Homeசெய்திகள்லாபத்தை தருகிறோமே, கார்ப்பரேஷனை தரக் கூடாதா?

லாபத்தை தருகிறோமே, கார்ப்பரேஷனை தரக் கூடாதா?

லாபத்தை தருகிறோமே, கார்ப்பரேஷனை தரக் கூடாதா?
போக்குவரத்து துறை அமைச்சரிடம் எ.வ.வேலு கோரிக்கை
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சிவசங்கரையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது என பேச்சு –போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அட்வைஸ்

லாபத்தை ஈட்டித் தரும் திருவண்ணாமலைக்கு புதிய போக்குவரத்து கார்ப்பரேஷன் கொண்டு வர வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.

லாபத்தை தருகிறோமே, கார்ப்பரேஷனை தரக் கூடாதா?

32 புதிய பஸ்கள்

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் போக்குவரத்து துறை சார்பாக 6 புதிய மகளிர் விடியல் பயண நகரப் பேருந்து, 26 புதிய புறநகரப் பேருந்து என மொத்தம் 32 புதிய பஸ்களை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 24 புதிய வாகனங்களை அலுவலக பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்கள்.

இந்த விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,

திருவண்ணாமலை பெஸ்ட்

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அவற்றில் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் பொருட்டு அதிக பேருந்துகளை சரியான முறையில் இயக்கி அதிகப்படியான வருவாய் ஈட்டி திருவண்ணாமலை மண்டலம் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை விட அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2006 -2011 ஆட்சிகாலத்தில் 15,000 புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது.

தற்போதைய ஆட்சியில் 7,000 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி 1,500 புதிய பேருந்துகள் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவாக அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை

நீண்ட காலமாக போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம், ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் இருந்தது மூன்று கட்ட பேச்சுவார்த்தை  நடைபெற்று முடிவு எட்டப்பட்டுள்ளது.

மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு நடப்பாண்டிற்கு மட்டும் 2500 கோடி ரூபாயை முதலமைச்சர் போக்குவரத்து துறைக்கு வழங்கியுள்ளார். இந்த நிதியை வழங்கியதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதம் முதல் தேதியில் முறையாக சம்பளம் வழங்கப்படுகிறது.

See also  ஊராட்சி தலைவர்களை வறுத்தெடுத்த கலெக்டர் முருகேஷ்

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அவர் பேசியதாவது.

சுவர் இருந்தால்தானே சித்திரம்…

அமைச்சர்கள் அத்தனை பேரும் சக அமைச்சர்களாக இருந்தாலும், சிவசங்கரையும், என்னையும் பிரித்து பார்க்கவே முடியாது. காரணம் பஸ் ஓட வேண்டும் என்றால் நெடுஞ்சாலையில் தான் ஓட வேண்டும். நான் நெடுஞ்சாலை துறை மந்திரி, அவர் போக்குவரத்து துறை மந்திரி. பஸ் ஓட வேண்டும் என்றால் ரோடு நன்றாக இருக்க வேண்டும். அதற்கு சான்று அளிக்க வேண்டும்.

போக்குவரத்து துறைக்கு உற்ற துணையாக இருப்பது நெடுஞ்சாலைத்துறை. நெடுஞ்சாலைத் துறையும் போக்குவரத்து துறையும் பிரிக்க முடியாது. என்னையும் சிவசங்கரையும் யாரும் பிரிக்க முடியாது. அதில் இரண்டு பொருட்கள் உள்ளன. புரிந்து கொள்ளுங்கள்.

போக்குவரத்து தொழிலாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் எதுவும் சொல்ல முடியாது. உங்களை வைத்து தான் ஓட்டியாக வேண்டும். நான் எப்படி வேண்டுமானாலும் உங்களை சொல்லலாம். ஆரம்பத்தில் 18 ஆயிரம் பஸ்களை கொண்டு போக்குவரத்து துறை லாபகரமாக இயங்கி வந்தது. இதில் வந்த அதிகப்படியான லாபத்தை எடுத்து ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கலாம், ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கலாம், ஒரு பாலிடெக்னிக் ஆரம்பிக்கலாம் என்கிற அளவுக்கு போக்குவரத்து துறை வசதியான துறையாக இருந்தது.

