திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர், பக்தர்களிடம் அடாவடி பணம் வசூல் செய்வது குறித்து திருநங்கைகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். கோவிலின் பின்புறமுள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருநங்கை
திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவதை பயன்படுத்திக் கொண்டு சிலர் அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் புடவையை ஏந்தி கோயிலுக்கு நன்கொடை கேட்பவர்கள், யாசகம் கேட்கும் சாமியார்கள், பிச்சைகாரர்கள் என கிரிவலப்பாதை முழுக்க இவர்கள் நிறைந்திருப்பார்கள். குறிப்பாக தேரடித் தெருவில் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு எதிரில் பக்தர்கள் நடந்து செல்ல இடையூராக ரோட்டில் உட்கார்ந்து பிச்சை எடுப்பவர்களை அதிகம் பார்க்க முடியும்.
பயபக்தியுடன் கிரிவலம் வரும் பக்தர்களை திருநங்கைகள் வழிமடக்கி அவர்களிம் பணம் பறிப்பதும், பணம் கொடுக்காதவர்களை கையை பிடித்து இழுப்பதும், அவர்களது பாக்கெட்டுகளை செக் செய்வதும், எதிர்த்து பேசும் பெண் ஒருவரை குச்சியால் அடிப்பதுமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கலெக்டர் ஆய்வு
இதைப் பார்த்த பலர் திருநங்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கமெண்ட்டில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று அண்ணாமலையார் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ராஜகோபுரம் நுழைவு வாயிலில் கும்பலாக நின்று கொண்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட திருநங்கைகளை அழைத்து, இது போன்று பக்தர்களை வழி மறித்து இடையூறு செய்யக்கூடாது, இதனால் மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்றார்.
பாக்கெட்டில் கை வைப்பதா?
நீங்கள் மிரட்டுகிறீர்கள், பாக்கெட்டில் கை வைக்கறீர்கள் என்ற குற்றசாட்டு உள்ளது என்றார். அதற்கு திருநங்கைகள் நாங்கள் செய்ய மாட்டோம். வெளியூரிலிருந்து வருபவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றனர். இதுபோன்று செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.
கோயில் நுழைவு வாயிலில் கற்பூரம் ஏற்றுவதால் கூட்ட நெரிசல் மற்றும் மாசு ஏற்படுவதால் அங்கு கற்பூரம் ஏற்ற அனுமதிக்க கூடாது என கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு இடையூராக அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.
மேலும், கோவில் வளாகம் அருகே ஆதரவின்றி இருந்த முதியோர்களை காப்பகத்தில் சேர்க்குமாறு சமூக நலத்துறையினருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் பக்தர்களிடம் வழிப்பறி செய்யும் வகையில் நடந்து கொள்ளும் திருநங்கைகளை தனி போலீஸ் படை அமைத்து கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வீடியோவை காண…
https://www.facebook.com/share/r/UgsgYZsT4HBCfhMN/?mibextid=WooXLz