நக்கலாக தெரிகிறதா? ஸ்டாலின் கேள்வி
ஜூன் 4 மோடியின் குழப்பம் தீர்ந்து விடும் என பேச்சு
தமிழ்நாட்டை பார்த்தால் ஒன்றிய அரசுக்கு நக்கலாக இருப்பதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் ஜூன் 4ந் தேதி மோடியின் குழப்பங்கள் தீர்ந்து விடும் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து திருவண்ணாமலை அடுத்த சோ.காட்டுக்குளம் கிராமத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் எ.வ.வேலு வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது,
தீப ஒளி தரும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளேன். நூற்றாண்டு கண்ட திருவண்ணாமலை நகராட்சி மாநகராட்சியாக உருவாக்கிய உங்கள் ஸ்டாலின் வந்துள்ளேன். என்னையும் உங்களையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ, அதே போன்று திருவண்ணாமலையையும், திமுகவையும் பிரிக்க முடியாது.
திமுக வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த பகுதி மக்கள் உற்றத் துணையாக இருந்துள்ளார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு வெற்றிக்கு வித்திட்ட உங்கள் தொகுதி ஸ்டாலின் பயணம் தொடங்கிய இடம் திருவண்ணாமலை தான். திமுகவும், திருவண்ணாமலையையும் சேர்ந்தே இருக்கும்.
மக்கள் மாண்டது போதும்
பாஜக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என நாட்டிலுள்ள அனைத்து குடிமகன்களும் தயாராகி உள்ளனர். இந்த செய்தியை நன்றாக உணர்ந்து தோல்வி பயத்தில் பொய்யையும் பொருளையும் கிளப்பி மக்களை குழப்பி வாக்குபெற நினைக்கிறார் பிரதமர் மோடி.
மோடி குரளி வித்தை காட்டுகிறார். அவர் குழப்பத்தில் உள்ளார் என்பதற்கு உத்திரபிரதேசம் சென்று கச்சத்தீவு குறித்து பேசுவதில் இருந்தே தெரிகிறது. மோடி அவர்களே இது ஏப்ரல் மாதம் தான். இன்னும் மே மாதம், ஜூன் மாதம் உள்ளது. உங்கள் குழப்பங்கள் ஜூன் 4ந் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) தீர்ந்துவிடும். ஜூன் 3ந் தேதி கலைஞரின் பிறந்தநாள். 4ந் தேதி இந்தியாவின் புதிய விடுதலை துவக்க நாள்.
தமிழகம் அடுத்தடுத்து 2 பேரிடர்களை சந்தித்தது. 8 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளை சீர்செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் 37ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என கேட்டுயிருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் ஆறுதல் கூறவில்லை. கேட்ட நிதியும் கொடுக்கவில்லை. பிரதமர் மோடியை சந்தித்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்புவதாகவும், அதன் பின்னர் நிதி வழங்குவதாக தெரிவித்தார். சொன்னபடி தமிழகத்திற்கு நிர்மலா சீதாராமன் மட்டுமே வந்ததார். ஆனால் நிதி வரவில்லை. நிர்மலா சீதாராமனை நக்கலாக பதில் கூறுவதற்குத்தான் நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள்.
கந்துவட்டிக்காரன் போல் கேட்பதா?
5 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு கொடுத்து விட்டோம் என கூறியுள்ளார். அதற்கு கணக்கு கொடுங்கள் என்று கந்துவட்டிக்காரன் போல் கேட்கிறார். முதலில் அது ஒன்றிய அரசு வழங்கிய நிதி என்று அவரால் கூற முடியுமா? முடியாது. வெளிநாட்டு வங்கிகள் தமிழ்நாட்டிற்கு கொடுத்த கடன். அந்த கடனையும் தமிழ்நாடு அரசு தான் திரும்ப செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு நிதி அமைப்புகளிடம் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசுக்கு வந்து அதன் பின்னர்தான் மாநில அரசுக்கு வழங்கப்படும். இது போன்று மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசு நிதி ஆகும்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள். எதற்கும் நிதி அளிக்காமல் பிரதமர் மோடி போன்றே நிர்மலா சீதாராமன் வாயால் வடை சுடுகிறார்.
தமிழ்நாட்டைப் பார்த்தால் ஒன்றிய அரசுக்கு நக்கலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த உதவிகள் அனைத்தும் அரசாணை வெளியிட்டு செய்தியில் வந்துள்ளது. அதனை நிர்மலா சீதாராமன் படிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் இந்தியாவை இந்தியா கூட்டணி தான் ஆள வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் அதிமுகவை பொறுத்த வரையில் கள்ளக் கூட்டணிக்கு ஆதாயம் தேடி களத்திற்கு வந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி, ஓபிஎஸ் போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் துரோகிகள் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.