வெயில் கொடுமை-சுருண்டு விழுந்து இறந்த பக்தர்
அண்ணாமலையாரை தரிசிக்க கியூவில் காத்திருந்த போது பரிதாபம்
முன்னேற்பாடுகள் இல்லாததால் கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி
விரைவாக தரிசனம்-கலெக்டர் உறுதி
சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலில் 1 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்தனர். அப்போது ஒரு பக்தர் நெஞ்சு வலி வந்து சுருண்டு விழுந்து இறந்தார்.
பங்குனி மாத பவுர்ணமி இன்று காலை 9.54 மணிக்கு தொடங்கியது. நாளை பகல் 12.29 மணிக்கு பவுர்ணமி நிறைவடைகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலையிலிருந்தே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர ஆரம்பித்தனர்.
இன்று காலை பக்தர்கள் குவிய தொடங்கினர். சாமிக்கு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெறுவதால் கோயிலுக்கு செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். போக, போக இந்த வரிசை நீண்டது. ராஜகோபுரத்திலிருந்து ஆரம்பித்த கியூ தேரடித் தெரு, பெரியத் தெரு வரை சென்றது.
இன்று திருவண்ணாமலையில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் ரோட்டில் காலணி அணியாமல் வெறும் காலோடு நின்றிருந்த பக்தர்கள் தவியாய் தவித்தனர். உச்சி வெயிலில் சோர்ந்து போயினர். பெரிய தெருவில் வரிசையில் நின்றிருந்த திருவள்ளூர் வசந்தம் நகரைச் சேர்ந்த ராஜராஜன்(வயது 59) என்பவர் நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பக்தர் ஒருவர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட அதிகாரிகள் அதன்பிறகே விழித்துக் கொண்டு பக்தர்கள் வரிசைகளில் நின்ற சாலைகளில் தண்ணீர் ஊற்றி வெப்பத்தை தணித்தனர்.
அண்ணாமலையாரை தரிசிக்க 7 மணி நேரத்திற்கும் மேல் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர். கோயிலுக்கு வெளியே பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி, சாலைகளில் வெப்பத்தை தணிக்க லாரிகள் மூலம் தண்ணீரை தெளிப்பது, மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்திருப்பது, சாலைகளில் ஆங்காங்கே தற்காலிக பந்தல்களை அமைப்பது, காத்திருக்கும் கூடம் அமைப்பது என எந்த முன்னேற்பாடையும் செய்யாததால் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் கை குழந்தையுடன் வருகின்ற பக்தர்கள் தனி வரிசையில் நின்று விரைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பிறகு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், தற்போது கோயிலுக்குள் மூன்றடுக்கு நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றார்கள். இதில் இரண்டடுக்கு வழியானது மேலும் அகலப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இருமடங்கு விரைவாக தரிசனம் மேற்கொள்ளப்படும். ஒருவர் ஒருவராக வந்த வழியில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று நபர்கள் தரிசனம் செய்யக்கூடும். இரண்டு நபர்கள் தரிசனம் செய்த வழியில் ஆறு நபர்கள் தரிசனம் செய்யும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று நிலைகளிலும் தரிசனம் மேற்கொள்ளப்பட்டு, வருகின்ற பக்தர்கள் எந்தவித சிரமமின்றி விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
சுட்டெரிக்கும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்த பக்தர் நெஞ்சு வலி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.