Homeஅரசியல்திருவண்ணாமலையில் மன்னர் சாம்ராஜ்யம்

திருவண்ணாமலையில் மன்னர் சாம்ராஜ்யம்

திருவண்ணாமலையில் மன்னர் சாம்ராஜ்யம்
எ.வ.வேலு மீது ராமதாஸ் மறைமுக தாக்கு
திருவண்ணாமலையில் விமான நிலையம்
மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.
மோடியிடம் போனில் பேசி திட்டங்களை பெற்றுத் தருவேன் எனவும் பேச்சு

திருவண்ணாமலையில் ஒரு தனி சாம்ராஜ்யம் நடக்கிறது, அதற்கு ஒரு மன்னர் இருக்கிறார். அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அடிபணிய வேண்டும் என்று எ.வ.வேலுவை மறைமுகமாக குறிப்பிட்டு ராமதாஸ் பேசினார்.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து திருவண்ணாமலை காந்திசிலை அருகில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட பாமக செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் இரா.காளிதாஸ், மாவட்ட செயலாளர் இல.பாண்டியன், மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலையில் மன்னர் சாம்ராஜ்யம்

பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

திருவண்ணாமலையில் விமான நிலையம்

இன்றைக்கு உலகமே வியந்து இப்படி ஒரு தலைவரா? இப்படி ஒரு பிரதமரா? என வல்லரசு நாடுகளின் தலைவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட கூடிய அளவுக்கு ஒரு பிரதமரை பெற்றிருக்கிறோம். 400 அல்ல திருவண்ணாமலை வேட்பாளர் அஸ்வத்தாமனோடு 401 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். அஸ்வத்தாமன் வெற்றி பெறுவது உறுதியிலும் உறுதி.

அவர் இத்தொகுதியில் வேலை வாய்ப்பை தரக்கூடிய பயோ எத்தனால் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் மற்றும் பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். திமுகவினர் என்ன சொல்லி ஓட்டு கேட்பார்கள்? டாஸ்மாக்கில் காசு கொடுக்க வேண்டாம் இலவசம் என அறிவிப்பார்கள். இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலம் இலவசம் என அறிவிப்பார்கள்.

இங்கு ஒரு தனி சாம்ராஜ்யம் நடப்பதாக கூறுகிறார்களே உண்மையா? என ராமதாஸ் கேட்டதற்கு கூட்டத்தினர் ஆமாம், ஆமாம் என்றனர். பிறகு ராமதாஸ் பேசியதாவது,
அதற்கு ஒரு மன்னர் இருக்கிறார், அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அடிபணிய வேண்டும்.

மாவட்டம் மூன்றாக பிரிப்பு

தமிழ்நாட்டில் இரண்டு பெரிய மாவட்டங்கள் உள்ளது. ஒன்று திண்டுக்கல், இரண்டாவது திருவண்ணாமலை. மக்கள் வாழ்வாதாரம் பெருகவும், விவசாயம், கல்வி, தொழில் வளம் மேம்படவும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படும் என வேட்பாளர் அஸ்வத்தாமன் கூறியிருக்கிறார். இந்த மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அது நிச்சயம் நடக்கும்.

திருவண்ணாமலையில் மன்னர் சாம்ராஜ்யம்

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களாக இருந்ததை 38 மாவட்டங்களாக அதிகரித்ததற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான். 6 மாவட்டங்கள் உருவாக போராடியது பாமக தான். திருவண்ணாமலை மாவட்டமும் மூன்றாக பிரிக்கப்படும். மத்தியில் பாஜக ஆட்சி அமையும் அப்போது இந்த தொகுதிக்கான திட்டங்களை அஸ்வத்தாமன் கேட்டு பெறுவார். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்

மோடி என்னிடம் பாசமாக இருப்பார். நான் போனில் பேசினாலே திட்டங்கள் வந்துவிடும். எனவே இதற்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திமுக 500 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் ஐந்து திட்டங்களையாவது நிறைவேற்றினார்களா? பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தாததால் ஆசிரியர்கள் கொதிப்படைந்து இருக்கின்றனர். அரசு ஊழியர்கள் கோபமாக இருக்கின்றனர்.

கோட்டைக்கே போகாத நான் உழைக்கும் வர்க்கத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோட்டைக்குச் சென்று முதல்வரை சந்தித்தேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இதற்காக பத்து முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருப்பேன். ஒருமுறை நேரில் சென்று இருக்கிறேன். அன்புமணி 3 முறை சந்தித்திருக்கிறார். 10 கடிதங்களை எழுதி இருக்கிறார். ஆனால் அதற்கு சரியான பதில் இல்லை.

எனவே நீங்கள் தாமரை சின்னத்திற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தான் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை ஆகும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!