தின் விவாத மேடை நிகழ்ச்சியை நடத்த இருப்பதால் கலை நிகழ்ச்சியை நிறுத்தும்படி சொன்னதால் பாதியிலேயே அந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் ஈரோடு கொங்கு நாட்டு கலைக்குழுவைச் சேர்ந்த கே.கே.சி.பாலு, வள்ளி கும்மியாட்டத்திற்கும், பெருஞ்சலங்கையாட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நேரம் போதாது, அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது என அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டு அறங்காவலர்களுக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு தனது குழுவினரோடு புறப்பட்டு சென்றார்.