பிடிஓ உள்பட 24 அதிகாரிகள் மீது பாய்ந்தது வழக்கு
விஜிலென்ஸ் அதிரடி நடவடிக்கை-பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி-இறந்தவர்கள் பெயரில் வீடு ஒதுக்கீடு-திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மோசடியை தொடர்ந்து 3 பிடிஓ-க்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2016 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெரும்பாலோனர் வீடு கட்டாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த சமயத்தில் 266 சதுர அடி வீடு கட்ட ரூ.2லட்சத்து 72ஆயிரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடைசி இடம் கிடைத்தது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து பாஜவினர் 2020ம் ஆண்டு போராட்டத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த திட்டத்தில் எந்த இடத்தில் தொய்வு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டது. அப்போது பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்பட்ட இரண்டாவது தவணை தொகை 52ஆயிரம் கையாடல் செய்யப்பட்டதும், வீட்டிற்கு அஸ்திவாரம் கூட போடாததும் தெரிய வந்தது. மேலும் பயனாளிகள் வேறு ஒருவரும், வீடு கட்டுபவர் வேறு ஒருவராகவும் அதாவது திட்டத்திற்கு தகுதியானவராக இல்லாததும் கண்டு பிடிக்கப்பட்டது.
துணை போன அதிகாரிகள்
இதை தொடர்ந்து பணத்தை பெற்றுக் கொண்டு வீடு கட்டாமல் இருந்த பயனாளிகள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் முறைகேடுகளுக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வந்தவாசி, தெள்ளார், ஜவ்வாதுமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பயனாளிகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வீடு கட்ட ஆணை வழங்கியது, பொய்யான பட்டியல் தயாரித்து அரசிற்கு வருவாய் இழப்பீட்டை ஏற்படுத்தியது, 2017-18 ஆம் ஆண்டுகளில் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் வீரப்பனூர் ஊராட்சி ஒன்றியத்தில் தகுதியற்ற பயனாளிகளுக்கு ஆணை வழங்கியது, இறந்துவிட்ட பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்கியது இம்மாதிரியான பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமாக திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் 24 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் வருமாறு,
1.ஆர்.குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) 2.பி.பரணிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) 3.எல்.சீனுவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) 4.ஏ.வில்வபதி, துணை பிடிஓ, 5.ஜி.ரவிச்சந்திரன், துணை பிடிஓ 6.ஆர்.அன்பழகன், துணை பிடிஓ 7.மு.ராமு, உதவி பொறியாளர், 8.ஏ.கேசவன், உதவி பொறியாளர், 9.ஆர்.தமிழ்செல்வன், உதவி பொறியாளர், 10.எம்.நிர்மல்ராஜ், உதவி பொறியாளர், 11.எஸ்.வெற்றிவேல். துணை பிடிஓ 12.எம்.மணிகண்டன், துணை பிடிஓ 13.இ.மணிபாலன், துணை பிடிஓ 14.பி.ராதாகிருஷ்ணன், துணை பிடிஓ 15. எம்.ராஜேந்திரன், துணை பிடிஓ 16.சி.கல்பனா, சந்திரசேகரன், மேற்பார்வையாளர்( ஓவர்சீயர்) 17.சி.சக்திவேல், மேற்பார்வையாளர், (ஓவர்சீயர்) 18.எம்.ஆனந்தகுமார், மேற்பார்வையாளர், (ஓவர்சீயர்) 19.சி.வீரபத்திரன், மேற்பார்வையாளர், (ஓவர்சீயர்) 20.ஜெ.சேகரன், ஊராட்சி செயலாளர், 21.ஆர்.கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர், 22.எஸ்.ராமஜெயம், 23.மு.பொன்னுசாமி, ஊராட்சி செயலாளர், 24.எஸ்.உமாபதி, ஊராட்சி செயலாளர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த 24 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.