புதிய பஸ் நிலையம் இடம் போதாது- அமைச்சர் முடிவு
திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் சிறியதாக இருப்பதாக வந்த முறையீடு காரணமாக அந்த பஸ் நிலையத்தை விரிவு படுத்தும்படி அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் ரோட்டில் 25 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட டான்காப் எனப்படுகிற எண்ணெய் பிழியும் தொழிற்சாலை இயங்கிய இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 10 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது 6.6 ஏக்கரில் அமைப்பதென முடிவு செய்யப்பட்டு 75 சதவீத வேலைகள் முடிவு பெற்றுள்ளன.
பஸ் நிலையம் கட்டுவதற்காக டான்காப் பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு டான்காப் பின்புறம் பல்லவன் நகருக்கு செல்லும் வழியில் அரசு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு வீடும் கட்டித் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியேறி உள்ளது.
புதிய பஸ் நிலையம் சிறியது
பாலத்திற்கு அடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதால் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்தின் முன் இருந்த தனியார் இடம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.
புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை பார்வையிடுபவர்கள் ஆன்மீக நகரமாகவும், விரைவில் மாநகராட்சியாகவும் மாற உள்ள திருவண்ணாமலைக்கு இந்த பஸ் நிலையம் ஏற்றதாக இல்லை, சிறியதாக உள்ளது என கருத்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த கருத்து பரவியது.
இந்நிலையில் இன்று மாலை புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். பழைய பஸ் நிலையத்தை விட இந்த பஸ் நிலையம் பெரியதா? என அவரது கேள்விக்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் பழைய பஸ் நிலையத்திலும் 50 பஸ்கள் தான் நிறுத்த முடியும், இந்த பஸ் நிலையத்திலும் 50 பஸ்கள் தான் நிறுத்த முடியும் என்றார்.
ஆய்வு முடிந்ததும் செய்தியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் நான் கேட்டுக் கொண்டது இணங்க ரூ.30 கோடி செலவில் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இரண்டரை மாதம் காலம் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இந்தப் பணிகளை என்னால் ஆய்வு செய்ய முடியவில்லை.
சேர்மன், வியாபாரிகள் கோரிக்கை
குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இந்த புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்து இருக்கிறோம். இந்த பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று போகிற அளவிற்கு கட்டப்பட்டிருக்கிறது.
நகரமன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள், திருவண்ணாமலையை சேர்ந்த வர்த்தக அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். இது போதுமான அளவுக்கு இல்லை. திருவண்ணாமலைக்கு வந்து போகிற ஆன்மீக மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இந்த பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கையை வைத்தார்கள்.
சித்ரா பவுர்ணமி புகழ்பெற்றது ஒரு காலத்தில் இதற்கு ஒரு லட்சம் பேர் கூடுவார்கள். சென்ற ஆண்டு 15 லட்சம் பேர் கூடினார்கள். இந்த ஆண்டு 30 லட்சம் பேர் கூடி இருக்கிறார்கள் ஒரு ஆண்டிலேயே 100 சதவீதம் கூடியிருக்கிறது. இப்படி ஆன்மீக மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. தமிழக முதல்வர், ஆன்மீக பெருமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என எனக்கு ஆணையிட்டிருந்தார்.
குடிநீர் என்பது அத்தியாவசியமான ஒன்று. திருவண்ணாமலை மக்களை கணக்கெடுத்து மட்டும் குடிநீருக்கு வேண்டிய ஏற்பாடை செய்ய முடியாது. திருவண்ணாமலைக்கு வந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிற காரணத்தினால் இந்த ஆண்டிலே சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.56 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
14 கிலோமீட்டர் கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பவுர்ணமிக்கு முதல் நாளிலும், பவுர்ணமி அன்றும் தான் கூட்டம் வரும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை காலங்களிலும், விசேஷ நாட்களிலும் பவுர்ணமி போன்று ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் பேர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
அவர்களுக்கு வேண்டிய கழிப்பிட வசதிகள் செய்ய வேண்டும் என்ற கடமை உள்ளது. நன்கொடையாளர்களின் உதவியுடன் ஐந்து உலக தரம் வாய்ந்த ஓய்வறையுடன் கூடிய கழிவறை கட்டப்படுகிறது. இரண்டு இடங்களில் கட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னும் மூன்று இடங்களில் ஒரு சில தினங்களில் தொடங்க இருக்கிறோம்.
இந்த பஸ் நிலையம் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் போதே விரிவுபடுத்த வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு வந்துவிட்டது. பஸ் நிலையத்தின் பின்புறத்தில் 4 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. 4 ஏக்கரில் விரிவுபடுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் சொல்லி விரைந்து அனுமதி பெற்றுத் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரிவு படுத்தப்பட்ட பஸ் நிலையம் 25 பஸ்கள் நிறுத்துகிற அளவிற்கு கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சருடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, எ.வ.வே.கம்பன், ஸ்ரீதரன், கார்த்திக் வேல்மாறன், ராஜாங்கம் மற்றும் பலர் சென்றிருந்தனர்.