Homeசெய்திகள்மண்ணில் புதைந்த கோயிலை பார்க்காதது ஏன்?

மண்ணில் புதைந்த கோயிலை பார்க்காதது ஏன்?

மண்ணில் புதைந்த கோயிலை கலெக்டர் பார்க்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய இந்து முன்னணி, அண்ணாமலையாரை காட்சி பொருளாக வைத்து பணம் சம்பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.சிவா, கே.சரவணன், ஜி.எஸ்.கௌதம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நாக.செந்தில் அனைவரையும் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ் கண்டன உரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

பெரியார் வழி வந்தவர்கள்

கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் நமது தாத்தா, பாட்டன், முப்பாட்டன், மன்னர்கள் கட்டி வைத்த கோயில் 43 ஆயிரத்துக்கு மேற்பட்டவை உள்ளன. இந்த கோயிலுக்குள் யார் வந்து உட்கார்ந்து இருக்கிறார்கள்? மதச்சார்பற்ற அரசு என சொல்லக்கூடிய திராவிட மாடல், பெரியார் வழி வந்தவர்கள் என்று சொல்லக்கூடிய திமுக நிர்வாகிகள் கோயிலுக்குள் உட்கார்ந்து கொண்டு கோயிலை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மண்ணில் புதைந்த கோயிலை பார்க்காதது ஏன்?

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் ஒரு கோயிலையாவது கட்டியது உண்டா? சித்தர்களும் யோகிகளும், ஞானிகளும் கடவுளை நேரில் பார்த்து பேசி கோயிலை உருவாக்கி வைத்தார்கள். வானுயுர கோபுரங்களை கட்டினார்கள். அந்த கோயிலுக்கு நில புலன்கள், சொத்துக்களை தந்தார்கள். 1 லட்சத்து 44 ஆயிரத்து ஹெக்டேர் விவசாய நிலங்களை கொடுத்திருந்தார்கள். கோடிக்கணக்கான விவசாய நிலங்கள், மாடமாளிகைகள், மடங்கள் இந்த சொத்துக்கள் என்ன ஆனது?

See also  கிராம சபை கூட்டத்தில் கலெக்டர்- கம்பன் பங்கேற்பு

டாஸ்மார்க், சமத்துவபுரம், பஸ் நிலையம் என எல்லாருடைய பயன்பாட்டிற்கும் கோயில் நிலத்தை எடுத்து நாசம் செய்தார்கள். பல்லாயிரக்கணக்கான கோயில் நிலங்களை தன் பெயருக்கு பட்டாவாக மாற்றிக் கொண்டார்கள்.

எல்லாவற்றிற்கும் காசு

சிறப்பு தரிசன கட்டணம் என சாமியை பார்த்தால் காசு, பவுர்ணமி நாளில் சாதாரண பஸ் சிறப்பு பரிசாக மாறிவிடும். இதில் கட்டணம் அதிகம். அதிகமாக மக்கள் வந்தால் அரசு சலுகை அல்லவா கொடுக்க வேண்டும்? கோயிலுக்கு சென்றால் காசு இல்லாமல் சாமியை பார்க்க முடியாது. கருவறைக்கு அருகில் சென்றால் ஒரு காசு. இன்னும் அருகில் சென்றால் ஒரு காசு. சாமி அருகில் நின்று பூஜை செய்தால், மாலை மரியாதை செய்தால் அதற்கு ஒரு காசு. சாமிக்கு அலங்காரம் செய்துவிட்டு பொருட்காட்சி போல் காட்சி பொருளாக வைத்து காசு வாங்கி கொள்ளையடிக்கிறது இந்த அரசாங்கம்.

பக்தர்களிடம் வாங்குகிற பணம் இந்து சமுதாயத்திற்கு செலவாகிறதா? பத்தாயிரம் கோயில்களில் விளக்கு இல்லை, வழிபாடு இல்லை. திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6000 கோயில்களை காணவில்லை. கோயில் பதிவேடு இருக்கு, பட்டா இருக்கு, கோயிலை அழித்து வீடு கட்டி விட்டார்கள். பிளாட் போட்டு விட்டார்கள்.

See also  காவிரி நீர்-ரஜினிக்கு சம்மந்தமில்லை-கர்நாடகாவிலும் நீர் இல்லை

மண்ணில் புதைந்த கோயிலை பார்க்காதது ஏன்?

மண்ணில் புதைந்த கோயில்

வந்தவாசி அருகே மண்ணில் புதைந்த கோயிலை பொது மக்கள் மீட்டார்கள். இதை கலெக்டரோ, அதிகாரிகளோ சென்று பார்த்தார்களா? இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் சென்றார்களா? அண்ணாமலையார் கோயிலின் உப கோயில்கள், துணை கோயில்களுக்கு சென்று அதிகாரிகள் பார்ப்பது இல்லை. அண்ணாமலையார் கோயிலில் ஆணி அடித்தாற் போல் உட்கார்ந்து விடுகிறார்கள்.

கோயிலை சுற்றி கஞ்சா விற்கிறார்கள். சாராயம் விற்கிறார்கள். மாமிச கடை உள்ளது. தேங்காய், பூ, பழம் விற்றால் குற்றமா? இவையெல்லாம் இந்த மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்திற்கு வந்ததா? இல்லையா?

வேலூர் விரிஞ்சிபுரம் அருகில் உள்ள வெட்டுவானம் எல்லை அம்மன் கோயிலில் 150 கடைகளையும் காலி செய்து விட்டார்கள். வியாபாரிகள் கதறுகிறார்கள். கோயிலுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக கடைகளை ஏலம் விடுகிறோம் என சொல்லி திமுகவினர் உள்ளே நுழைந்து விட்டார்கள். ஒரு மாதம் வாடகை கொடுப்பார்கள், இரண்டு மாதம் வாடகை கொடுப்பார்கள். பிறகு கொடுக்க மாட்டார்கள்.

See also  கோவில் கும்பாபிஷேக பணிகள் தடுத்து நிறுத்தம்

தேவை தனி நல வாரியம்

ஆலயத்தில் இருந்து இந்து சமய நலத்துறை வெளியேற வேண்டும். ஆலயத்துக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். மெக்கா, தெமதினா, ஜெருசலம் சென்றால் அரசு மானியம் தருகிறது. ஆனால் நாம் காசிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ, கைலாசத்துக்கோ செல்ல வேண்டும் என்றால் வரி கொடுக்க வேண்டும்.

மண்ணில் புதைந்த கோயிலை பார்க்காதது ஏன்?

சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம். சர்ச் கிறிஸ்தவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். மசூதி முஸ்லிம்கள் வைத்துக் கொள்ள வேண்டும். மசூதி வருமானத்தை எடுத்து ஒரு மசூதி கட்டலாம், மதத்தை வளர்க்க, பரப்ப, பாதுகாக்க பள்ளிவாசல் வருமானத்தை பயன்படுத்தலாம். கிறிஸ்தவர்கள் தங்களது மதத்தை வளர்க்க, பரப்ப, பாதுகாக்க சர்ச் வருமானத்தை பயன்படுத்தலாம். ஆனால் என் மதத்தை வளர்க்க, பரப்ப, பாதுகாக்க அண்ணாமலையார் கோயில் வருமானம் பயன்பட வேண்டுமா? இல்லையா?

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகி கே.எம்.சேகர் பி.பன்னீர் எஸ்.ராஜா எஸ்.செல்வம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச் செயலாளர் கே.மஞ்சுநாதன் நன்றி கூறினார்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!