அண்ணாமலையார் கோயில் வசம் ரூ.20 கோடி மதிப்புள்ள இடம்
பிரதான இடத்தில் 10ஆயிரம் சதுர அடி இடத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்தியது.
திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் ரூ.20 கோடி மதிப்புள்ள 10 ஆயிரம் சதுர அடி இடத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் கையகப்படுத்தியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்னை, வேலூர் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப் பகுதிகளிலான பொற்குணம், பள்ளிக்கொண்டாப்பட்டு, அடிஅண்ணாமலை, துரிஞ்சாபுரம் உள்பட பல ஊர்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத் துறை இறங்கியுள்ளது.
இதன் காரணமாக திருவண்ணாமலை துராபலி தெருவில் (புகழ் தியேட்டர் அருகில்) 8 ஆயிரம் சதுர அடி இடம் கடந்த ஆண்டு மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். இதே போல் வேட்டவலம் ரோட்டில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்த இடம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் வீட்டிற்கு அருகில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் அனுபவித்து வந்தனர். ஆரம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தனது கட்சி ஆபீசாக பயன்படுத்தி வந்தார். பிறகு பைக் ஷோரூம் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு வீட்டு உபயோக பாத்திரங்கள் விற்பனை நிலையமாக அந்த இடம் செயல்பட்டு வந்தது.
அந்த இடத்தை கையகப்படுத்த கோயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து அந்த இடத்தை கோயில் நிர்வாகத்தினர் கையகப்படுத்தினர்.
கையகப்படுத்தப்பட்ட இடத்தில் “இந்த இடம் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சொந்தமானது, அத்துமீறி பிரவேசிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மார்க்கெட் ரேட் பிரகாரம் ஒரு சதுர அடி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆவதாகவும், எனவே மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.20 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மத்திய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து இந்த வழியாகத்தான் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வர வேண்டும். எனவே மீட்கப்பட்ட இடத்தை வணிக ரீதியான காரியங்களுக்கு பயன்படுத்தாமல் பக்தர்களுக்கு பயன் அளிக்கும் காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.