காசிக்கு அடுத்து பக்தர்கள் அதிகம் வரக்கூடிய ஸ்தலம் திருவண்ணாமலை. மாநகராட்சி ஆனதால் கோவைக்கு நிகராக நிதி கேட்கலாம் என கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சி அந்தஸ்தத்தில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான அரசாணை பிறக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 15ந் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதற்கான ஆணையை மேயர் நிர்மலா வேல்மாறனிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் நிர்மலா வேல்மாறன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜன் பேசினார்.
அவர் பேசியதாவது,
நகராட்சிக்கும், மாநகராட்சிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? பெயர் மட்டும் தான் வித்தியாசம் என்று சொல்வர். அப்படி கிடையாது. மாநகராட்சி என்பது முழுமையான ஒரு நிலை. ஒரு சிட்டி எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிட்டியில் என்னென்ன டெவலப்மெண்ட் இருக்க வேண்டும்? என்பதை எல்லாம் நிறைவாக கொண்டு வரக்கூடிய நிலை மாநகராட்சி.
வண்ணத்துப்பூச்சி மாதிரி
மாநகராட்சி என்பது வண்ணத்துப்பூச்சி மாதிரி. முதலில் சின்ன புழுவாக வரும். பிறகு குடம்பியில் இருந்து பட்டர்பிளையாக மாறும். இப்போது இப்பொழுது நாம் ஒரு பட்டர்பிளை ஸ்டேஜில் இருக்கிறோம். ஒரு முழுமையான தன்மைக்கு நாம் வந்து விட்டோம். நாம் இப்போது உலக வங்கியிடம் நேரடியாக நிதி வாங்கலாம்.
நகராட்சியாக இருக்கிற வரைக்கும் 134 நகராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பணத்தை பிரித்துக் கொடுப்பார்கள். மாநகராட்சி எனும் போது 25 மாநகராட்சிதான். கோயம்புத்தூர் மாநகராட்சி, பழமையான மாநகராட்சி. கோயமுத்தூர் மாநகராட்சிக்கு நிகராக நாமும் நிதி கேட்கலாம். மாநகராட்சி எனும் போது நேரடியாக நகராட்சி இயக்குனரின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடுகிறோம். இதன் மூலம் சிறிய குறைகள் என்றாலும் உடனடியாக தீர்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
திருவண்ணாமலைக்கு சிறப்பு
திருவண்ணாமலைக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். அதற்குண்டான தொகையை நாம் அரசிடம் கேட்டு பெறலாம். பழனி, திருச்செந்தூருக்கு வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் குறைவு. ஆனால் திருவண்ணாமலைக்கு வெளிநாட்டவர், வெளிமாநிலத்தார் வருகிறார்கள். இந்த சிறப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு அடுத்து காசியில் தான் அதிக அளவு கூட்டம் இருக்கும். தமிழகத்தில் திருவண்ணாமலை தான் இந்த சிறப்பை பெற்றிருக்கிறது.
திருவண்ணாமலைக்கு வருகிற பக்தர்களுக்கு சர்வீஸ் செய்வதற்கு தேவையான பிளானை தயாரித்து அதற்கு நிதி கேட்டு உலக வங்கியிடம் விண்ணப்பிக்கலாம் அல்லது தமிழக முதல்வர், செயலாளரிடம் நேரடியாக பேசலாம். இவ்வளவு ரோடு தேவைப்படுகிறது, பஸ் நிலையம் தேவைப்படுகிறது, குடிநீர் சப்ளை செய்ய வேண்டும், சுகாதார பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது, கழிவறை கட்ட வேண்டும், வாகனங்களை மாற்ற வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் கேட்கலாம்.
5 வருடத்தில் மாறும்
மக்களுக்கு இது தெரியாது, ஒரே நாளில் மாற்றம் வராது. ஒவ்வொன்றாக கேட்டு மாநகராட்சிக்கு நிறைய வசதிகள் வாய்ப்புகளை கேட்டு பெறலாம். ஐந்து வருடத்தில் மிகச்சிறந்த மாநகராட்சியாக திருவண்ணாமலை மாநகராட்சி உருவாகியிருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நகர திமுக செயலாளர் கார்த்திவேல்மாறன், மாநகராட்சி துணைத் தலைவர் ராஜாங்கம் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.