ஒரே இரவில் 127 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது
திருவண்ணாமலையில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது, பாலம், நெற்பயிர்கள் மூழ்கின. கிரிவலப்பாதையில் மரங்கள் வேறோடு சாய்ந்தது.
பொதுமக்கள் சாலை மறியல்-இன்றும் தொடரும் மழை
திருவண்ணாமலையில் நேற்று இரவு கன மழை பெய்தது. 127 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கிரிவலப்பாதையில் மரங்கள் வேறோடு சாய்தன.
திருவண்ணாமலையில் சில நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலை மாலையில் மாறி மழை பெய்கிறது. மாலையில் ஆரம்பிக்கும் மழை, விடிய, விடிய பெய்கிறது. அதே போல் நேற்று இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.
கன மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. வீடுகளில் தண்ணீர் புகுந்தது. திருவண்ணாமலை-வேட்டவலம் ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் பக்க கால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த கால்வாய் அமைக்கும் பணி ரயில்வே லைன் வரையோடு முடிவடைகிறது.பக்க கால்வாய் முடிவடையும் இடத்தில் ஒத்தவாடைத் தெரு அமைந்திருக்கிறது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இது தாழ்வான பகுதியாகும்.நேற்று இரவு பெய்த மழையினால் பக்க கால்வாய் மூலம் வெளியேறிய தண்ணீர் ஒத்தவாடைத் தெருவில் வீடுகளில் புகுந்தது.
இதனால் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் நீரில் முழ்கி சேதம் அடைந்தது. குடியிருப்புவாசிகள் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வராததால் திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் நகரமன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன், நகர திமுக செயலாளர் கார்த்திவேல்மாறன், நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பலத்த காற்றுடன் பெய்த மழையால் கிரிவலப்பாதையில் குபேரலிங்கம் அருகில் 2 மரங்களும், வேங்கிக்கால் இமாலயா ஓட்டல் அருகில் ஒரு மரமும் வேரோடு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இடங்களில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி உத்தரவின்பேரில் கோட்ட பொறியாளர் பி.ஞானவேல் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் கே.அன்பரசு, உதவி பொறியாளர் பி.சசிகுமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் அடங்கிய குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை ஜெசிபி இயந்திரம் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
காட்டாம்பூண்டி பகுதியில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் முழ்கி நாசமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தொடர் மழையினால் கலசப்பாக்கம் மிருகண்டா அணை நிரம்பியது. இதனால் அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிறுவள்ளூரில் தரை பாலம் வெள்ளத்தில் முழ்கியது.

சிறுவள்ளூரில் தரை பாலத்திற்கு பதிலாக உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தரை பாலத்திற்கு மேல் ஒரு அடி ஆள் உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் உயர் மட்ட பாலத்தின் கட்டுமான பணிக்காக போடப்பட்டிருந்த பலகைகள் உடைந்து நீரில் அடித்து செல்லப்பட்டது.
இந்த தரைபாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மற்ற ஊர்களுக்கு செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர் வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மழை பாதிப்பு காட்சிகள்
திருவண்ணாமலையில் இன்றும் காலையில் வெயில் காய்ந்தது. இரவில் மழை கொட்டியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு,
திருவண்ணாமலை- 127,
செங்கம்- 82.40
தண்டராம்பட்டு- 70
கீழ்பென்னாத்தூர்- 55.60
ஆரணி- 7
போளூர்- 70
கலசபாக்கம்- 68
ஜமுனாமரத்தூர்- 108.40
செய்யாறு- 0
வந்தவாசி- 22
சேத்துப்பட்டு- 8-20
வெம்பாக்கம்- 4
போட்டோ&வீடியோ:- எம்.சரவணன்-நிருபர்.