லாபத்தை தருகிறோமே, கார்ப்பரேஷனை தரக் கூடாதா?

2500 கோடி கொடுத்தும் கடன்

அப்போது மந்திரிகள் எல்லாம் யோசிப்பார்கள். முதலமைச்சர் நமக்கு போக்குவரத்து துறையை கொடுக்க மாட்டாரா என்று. அந்த அளவுக்கு லாபத்தை கொண்டிருக்கிற கார்ப்பரேஷன். அந்தத் துறைக்கு அமைச்சராக வருவதை ஒரு பெருமையாக நினைப்பார்கள். அதற்கு பெரும்பான்மையாக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இருந்தது. தொழிலாளர்கள் கேட்கிற கோரிக்கைகள் எல்லாம் நியாயமானது இல்லை என நான் சொல்லவில்லை.நியாயமான கோரிக்கைகள் கூட இருக்கலாம். சுவர் இருந்தால்தானே சித்திரமே எழுத முடியும்.

இன்றைக்கு இந்த போக்குவரத்து துறை கழகம் உயிர்ப் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு மட்டும் 2500 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். இவ்வளவு கொடுத்தும் இன்னும் இந்த கார்ப்பரேஷன் கடனாக உள்ளது. லாபகரமாக இல்லை. இதை தொழிலாளர் பெருமக்கள் ஒரு பக்கம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

போராட்டக்காரர்களுடன் சேரலாமா?

See also  வாழை இலை எங்கே? லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர்

ஒரு பக்கம் உங்கள் உரிமையாக இருந்தாலும் கூட சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். பஸ் ஓடினால் தான் நீங்கள் கண்டக்டர், டிரைவர் வேலை பார்க்க முடியும். குடும்பம் நன்றாக இருக்க முடியும். அதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிற போது அதிலும் தொமுசவில் இருக்கிறவர்கள் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும். எப்படியும் சம்பளம் வருகிறது, அவர்கள் கூட சேர்ந்து சேர்ந்து கொள்ளலாம், போனஸ் வருகிறது அவர்கள் (போராட்டக்காரர்கள்) கூட சேர்ந்து கொள்ளலாம் என்பது நியாயம் இல்லை.

போக்குவரத்து துறையில் வருகிற பணம் நெடுஞ்சாலை துறையிலும்,  பொதுப்பணி துறையிலும், கல்வித் துறையிலுமா செலவு செய்யப்படுகிறது? இல்லை. அதனால் இந்த துறை மீண்டும் லாபகரமான துறையாக வர வேண்டும் என்று சொன்னால் போக்குவரத்து தொழிலாளர்கள் மனம் வைக்க வேண்டும். அப்போதுதான் லாபத்தை கொண்டு வர முடியும். ரொம்ப டீப்பாக போவேன் வேண்டாம்.

இப்போது நாம் அப்படி இல்லை. ஒரு காலத்தில் தொழிலாளர்கள் இருந்தார்கள். தனியார் பஸ்ஸுக்கு நமது பஸ் டைம்மை விட்டுக் கொடுப்போம். நீ முன்னால் புறப்பட்டு சென்று விடு என்று சொல்லி விடுவார்கள் நமது தொழிலாளர்கள். ஏனென்றால் போக்குவரத்து துறை பஸ் முன்னாடி சென்றால் மொத்தத்தையும் அவர்கள் ஏற்றி சென்று விடுவார்கள். பின்னால் வருகிற பஸ்சில் பயணிகள் ஏற மாட்டார்கள். நிறைய டெக்னிக் உள்ளது.

