ரிஜிஸ்டர் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு
கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் பரிமாற்றம்?
திருவண்ணாமலை ரிஜிஸ்டர் ஆபீசில் நடைபெற்ற விஜிலென்ஸ் ரெய்டில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரில் இரண்டு சார் பதிவாளர் அலுவலங்கள் (ரிஜிஸ்டர் ஆபீஸ்) இயங்கி வருகிறது. போளுர் ரோட்டில் இணை 1 சார் பதிவாளர் அலுவலகமும், வேட்டவலம் ரோட்டில் இணை 2 சார் பதிவாளர் அலுவலகமும் உள்ளது.

வேட்டவலம் ரோட்டில் இயங்கி வரும் 2-ஆம் எண் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிக அளவில் வரன்முறை படுத்தப்படாத மனைகள் பதிவு செய்யப்படுவதாகவும் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு (விஜிலென்ஸ்) புகார்கள் வந்தன.
இதையடுத்து இன்று மாலை விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதனால் ஊழியர்க்ள அதிர்ச்சி அடைந்தனர். அலுவலக கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு போலீசார் ஒவ்வொரு இடமாக சோதனை நடத்தினர். சார் பதிவாளர் குமரகுருவிடமும் சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றது. இதே போன்று பத்திர பதிவிற்கு வந்தவர்களும் விசாரிக்கப்பட்டனர்.

மேலும் அந்த அலுவலகம் செயல்படும் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள அறைகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினர். இதை தவிர அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களின் இரண்டு சக்கர வாகனங்களிலும் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற சோதனையும் நடைபெற்றது.
இரவு வரை இந்த சோதனை நீடித்தது. இரவு 10-30 வரை கணக்கில் வராத பணம் ரூ.ரூ.76ஆயிரத்து 900 கைப்பற்றப்பட்டது. இது தவிர கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரிஜிஸ்டர் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு நடத்தப்பட்டது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.