திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமியை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிலோ மீட்டர் கணக்கில் நின்று 7 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
ஆடி மாத பவுர்ணமி
ஆடி மாத பவுர்ணமி நேற்று மாலை 6.20 மணி தொடங்கி இன்று மாலை 4.46 மணியளவில் நிறைவடைந்தது. இதனால் திருவண்ணாமலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். விடுமுறை தினமான இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
சித்ரா பவுர்ணமியை அடுத்து சனி மற்றும் ஞாயிறு ஆடி பவுர்ணமியில் அதிக அளவில் அதாவது 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டத்தால் தேரடி வீதி, திருவூடல் வீதி திக்குமுக்காடி போனது. பலர் தடுப்புகள் மீது ஏறி குதித்தும், தடுப்புகளை அகற்றியும் வரிசையை தாண்டி முட்டி மோதி சென்றனர்.
சாலை மறியல்
14 கிலோ மீட்டர் தூரம் நடந்து கிரிவலம் முடித்த பக்தர்கள் ஊர் திரும்ப தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ்கள் இல்லாததால் விரக்தி அடைந்தனர். இதனால் ஏற்கனவே களைப்பில் இருந்த பக்தர்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்து வெறுத்து போன பக்தர்கள் திருக்கோயிலூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு பஸ் விடப்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டனர்.
கடந்த வருடம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்திற்கு வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிவலம் வரும் பக்தர்கள் பஸ் வசதி கேட்டு சாலை மறியல் சம்பவங்களில் ஈடுபடுவது இனிமேல் நடக்க கூடாது என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனாலும் பஸ் வசதி இன்றி பக்தர்கள் போராடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை அண்ணாமலையாரை தரிசிக்க பக்தர்கள் தேரடி தெரு, பெரிய தெரு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாடவீதியை ஆய்வு செய்ய வந்த மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் போலீசார் வரிசையில் நிற்காதவர்களை வெளியேற்றி கூட்டத்தை ஒழங்கு படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர்-ஆம்புலன்ஸ் இல்லை
நீண்ட வரிசையில் நின்ற பக்தர்களுக்கு தேரடி வீதி- பெரிய தெரு சந்திப்பு வரை மட்டும் தான் நிழற்பந்தல் போடப்பட்டது. இதை தாண்டி பெரிய தெரு மேடு வரை வரிசை நீண்டது. அவர்களுக்கு குடி தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரிசையில் நின்ற பக்தர் ஒருவர் நெஞ்சு வலி வந்து இறந்த நிலையில் முன்னேற்பாடாக ஆம்புலன்ஸ்சும் நிறுத்தப்படவில்லை.
சாமி தரிசனம் செய்ய 7 மணி நேரம் காத்திருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.