ஜி.பே, போன்.பே மூலம் 25 லட்சம் ரூபாய் பரிமாற்றம்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் கண்டுபிடிப்பு – தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ஜி.பே, போன்.பே மூலம் ரூ.25 லட்சம் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் புகார்களின் அடிப்படையில் பல்வேறு அரசு அலுவலங்களில் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் சோதனை நடத்தி வருகின்றனர். மின்சார துறை அலுவலர், வி.ஏ.ஓ, சர்வேயர், சப்-இன்ஸ்பெக்டர், தாசில்தார் என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியவர்களின் பட்டியல் நீளுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பயந்து அரசு அலுவலர்கள் பணத்தை பாக்கெட்டிலும், அலுவலகங்களிலும் வைப்பதில்லை. சில அதிகாரிகள் இடைத்தரகர்களை வைத்து கூகுள் பே, போன் பே மூலம் லஞ்சம் பெறுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலங்களில் தொடர்பு வைத்திருப்பவர்களின் போன்களையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
சென்ற மாதம் திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2ந் தேதி செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.78 ஆயிரத்து 990 கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பட்டா மாற்றம், நில அளவை, வாரிசு சான்றிதழ், இருப்பிடம், ஜாதி உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறுவதற்கு பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீசார் இன்று அந்த அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.56 ஆயிரத்து 130 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 6 மாதத்தில் கூகுள் பே, போன் பே மூலம் ரூ.25 லட்சத்து 35 ஆயிரத்து 824 பரிமாற்றம் நடந்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தாசில்தார் சரளா, சர்வேயர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.