திருவண்ணாமலை அத்தியந்தலில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை கிடைக்குமா? என கேள்வி கேட்ட பெண்களுக்கு கலெக்டர் பதிலளித்தார்.
திருவண்ணாமலை வட்டம், அத்தியந்தல் கிராமத்தில் சுதந்திர தினத்தை யொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கிராமப்பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவை சுகாதாரமான குடிநீர். ஆகவே சுகாதாரமான குடிநீரை கிராமப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கிடும் பொருட்டு, நமது மாவட்டத்தில் ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அனைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை முழுவதுமாக தூய்மையாக சுத்தப்படுத்தப்படுகிறது.
இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மழை காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படும்.
ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஊராட்சிக்கு தேவையான பல்வேறு திட்ட பணிகள், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. அதிகபட்ச சம்பளமாக நாளொன்றுக்கு ரூ.319 வழங்கப்படுகிறது.
மேலும் நமது மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, கட்டிடத்தின் அமைப்பு மற்றும் தரம் குறித்து கணகெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களுடன் தரமான அங்கன்வாடி மையமாக உணவு பொருட்கள் பாதுகாப்பு வசதியுடன், சமையல் கூடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதிகளுடன் தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் பத்தாயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் எவ்வாறு அந்த உதவித்தொகையை பயன்படுத்துகின்றனர் என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் கவனிக்கவேண்டும். முதலமைச்சர் இந்த உதவித்தொகையை உயர்கல்வி பயிலுவதற்கும், தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்த வழங்குகிறார்.
போதைப்பொருட்கள் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாவதை தவிர்க்கும் பொருட்டு பள்ளி அருகாமையில் உள்ள பகுதிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எந்த மாதிரியான உணவுப்பொருட்கள் வாங்கி சாப்பிடுகின்றனர் என்பதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கு 319 ரூபாய் வழங்கப்படுவதாக கலெக்டர் பேசிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கிராம சபை கூட்டம் முடிந்ததும் கலெக்டரிடம் சென்ற பெண்கள் அத்தியந்தல் ஊராட்சி திருவணணாமலை மாநகராட்சியில் சேர்க்கப்பட்டு விட்டது. எங்களுக்கு 100 நாள் வேலை எப்படி கிடைக்கும்? என கேட்டனர்.
இதற்கு கலெக்டர் அளித்த பதில்
தமிழக முதல்வர் நகர்ப்புறங்களில் வேலை செய்வதற்கு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கி இருக்கிறார். 100 நாள் வேலை தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் உங்களுக்கு வருடத்தில் 100 நாள் தான் வேலை கொடுக்க முடியும். அந்த வேலையும் நீங்கள் 100 நாள் செய்கிறீர்களா? என்றால் இல்லை.
மகளிர் அமைப்புகளுக்கு மாதம் ஒரு லட்சம் வரை வருமானம் வருகிறது. பல்வேறு மகளிர் திட்டங்கள் மூலமாக தொழில் சார்ந்த கடன்களை தருகிறோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு கோடி ரூபாய் வரை கடன் தருகிறோம். அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்தினால் மாத வருமானத்தை அதிகப்படுத்தி கொள்ளலாம் இதைத் தாண்டியும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.
நகர்புறங்களில் வேலை வாய்ப்பு இருக்கிறது. வேலை வாய்ப்பு வழங்குவோம். நகர்புறமாக மாறுகிற போது கிரிவலப்பாதை தூய்மை பணிக்கு டெண்டர் விட கேட்கிறார்கள். நாம் அதை கொடுக்காமல் உங்களிடமே கொடுத்து விடுகிறோம். இதனால் தூய்மை அமைப்புகளுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. உங்களுக்கு 100 நாள் வேலை தருகிறோம். பணியாளர்களையும் அதிகப்படுத்த சொல்கிறோம். ஒரு நாளைக்கு 100 பேருக்கு வேலை தருகிறோம்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
கிராம சபை கூட்டத்தில் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.30 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், மாநில தடகளச் சங்க துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை ஒன்றியக் குழு தலைவர் கலைவாணி கலைமணி, அத்தியந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.