50 பஸ்கள்-52 கடைகள்-புது பஸ் நிலைய நிலவரம்
3 மாதத்தில் பணிகள் நிறைவடையும் என தகவல்
திருவண்ணாமலை புது பஸ் நிலையத்தில் 52 கடைகள் கட்டப்பட்டுள்ளன. 50 பஸ்கள் நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஈசான்ய பகுதியை மாற்றி சென்னை சாலையில் பாலத்திற்கு அடியில் டான்காப் தொழிற்சாலை இயங்கி வந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
2021 வருடம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, வருவாய்த்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் இடத்தையும் சேர்த்து 10 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
ஆனால் 6.6 ஏக்கரில்தான் பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. பஸ் நிலையம் கட்டுவதற்காக டான்காப் பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு டான்காப் பின்புறம் பல்லவன் நகருக்கு செல்லும் வழியில் அரசு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு வீடும் கட்டித் தரப்பட்டுள்ளது.
மேலும் பஸ் நிலைய முகப்பு அகலமாக அமைய அதன் அருகில் இருக்கும் சினிமா தியேட்டரும் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை அரசு கூடுதல் தலைமை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் 3 மாதத்தில் நிறைவடைந்து விடும் என அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஸ் நிலையத்தின் நடுவில் வற்றாத கிணறு ஒன்று இருப்பதாகவும், அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்து கொள்ள முடியும் என்றும் கூடுதல் தலைமை செயலாளரிடம் அலுவலர்கள் தெரிவித்தனர்.
புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே நுழைய ஒரு வழியும், வெளியே செல்ல ஒரு வழியும், பயணிகள் வந்து செல்ல ஒரு வழி என மொத்தம் 3 வழிப்பாதைகள் அமைக்கப்படுகிறது. மொத்தம் 52 கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பஸ் நிலையத்தின் மேல் மாடியில் அசைவ ஓட்டல் ஒன்றுக்கும், சைவ ஓட்டல் ஒன்றுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பிளாட்பார பகுதியில் உள்ள காலி இடத்தில் உட்கார முடியாது. அதற்கென 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் மட்டுமே பயணிகள் உட்கார முடியும்.
போளூர் சாலையில் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் 3 பகுதிகளாக உள்ள பிளாட்பாரங்களில் 41 பஸ்கள் நிறுத்தலாம். பஸ்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அருகில் இருந்த குட்டை ஒன்று மூடப்பட்டு அதில் சென்னை செல்லும் பஸ்கள் நிறுத்தும் வண்ணம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் ஒரே பகுதியில் மொத்தம் 50 பஸ்கள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி பிளாட்பாரம் இன்றி காலி இடத்தில் 25 பஸ்கள் நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற கார்த்திகை தீபத்திற்குள் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.