வெல்டிங் வைத்து பூட்டப்பட்ட அசைவ ஓட்டல்
திருவண்ணாமலையில் பரபரப்பு
திருவண்ணாமலையில் ஸ்டார் பிரியாணி ஓட்டலை மடத்தின் நிர்வாகிகள் வெல்டிங் வைத்து பூட்டினர். இதனால் ஓட்டல் உரிமையாளரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிரிவலப்பாதையான திருவண்ணாமலை திருவூடல் தெருவில் பிரபல ஓட்டலான ஸ்டார் அசைவ ஓட்டல் இயங்கி வந்தது. இந்த ஓட்டல் இயங்கி வந்த இடம் ஏழு ஊர் சேனைத் தலைவர் மடத்திற்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது. ஓட்டல் இயங்கி வந்த இடத்தில் புதியதாக கடை கட்ட உள்ளோம், கட்டிடம் கட்டி முடித்த பிறகு கடை வைத்துக் கொள்ளுங்கள் என மடத்தின் நிர்வாகிகள் சொன்னதால் உரிமையாளர் கடையை காலி செய்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் சொன்னபடி புதிய கட்டிடம் கட்டித் தரப்படவில்லையாம். இது சம்மந்தமாக மடத்தின் நிர்வாகிகளுக்கும், ஓட்டல் உரிமையாளருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அந்த ஓட்டலை மடத்தின் நிர்வாகிகள் வெல்டிங் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் மடத்தின் நிர்வாகிகளோடு வாக்குவாதம் செய்து ஓட்டலின் முன்பு உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பிறகு வெல்டிங் வைக்கப்பட்ட ஓட்டலின் கதவை உடைக்க முயன்றனர். இதில் ஒரு பக்க கதவு உடைந்தது. அப்போது அங்கு போலீசார் இதை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
7 ஊருக்கு சொந்தமான கடை, உங்களுக்கு சொந்தமானது அல்ல, நள்ளிரவு ஓட்டலுக்குள் புகுந்து வெல்டிங் வைக்கிறீர்கள், இப்படி செய்தால் 7 ஊரிலிருந்து 7 ஆயிரம் பேரை வரவழைப்போம் என மடத்தின் நிர்வாகிகள் ஆவேசமாக கூறினர்.
இந்த ஓட்டலை 58 வருடமாக நடத்தி வருவதாகவும், கிரிவலப்பாதையில் அசைவ கடை இருக்க கூடாது என தங்களை காலி செய்து விட்டதாகவும், இது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இது சம்மந்தாக கடையில் இருந்த பொருட்களை மடத்தின் நிர்வாகிகள் எடுத்துச் சென்று விட்டதாக ஓட்டல் உரிமையாளர் திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பொருட்களை எழுதி கொடுத்து விட்டு அவர்களே எடுத்துச் சென்று விட்டதாகவும், தங்களது இடத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும் மடத்தின் தரப்பில் புகார் தரப்பட்டது.
கிரிவலப்பாதையில் கோயில் அருகில் அசைவ கடை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இந்த ஓட்டலை குறிப்பிட்டு பதிவுகள் வெளிவந்தன.
கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் திருவண்ணாமலைக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, அசைவ உணவுகள் எங்கு வேண்டுமானாலும் விற்பதை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் சிவனின் கிரிவலப்பாதையில் விற்பதற்கு அனுமதியே கிடையாது என சொல்லியிருந்ததும், இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, உணவு என்பது அவரவர்கள் விருப்பப்பட்டது. அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உணவை சமைக்க கூடாது என சொல்வது பொருத்தமாக இருக்காது, இது ஆன்மீக ஊர் என்பதால் கடைகாரர்களே எடுத்தால் அவர்களுக்கு எனது நன்றி என பதிலளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.