Homeசெய்திகள்கலெக்டர் நடத்திய குறைதீர்வு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

கலெக்டர் நடத்திய குறைதீர்வு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அமைதிப்படுத்த முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் 33335 எக்டரிலும், சிறுதானியங்கள் 8048 எக்டரிலும், பயறுவகைகள் 4779 எக்டரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 29432 எக்டரிலும், கரும்பு 8316 எக்டரிலும் பயிரிடப்பட்டுள்ளது என்ற விபரம் வேளாண்மை இணை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கிடங்குகளில் நெல் 25271 மெட்ரிக் டன் சிறுதானியம் 13.18 மெ.டன், பயறுவகைகள் 49.41 மெ.டன், எண்ணெய்வித்து 324.70 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவையான உரங்கள் உள்ளது எனவும், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் சேர்த்து யூரியா 18255 மெ.டன், டிஏபி 3508 மெ.டன், பொட்டாஷ் 2259 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 708 மெ.டன், காம்ளெக்ஸ் உரம் 12709 மெ.டன் இருப்பில் உள்ளது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

See also  16 வயது சிறுமியை கடத்தியவர்களுக்கு தர்ம அடி

ஏரிகளையும், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் இரவு நேரத்தில் நடைபெறும் திருட்டை தடுக்க சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் வரப்புக்களை கட்டித்தர வேண்டும், பாம்புக்கடி விஷக்கடி மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைத்திட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

முன்னதாக வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை என விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் விவசாயி ஒருவர் கலெக்டரின் இருக்கை அருகே சென்று கையில் வைத்திருந்த பேப்பரை காட்டி ஆவேசமாக பேசினார். இதைப்பார்த்த திமுகவைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எதிரொலி மணியன், இருக்கையில் உட்கார சொல்லி அந்த விவசாயியை சட்டையை பிடித்தும், கையை பிடித்தும் இழுத்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

See also  கிராம சபை கூட்டத்தில் கலெக்டர்- கம்பன் பங்கேற்பு

அமைதியாக உட்காருங்கள் என எதிரொலி மணியன் மைக்கில் கூறி கொண்டே இருந்தார். ஆனால் இதை ஏற்காத விவசாயிகள் உங்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் பென்ஷன். எங்களுக்கு பென்ஷனா தராங்க, இது சட்டசபை இல்லை, உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது, அதிகாரிகள் செய்வார்கள், எங்களுக்கு செய்வார்களா? என எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.

அப்போது அங்கு வந்த போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தினார்கள். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில் விவசாயிகள் கூட்டத்தை ரத்து செய்து விடுவேன் என கலெக்டர் சொன்னதாக கூறி சில விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!