Homeசுகாதாரம்காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு
புனல்காடு குப்பை கிடங்கு செயல்பாட்டிற்கு வந்தது- குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்- அமைச்சரிடம் பெண்கள் முறையீடு

திருவண்ணாமலை ஈசான்ய குப்பை கிடங்கிலிருந்து பல ஆயிரம் டன் குப்பைகள் லாரிகள் மூலம் புனல்காடு குப்பை கிடங்கிற்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லும் பணிகள் துவங்கியுள்ளது.

தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக உள்ள திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 13.64 சதுர கிலோ மீட்டர் தூரம் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை நகரத்தில் கடந்த 2021 கணக்கெடுப்பின் படி 34ஆயிரத்து 380 வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளில் இருந்து 60 டன் குப்பையும், பவுர்ணமி நாட்களில் 150 டன் குப்பையும் சேகரிக்கப்பட்டு ஈசான்ய குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. மேலும் கடந்த 60 வருடங்களில் சேகரிக்கப்பட்ட 54 ஆயிரம் டன் குப்பை அங்கு தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகள் அடிக்கடி தீப்பற்றி எரிந்து புகை மண்டலம் பரவுவதால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் துர்நாற்றமும் வீசுவதால் அப்பகுதியாக செல்லும் பொதுமக்களும், கிரிவலம் செல்லும் பக்தர்களும் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

See also  கொரோனாவிலிருந்து காப்பாற்ற குழந்தைக்கு தாய்ப்பால்

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு

எனவே ஈசான்ய குப்பை கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலூர் ரோட்டில் தனக்கோட்டிபுரத்தில் குப்பை கிடங்கை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது திமுக ஆட்சியில் திருவண்ணாமலை-காஞ்சி ரோட்டில் புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. குப்பை எடுத்து வந்த லாரி சிறை பிடிக்க்பபட்டது. இந்த குப்பை கிடங்கால் 4 கிராமங்கள் பாதிக்கப்படும் என கூறி பாமக சாலைமறியலில் ஈடுபட்டது. குப்பை கிடங்கை அமைக்க விடமாட்டோம் என பாஜகவும் குரல் கொடுத்தது. கிராம மக்கள் தொடர் போராட்டத்தையும் நடத்தினர். இதையடுத்து அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஈசான்ய மைதானத்திலிருந்து குப்பைகளை அகற்றி புனல்காட்டில் கொட்டும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தினமும் லாரிகளில் 50 முறை குப்பைகள் எடுத்துச் செல்லப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் எடுத்துச் செல்லும் பணியில் ஒப்பந்ததாரர்களின் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணியை இன்று புனல்காட்டிற்கு சென்று அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மலையை ஒட்டி குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து அவற்றை அதே பகுதியில் வேறு இடத்தில் கொட்ட உத்தரவிட்டார். மலை ஓரம் குப்பைகள் கொட்ட கூடாது என அவர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

See also  காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு

அப்போது அப்பகுதி மக்கள் சிமெண்ட் தரை அமைக்காமல், சுற்றுச்சுவர் கட்டாமல் குப்பை கொட்டப்படுவது குறித்து அமைச்சரிடம் முறையிட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, இங்கு கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாகவும், இதற்கான மிஷின் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதெல்லாம் செய்த மாதிரி தெரியவில்லையே என ஒரு பெண் கேட்க கல்யாணம் பண்ணா உடனே குழந்தை பிறக்குமா? இந்த பணிகள் நிறைவேற 1 வருட காலம் ஆகும் என அமைச்சர் பதிலளித்தார். முதியவர் ஒருவர் பட்டா வழங்க கேட்டு அமைச்சர் காலில் விழுந்தார். இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

அமைச்சருடன் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன்,ஒன்றியக் குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, எஸ்.பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், கார்த்திவேல்மாறன் ஆகியோர் சென்றிருந்தனர்.

நகர பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்த ஈசான்ய குப்பை கிடங்கு மாற்றப்படுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

See also  சத்தமில்லாமல் சாதனை படைத்த திருவண்ணாமலை உழவர் சந்தை

 


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!