திருவண்ணாமலையில் முதன்முதலாக 6 வழிச்சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது.
திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில், சின்னகடைத் தெருவில் உள்ள மத்திய பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் ஈசான்ய மைதானத்தில் பஸ் நிலையத்தை கட்ட எடுக்கப்பட்ட முடிவை திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர் எ.வ.வேலு, திண்டிவனம் ரோட்டில் டான்காப் என்ற எண்ணெய் பிழியும் ஆலை இயங்கி வந்த இடத்திற்கு மாற்றினார். அமைச்சர் தேர்வு செய்த இடம் சரியானதல்ல என்ற விமர்சனம் எழுந்தது.
நெரிசல் இன்றி போக்குவரத்து அமைய பஸ் நிலையத்துக்கு உரிய இடம் இதுதான். கண் தெரியாதவன் கூட சொல்லிவிடுவான் பஸ் நிலையத்துக்கு இதுதான் பொருத்தமான இடம் என்று, என அமைச்சர் எ.வ.வேலு விமர்சனத்திற்கு பதில் அளித்திருந்தார்.
30 தூண்களுடன், 666 மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் வருகிற ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையம், பாலத்திற்கு அடியில் இருப்பதை கவனத்தில் கொண்டு மேம்பாலத்திலிருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் இணைப்பு பாலம் கட்ட ஆலோசிக்கப்பட்டது. இதற்கு ரயில்வே துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டு பாலம் முடிவடையும் இடத்தில் ரவுண்டனா அமைத்து அதன் வழியாக பஸ்களை திருப்பி புதிய பஸ் நிலையத்திற்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சின்னகடைத் தெருவில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வர முத்துவிநாயகர் கோயில் தெருவில் கூடுதலாக ஒரு வழி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் என இரண்டு வழிதான் உள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல், பாலத்தின் மீது ஏறி சுற்றி வந்து பஸ் நிலையத்திற்கு வருவதால் கால விரயம் ஏற்படும் என போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் அருகிலிருந்து ரயில்வே நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் எக்ஸலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கீழ்நாச்சிப்பட்டு மேம்பாலம் வரை உள்ள 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெரிய நகரங்களில் இருப்பது போல் திருவண்ணாமலை நகரில் முதன்முதலாக பொதுமக்கள் பயன்படுத்த எக்ஸலேட்டர் நடைமேம்பாலம் மற்றும் 6 வழிச்சாலை அமைய உள்ளது.
6 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நெடுஞ்சாலையில் கோட்ட பொறியாளர் பி.ஞானவேல் மேற்பார்வையில், உதவி கோட்ட பொறியாளர் கே.அன்பரசு, உதவி பொறியாளர் சசிகுமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் இன்று தொடங்கினர்.
இப்பணி முடிந்தும் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. ஜனவரி மாதம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளதால் அதற்குள் இப்பணி முடிவடைந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.