ஓட்டு போடாதவர்கள் லிஸ்ட்-செக் வைத்த கலெக்டர்
30 சதவீத வாக்கை பெற்றவர்கள் நமது பிரதிநிதியா?
30 சதவீத வாக்கை பெற்றவர்கள் நமது பிரதிநிதியாக மாறி விடுகின்றனர் என்று கூறிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஓட்டு போடாதவர்கள் லிஸ்ட்டை கேட்டு பெறுவோம் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் பெரியார் வளாகத்தில் நகராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (02.04.2024) நடைபெற்றது.
சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தை நிலை நிறுத்துவோம். அச்சமின்றியும், மதம், இனம், சாதி, சமூக தாக்கம் இன்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்கள் இன்றியும் வாக்களிப்போம் என்று இதனால் உறுதியளிக்கிறோம் என்ற உறுதி மொழியை 18 வயதிற்கு மேற்பட்ட முதல் முறை வாக்காளர்களான மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர்.
அவர்களிடையே கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது,
தவறாமல் வாக்களியுங்கள் நாம் மட்டுமல்ல. நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், கிராமத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கும். 100சதவீதம் வாக்களித்து வெற்றி பெற்றவர்கள் தான் நம்முடைய பிரத்யேகமான ஒரு பிரதிநிதியாக இருக்க முடியும்.
நூறு நபர்களில் 60 நபர்கள் வாக்களிக்கிறார்கள். 30 சதவீதம் வாக்கை பெற்ற ஒரு நபர் நமது பிரதிநிதியாக மாறுகிறார். 40 சதவீதம் வாக்கு அளிக்காத நபர் இருக்கிறார்கள். அவர்கள் வாக்களித்தார்கள் என்றால் இரண்டு நபர்களில் ஒரு நபர் மாறுபடலாம். எனவே 100சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்
உங்கள் கல்லூரியில் தேர்தல் முடிந்த பிறகு யாரெல்லாம் வாக்களிக்கவில்லை அப்படி என்று ஒரு லிஸ்ட் கேட்க போகிறார்கள். யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்ற லிஸ்ட் கேட்க போகிறோம். கையில் மை வைப்பார்கள். அது மட்டுமன்றி ஒவ்வொரு வாக்காளர் பட்டியலிலும் முதல் முறையாக யாரெல்லாம் வாக்காளர்களாக சேர்ந்து இருக்கிறீர்கள் என்ற விவரம் எங்களிடம் உள்ளது.
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அத்தனை பேருக்கும் சீரியல் நம்பர் உள்ளது, பெயர் உள்ளது, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து விட்டோம். அந்த பூத்தில் யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்ற டேட்டாவை நாங்கள் எடுத்து வைத்து விடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓட்டு போடாதவங்க லிஸ்ட்டை எடுக்க போகிறோம் என கலெக்டர் சொன்னதை கேட்டு மாணவ-மாணவிகள் திகைத்தனர்.
நிகழ்ச்சியில் வடஆண்டாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் வில்லுப்பாட்டு பாடியதன் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலைஞர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கா.பு.கணேசன், நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, தேசிய தகவலியல் மைய அலுவலர் சிசில் இளங்கோ, கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.