பஸ் விடுகிற எம்எல்ஏ

போக்குவரத்து துறை லாபம் உங்களுக்கு தான் கிடைக்கப் போகிறது. பொதுமக்கள் ஆன்மீக கடமையை ஆற்றுவதற்கு போக்குவரத்து துறை பெரிதும் உதவுகிறது. 84-ல் எனக்கு என்ன பெயர் என்றால் பஸ் விடுகிற எம்எல்ஏ என பெயர். தனியார் முதலாளிகள் எல்லாம் விரோதமாக இருந்த காலம். பீமாராப்பட்டி, ஆத்திப்பாடி போன்ற மலைப்பகுதியான இடங்களிலிருந்து சென்னைக்கு பஸ் விட்டேன்.

லாபத்தை தருகிறோமே, கார்ப்பரேஷனை தரக் கூடாதா?

84-இல் நான் எம்எல்ஏவாக இருந்தபோது அனைத்து ஊர்களுக்கும் பஸ் விட்டேன் அப்போது பஸ் விடுவதற்கு போக்குவரத்து துறை லாபகரமாக இருந்தது. சென்ற முறை நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு கணக்கெடுத்தேன்.  திருவண்ணாமலையில் இருந்து எத்தனை பஸ் இயக்கப்படுகிறது என்று கணக்கெடுத்தேன். முதல்வர் கலைஞரிடம் மனு கொடுத்தேன். எங்கள் ஊரில் இருப்பவர்கள் கண்டக்டர், டிரைவர் வேலைக்கு கூட வர முடியவில்லை. வேலூர் விழுப்புரம் போன்ற பகுதியிலிருந்து வருகிறார்கள். லாபத்தை தருவது எங்க ஊர். கண்டக்டர் டிரைவர் வேலை எங்களுக்கு கிடைக்கவில்லை என்று. இதையடுத்து திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலமாக மாற்றப்பட்டது.

See also  திருவண்ணாமலை:சாலை விபத்தை தடுக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

கல்லூரியில் 200 பஸ் உள்ளது

இன்றைக்கு விழுப்புரம் கார்ப்பரேஷன் லாபகரமாக இருக்கிறது என்று சொன்னால் அதில் திருவண்ணாமலை மாவட்டம் தான் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மண்டலத்தில் 560 பேருந்துகளில் 3000 பயணிகள் ஒரு நாளைக்கு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் அறக்கட்டளிலும் கல்லூரிக்காக 200 பஸ் இருக்கிறது. இதற்கு எவ்வளவு டீசல் ஆகிறது? டயர் தேய்மானம் என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

எங்களுக்கு ரயில் வசதி இல்லை. சென்னைக்கு விடப்படுகிற பஸ் எண் 122-வை மறக்க மாட்டோம்.  தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்ட மக்கள் பயன்பட்டு வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் இருந்தும் திருவண்ணாமலை மையமாக வைத்து பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாபத்தை தருகிற திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தனியாக ஒரு கார்ப்பரேஷன் உருவாக்கி தர வேண்டும். நிர்வாக இயக்குனர் விழுப்புரத்தில் இருக்கிறார். பொது மேலாளர் திருவண்ணாமலையில் இருக்கிறார். பொதுமேலாளருக்கு என்ன அதிகாரம்? நிர்வாக இயக்குனருக்கு என்ன அதிகாரம்? என்று தெரியும்.

அனுமதி வாங்கித் தருகிறேன்

திருவண்ணாமலையை போக்குவரத்து கார்ப்பரேஷனாக தரம் உயர்த்த  அரசுக்கு கூடுதல் நிதி என்று சொன்னால் நிதித்துறை செயலாளரிடம் இந்த கோப்புகள் எடுத்துச் செல்லும்போது உங்களோடு வந்து நானும் அனுமதி வாங்கி தருகிறேன். என்னால் முடியும். திருவண்ணாமலை மாவட்டம் என்று சொன்னால் தமிழக முதல்வர் உடனே கையெழுத்து இடுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, எம்.பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன், நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Link:http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!