சாலை விரிவாக்கத்திற்காக திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோட்டில் இருந்த மயான கொள்ளைக்கு பெயர் பெற்ற கோயில் காம்பவுண்டு சுவரை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை 4 வழி சாலை அமைக்கப்படுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த சாலை விரிவாக்கத்திற்காக தேனிமலையில் கெங்கையம்மன் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் அருகில் இருந்த அரச மரங்கள் நேற்று அகற்றப்பட்டன.
தண்டராம்பட்டு ரோடு-மணலூர்பேட்டை ரோடு சந்திப்பில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் மயான கொள்ளை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இது 100 வருடங்களுக்கு மேற்பட்ட கோயிலாகும்.
மயான கொள்ளை அன்று அங்காள பரமேஸ்வரிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 18 கரங்களுடன் அம்மன் எழுந்தருளுவார். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்து பல்வேறு பொருட்களை சூறைவிடுவார்கள். இதே போல் சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறும்.
புகழ் பெற்ற இந்தக் கோயிலின் ஒரு பக்க சுற்றுச் சுவர் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் வருவதால் அதை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து 2 ஜே.சி.பி. இயந்திரங்களுடன் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அங்கு சென்றனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை கேள்விப்பட்டதும் கோயில் நிர்வாகிகள் வந்து அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான முடிவு ஏற்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் இன்று காலை கோயில் சுற்றுச்சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கோவில் மதில் சுவர் மீது இருந்த சாமி சிலைகள் அகற்றி கோயிலுக்குள் எடுத்து சென்று வைக்கப்பட்டது. அதன் பின் ஜேசிபி இயந்திரம் மூலம் சுற்றுச் சுவர், கோயில் கருவறைக்கு சேதம் ஏற்படா வண்ணம் அகற்றப்பட்டது.