திருவண்ணாமலை வேட்பாளர்கள் சொத்து விவரம்
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது தங்களது சொத்து விவரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ந் தேதி தொடங்கியது. நாளை 27ந் தேதி புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 28ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 30ந் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி அண்ணாதுரையும், அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கலியபெருமாளும், பாஜக சார்பில் அஸ்வத்தாமனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ்பாபுவும் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் பாஜக வேட்பாளரை தவிர அனைவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டனர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இன்று செவ்வாய்கிழமை மட்டும் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு 14 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 9 பேர் சுயேச்சைகள்.
இந்நிலையில் வேட்பு மனுவில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவில் இணைத்துள்ள உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் வருமாறு,
திமுக வேட்பாளர் அண்ணாதுரை
திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை தனது உறுதி மொழி பத்திரத்தில் அசையும் சொத்து 1 கோடியே 82 லட்சத்து 11 ஆயிரத்து 317 ரூபாய் எனவும், அசையா சொத்து 4 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கையில் உள்ள ரொக்கம், வைப்புத் தொகைகள், செய்யப்பட்ட முதலீடுகள் சேமிப்பு திட்டங்கள், அளிக்கப்பட்ட தனிப்பட்ட கடன்கள், பெறப்பட்ட கடன் தொகைகள், வாங்கப்பட்ட மோட்டார் வண்டிகள், தங்கம், வெள்ளி நகைகளின் மதிப்பு, வரவேண்டிய தொகைகள் என சி.என்.அண்ணாதுரைக்கு 1 கோடியே 82 லட்சத்து 11 ஆயிரத்து 317 ரூபாய் எனவும், அவரது மனைவிக்கு 8 கோடியே 50 லட்சத்து 59 ஆயிரத்து 815 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் நிலுவையாக உள்ள தொகை, கடனின் தன்மை என்ற பகுதியில் சி. என். அண்ணாதுரைக்கு 1 கோடியே 69 லட்சத்து 35 ஆயிரத்து 418 ரூபாயும், அவரது மனைவிக்கு 22 லட்சத்து 21 ஆயிரத்து 538 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.என்.அண்ணாதுரை பாராளுமன்ற உறுப்பினராக டெல்லியில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்த போது வாடகை, மின் கட்டணங்கள், குடிநீர் கட்டணங்கள், தொலைபேசி கட்டணங்கள் நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழை இணைத்து இருக்கிறார்.
தனக்கு வருமானங்கள் விவசாயம், வங்கி வட்டி மற்றும் இதர வருமானங்களில் இருந்து கிடைத்ததாகவும், தனது மனைவிக்கு சுய தொழில் மற்றும் பல் மருத்துவர் என்ற அடிப்படையில் கிடைத்ததாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டு இருக்கிறார்.
அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்
அதிமுக வேட்பாளர் மு.கலியபெருமாள் தனது உறுதி மொழி பத்திரத்தில் அசையும் சொத்து 96 லட்சத்து 94 ஆயிரத்து 384 ரூபாய், அசையா சொத்து 10 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். கையில் உள்ள ரொக்கம், வைப்புத் தொகைகள், செய்யப்பட்ட முதலீடுகள் சேமிப்பு திட்டங்கள், அளிக்கப்பட்ட தனிப்பட்ட கடன்கள், பெறப்பட்ட கடன் தொகைகள், வாங்கப்பட்ட மோட்டார் வண்டிகள், தங்கம், வெள்ளி நகைகளின் மதிப்பு, வரவேண்டிய தொகைகள் என கலியபெருமாளுக்கு 96 லட்சத்து 94 ஆயிரத்து 384 ரூபாய் எனவும், அவரது மனைவிக்கு 1 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரத்து 278 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் நிலுவாக உள்ள தொகை, கடனின் தன்மை என்ற பகுதியில் கலியபெருமாளுக்கு 1 கோடியே 20 லட்சத்து 2 ஆயிரத்து 658 ரூபாயும், அவரது மனைவிக்கு 1 கோடியே 48 லட்சத்து 55 ஆயிரத்து 125 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கு வருமானங்கள் வியாபாரத்திலிருந்து கிடைத்ததாகவும் கலியபெருமாள் குறிப்பிட்டு இருக்கிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கலியபெருமாள், கட்சி நிர்வாகிகளோடு தலைவர்களின் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தார். இதனால் அவர் மீது தேர்தல் விதிகளை மீறி சட்ட விரோதமாக ஒன்று கூடி உரிய அனுமதி பெறாமல் ஊர்வலமாக சென்று போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து அவர் உறுதி மொழி பத்திரத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.